அணைகளின் கொள்ளளவிலேயே பித்தலாட்டம் செய்கிறதா கர்நாடகம்?- மர்மங்களை உடைக்கிறார்  வியன்னரசு


தமிழகத்துக்கு இந்த மே மாதத்துக்கான தண்ணீர் நான்கு டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசு, ‘கர்நாடகத்திடம் ஒன்பது டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது; அது குடிநீருக்கே போதாது. எனவே, தண்ணீர் திறந்துவிட முடியாது’ என்று சொல்லியிருக்கிறது. பதிலுக்கு தமிழக அரசோ, ‘கர்நாடக அரசு பொய் சொல்கிறது. அங்கு 19 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது’ என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

இப்படி இருதரப்பும் மாறி மாறிப் பேசிவரும் நிலையில்தான் கடந்த வாரம் கர்நாடகத்தில் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ள அணைகளின் அத்தனை முக்கியப் பகுதிகளுக்குள்ளேயும் ரகசியமாகச் சென்று தண்ணீர் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி வந்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியன்னரசு. இதுகுறித்து அவரிடம் பேசியதிலிருந்து...

 “கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையைத் தவிர மற்ற அணைகள் அனைத்தும் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதிகள். தமிழகத்தின் முதலமைச்சர் நினைத்தால்கூட அங்கு நுழைய முடியாது. காரணம், அணையின் கொள்ளளவு, நீர்ப்பிடிப்பு பகுதிகள், பாசனப் பரப்புகளுக்கு வெளியேற்றும் தண்ணீரின் அளவு, நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு என அத்தனை தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்கிறது கர்நாடக அரசு. அணைகளின் கல்வெட்டுகளில் பதித்து வைத்திருக்கும் கொள் ளளவு உள்ளிட்ட தகவல்களும் குறைத்தே காட்டப் பட்டிருக்கின்றன. கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் துறையின் உயர் அதிகாரிகளுக்கு இவை அனைத்தும் வெளிப்படையாகவே தெரியும்.

இதுகுறித்து அறிய கடந்த வாரம் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய அணைகளின் உள் பிரதேசங்கள் தொடங்கி அந்த ஆறுகளின் வழித் தடங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் வரை ரகசியப் பயணம் மேற்கொண்டேன். தமிழகத்தின் நியாயங் களைப் புரிந்துகொண்ட நடுநிலையான சில கன்னட நண்பர்களின் உதவியால், இது சாத்தியமானது. முதலில் சென்றது ஹேரங்கி அணைக்குத்தான். அங்கு தண்ணீர் இல்லை. முழுமையாகக் காய்ந்து கிடக்கிறது. அதேசமயம் ஹேரங்கி அணையின் அதிகாரபூர்வமான கொள்ளளவாக கர்நாடகம் 6 டி.எம்.சி-யை மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால், அங்குள்ள பொறியாளர்கள் உதவியுடன் விசாரித் ததில், அந்த அணையின் உண்மையான கொள்ளளவு 8 டி.எம்.சி. என்றார்கள்.

x