தாவோ: பாதை புதிது - 13


ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு குட்டிக்கதைகள். ஜென் பவுத்தத்தைக் கற்றுக்கொண்டு தன் அறிவை மேலும் முழுமையடையச் செய்ய வேண்டும் என்ற ஆசையில், ஒரு ஜென் துறவியிடம் அறிஞர் ஒருவர் வருகிறார். அவரை வரவேற்கும் துறவி, “காபி வேண்டுமா, தேநீர் வேண்டுமா?” என்று கேட்கிறார். அறிஞர் காபியையே தேர்வு செய்கிறார். உடனே, துறவி காபி கொண்டுவரும்படி தன் சிஷ்யரிடம் கேட்டுக்கொள்கிறார். சிஷ்யர் ஒரு கோப்பை நிறைய காபியைக் கொண்டுவந்து மேசையில் வைக்கிறார்.

கூடவே, காபி கூஜாவையும் அருகில் வைக்கிறார். கூஜாவை எடுக்கும் துறவி ஏற்கெனவே நிரம்பியிருக்கும் கோப்பையில் காபியை ஊற்ற ஆரம்பிக்கிறார். கோப்பையிலிருந்து காபி வழிய ஆரம்பிக்கிறது. அறிஞர் பதறிப்போகிறார். “கோப்பை ஏற்கெனவே நிரம்பியிருக்கிறது துறவி அவர்களே” என்கிறார் அறிஞர். “ஆமாம், ஏற்கெனவே நிரம்பிய கோப்பையில் மேலும் காபி ஊற்ற முடியாதுதான். ஆகவே, காலி கோப்பையைக் கொண்டுவாருங்கள்!” என்று அறிஞரிடம் கூறுகிறார் துறவி. வெட்கித் தலைகுனிந்தபடியே அங்கிருந்து வெளியேறுகிறார் அறிஞர்.

இன்னொரு கதை...

ஒரு ஊரில் கோழி தின்னும் போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது. அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெருந்தீனிக்காரர்கள் என்றும் பயில்வான்கள் என்றும் பெயர் பெற்ற இருவர், அந்தப் போட்டிக்குப் பெயர் கொடுக்கிறார்கள். ஒருவரின் பெயர் சங் சீ. இன்னொருவரின் பெயர் ஆங் சீ. அந்த இருவரும் பெயர் கொடுத்தவுடன் அந்த ஊரில் உள்ள மற்றவர்களெல்லாம் பயந்துபோய், போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார்கள். ஆக, சங் சீ வென்றாக வேண்டும், இல்லையென்றால் ஆங் சீ வென்றாக வேண்டும். இருவருக்கிடையேயும்தான் போட்டி என்பதால், இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் ஆசையுடனும் அதே நேரத்தில் அச்சத்துடனும் இருந்தார்கள்.

போட்டிக்குப் பெயர் கொடுக்க வேண்டிய கடைசி நாள் அன்று இன்னொருவரும் பெயர் கொடுக்க வந்தார். அவர் பெயர் யாங் டுவா. அவரின் தோற்றத்தைப் பார்த்து ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. குச்சி போன்ற கால்கள், ஒட்டிய வயிறு, குழி விழுந்த கன்னம். அந்த ஊரின் ஏழைக் குடியானவர்களில் ஒருவர் யாங் டுவா. எனினும் ஒரு போட்டி என்றால் வேடிக்கையும் இருக்க வேண்டுமல்லவா என்று அவரது பெயரையும் சேர்த்துக்கொள்கிறார்கள். போட்டி நெருங்க நெருங்க பயில்வான்கள் இருவரின் மூர்க்கமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. போட்டி குறைவு என்பதால், நிச்சயம் வெற்றி நமக்குத்தான்; அதற்கு, எதிரியைவிட மாறுபட்ட உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று இருவரும் ரகசியமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

சங் சீ போட்டி நடக்கும் நாள் நெருங்க நெருங்க தினமும் மூன்று வேளைகளையும் கோழிக் கறியை மட்டுமே உணவாகஉண்டார். ஆங் சீ கொஞ்சம் வித்தியாசமானவர், பசியைத் தூண்டிக்கொண்டே இருந்தால்தான், அதிகக் கோழியைத் தின்ன முடியும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டுவந்தார். போட்டி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு உணவைச் சுத்தமாக நிறுத்திக்கொண்டார்.

