குஸ்தி கட்டும் குமாரு..!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.அண்மையில், அந்தப் பதவியை குமார் எம்.பி-யிடம்தந்துவிட்டு அவைத் தலைவரானார். தனது உடல்நிலையைக் காரணம்காட்டி நடராஜன் குமாருக்கு வழிவிட்டதாகவும், “நீங்க சொல்றபடியே நடந்துக்கிறேன்” என்று குமார் சொன்னதாகவும் அப்போது பேச்சு. ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதாம். நடராஜன் எது சொன்னாலும் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ ஸ்டைலில் கிடப்பில் வைக்கும் குமார், ஏற்கெனவே, சத்துணவு உள்ளிட்ட பணிகளுக்காக நடராஜன் செய்திருந்த சில சிபாரிசுகளையும் கேன்சல் செய்துவிட்டு அந்த இடங்களுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க அழுத்தம் கொடுக்கிறாராம். இதையெல்லாம் முதல்வரிடம் சொல்லி முகம் சிவந்திருக்கிறாராம் அமைச்சர்.
அம்மா குடிநீருக்கு ஆபத்து!
ஜெயலலிதா காலத்தில் அமர்க்களமாய் ஆரம்பிக்கப்பட்ட அம்மா குடி நீர் திட்டத்துக்கு ஓசையின்றி மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அம்மா குடி நீர் பாட்டில்கள் சென்னையிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு முக்கியப் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழகத்தினரால் விற்கப்படுகின்றன. அண்மைக் காலமாகப் பெரும்பாலான இடங்களில் அம்மா குடிநீர் பாட்டில்களைப் பார்க்கப் முடியவில்லை. பணியாளர் பற்றாக்குறை என்று சொல்லி போக்குவரத்துக் கழகங்களே இந்தத் திட்டத்தை முடக்கி வருகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூர் பேருந்து நிலையத்திலேயே அம்மா குடிநீர் பாட்டில்களை அபூர்வமாகத்தான் பார்க்கமுடிகிறது!