சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன்


ஆறுமாசத்துக்கொருவாட்டி பாண்டி முனி கோயிலுக்கு நேந்து சடையா முடி சேந்திரும் பேச்சிக்கு. அப்படியே மண்டை மேல அதத் தூக்கி முடிஞ்சிருப்பா. எப்பவாச்சும் அத ஆட்டிவிட்டு ஓடறதுதா எனக்குப் பிடிச்ச வெளாட்டு. மொட்டை போட்டுட்டா, அது மேல சந்தனத்த அப்பி, ‘சில்லுன்னு’ நெத்திலயும் கை, கால்லயும் பூசிக்கிட்டு, எங்கிட்டதா மொதல்ல காமிக்க ஓடி வருவா.

சொரசொரங்கிற புது மொட்டத் தலைல, காஞ்சிருக்க சந்தனத்தத் தடவித் தடவி உதுத்துவிடுவேன். பேச்சி தலயக் கொடுத்துட்டுச் சொகமாக் கண்கெறங்கிக் காலாட்டிட்டு இருப்பா. வருசத்துக்கு ரெண்டு வாட்டி இப்டி மொட்டை போடறதால ‘மொட்டச்சி’னுதா பட்டப் பேரு. நா மட்டும்தா அவள எப்பவுமே ‘பேச்சி’னு கூப்பிடறதால அவளுக்கு எங்கூட ஒட்டுதல் சாஸ்தி.

பேச்சி பள்ளியோடத்துக்குச் சரியா சத்துணவு நேரத்துக்குதா வருவா. வெள்ளனயே கம்மாய்க்குத் துணி வெளுக்கப் போயிடுவா.

ஹெட்மாஸ்டர், பேச்சியோட அப்பா குருவனக் கூப்பிட்டுச் சொன்னாக்க, “நானா வேணாங்கேன் சாரு. அந்தக் கேணச்சிதா கழுதைங்களப் பத்திகிட்டுத் தொத்திக்கிட்டே ஓடியாருது”னு குருவன் அலுத்துக்குவாப்ல. “இவ போய்ப் பெஞ்சத் தேய்க்கலைன்னு ஆரு அழுகா அங்கன? எல்லாம் கையெழுத்து போட்டாக் காணும்”னு பேச்சியோட அம்மா சடச்சி நொடிச்சுக்குவா.

x