காத்திருந்து காவு வாங்கிய ஸ்டெர்லைட்- துயரக்குடியான தூத்துக்குடி


திரும்பிய பக்கமெல்லாம் அழுகையும் கண்ணீருமாய் நிற்கிறார்கள் மக்கள். எந்த நேரத்தில் என்னநடக்குமோ என்று தெரியாத நிலை. ஒட்டுமொத்தமாக இணைய சேவையையும் முடக்கிப் போட்டிருப்பதால், தகவல் தொடர்புகளும் முற்றாக அறுந்துபோய்க்கிடக்கின்றன. மொத்தத்தில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் முழங்கிய போலீஸ் துப்பாக்கிக் குண்டுகள் தூத்துக்குடியைத் துயரக்குடியாக்கித் தவிக்கவிட்டிருக்கிறது!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, கலவரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான உயிர்களின் எண்ணிக்கை 13. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர் தூத்துக்குடி மக்கள். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ அறிவித்தது.

அ.குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாகப் போராட்டம் நடந்தும் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் ஏ.எஸ்.பிசெல்வநாகரத்தினன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுகூட போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்தும் வேலைகள்தான் நடந்தன. பேச்சுவார்த்தையின் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தைக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடத்தலாம் என யோசனை சொன்னார் ஏ.எஸ்.பி. இதை ஒரு பிரிவினர் ஏற்றாலும், பெரும்பகுதியினர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதில் குறியாக இருந்தனர்.

நாற்பது நாட்களுக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இடைக்கால தடைவிதித்துவிட்டது. ஆனால், இந்தத் தகவலை பொதுமக்கள் மத்தியில் அரசு அதிகாரிகள் முறையாகக் கொண்டு சேர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால், போராட்டம் இவ்வளவு உக்கிரமான நிலைக்கு வந்திருக்காது என்பதும் சிலரது கருத்தாய் இருக்கிறது. முகம் தெரியாத நபர்கள் குறிப்பிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஆங்காங்கே வன்முறையைத் தூண்டிவிட்டதாக போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் சொல்கிறார்கள். அதேபோல், போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய நபர்களைக் குறிவைத்து சுட்டது போலீஸ் என்ற தகவலும் மிரள வைக்கிறது. “தவிர்க்கமுடியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் முழங்காலுக்குக் கீழ்தான் சுடப்படவேண்டும் என்பதுதானே விதி... அப்படியிருக்க இடுப்புக்கு மேலே குறிவைத்தது ஏன்?” என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

x