யாங் டுவா என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? அவரிடம் எந்த மாற்றமுமில்லை. தினசரி அவருக்குக் கிடைக்கும் சொற்ப உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக்கொண்டுவந்தார்.

போட்டி நாள்! பயில்வான்கள் இருவரும் மிகுந்த ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் வருகிறார்கள். யாங் டுவாவோ என்ன நடந்தாலும் சரி என்ற எண்ணத்தில் வருகிறார். வறுத்த கோழிகளை அவர்கள் முன்னால் கொண்டுவந்து வைக்கிறார்கள். சங் சீ தின்ன ஆரம்பிக்கிறார். அவரால் இரண்டு கோழிகளுக்கு மேல் தின்ன முடியவில்லை. தினமும் கோழி மேல் கோழியாகத் தின்று தின்று ஒருவகையாக அவரது கோழி தின்னும் திறன் ஸ்தம்பித்துவிட்டது. ஆங் சீ தின்ன ஆரம்பிக்கிறார். ஒரு கோழியைக் கூட அவரால் தின்று முடிக்க முடியவில்லை. சாப்பிடாமல் இருந்து இருந்து அவரது வயிறு ஒட்டிப்போய்விட்டது. அதுவரை முழுக் கோழியைத் தின்றிருக்காத யாங் டுவா இறங்கி விளையாட ஆரம்பிக்கிறார். நான்கு கோழிகளைத் தின்று வெற்றி பெறுகிறார்.

தாவோவைப் பற்றி லாவோ ட்சு கூறும்போது அதை முழுமையான ஒன்று என்றுகூறுவதில்லை. முழுமை என்றால் அது முடிந்துபோய்விட்டது என்றும் இறந்துபோய்விட்டது என்றும் அர்த்தமாகிவிடும். தாவோ முழுமையானதோ, நிறைந்து காணப்படுவதோ அல்ல. அது சாத்தியங்கள் நிரம்பிய வெறுமை, அல்லது வெற்றிடம்.

முழுமை என்பதற்கு மாற்றாக ‘ஒட்டுமொத்தம்’ என்பதை ஓஷோ முன்வைப்பார். “லாவோ ட்சு முழுமையானவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால், ஒட்டுமொத்தமானவர். நான் சொல்லும் இந்த இரண்டு விஷயங்களையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; முழுமையாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் முயலாதீர்கள். ஒட்டுமொத்தமாக இருப்பதற்கு முயலுங்கள். தாவோ எப்போதுமே முழுமையற்றது, ஏனெனில் அது உயிருள்ளது. முழுமை எப்போதுமே உயிரற்றது. அதாவது முழுமையை எட்டிய எதுவும் செத்துப்போய்விடும்… முழுமையை அடைந்த ஒன்றால், அதன் பிறகு எப்படி உயிர்ப்போடு இருக்க முடியும்? அதற்குப் பிறகு வாழ்வதற்கான தேவையும் அதற்கு இல்லை. அது இருத்தலின் மற்றுமொரு பாகத்தைப் புறக்கணித்துவிட்டது. வாழ்க்கை என்பது எதிரெதிர்

துருவங்களின் உறவுக்கிடையில்தான், அவற்றின் சந்திப்பால்

தான் இயங்குகிறது. எதிர் துருவத்தை மறுத்தால், நீங்கள் முழுமை

யாக ஆகலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக ஆக முடியாது.”

தாவோ என்ற ஒட்டுமொத்தத்தில் நன்மை-தீமை, முழுமை-முழுமையின்மை, அழகு-விகாரம் என்ற எல்லா எதிரிடைகளும் அடங்கியிருக்கின்றன. இந்த எதிரெதிர் விஷயங்கள் வெறுமனே எதிரெதிர் விஷயங்களாக அதற்குள்ளே அடங்கியிராமல் அவற்றுக்குள்ளே ஒரு உறவு ஏற்படுகிறது. அதனால்தான் இந்தப் பிரபஞ்சத்தில் ஆரம்பித்து கணினி வரை எல்லாமே இயங்குகின்றன.

முழுமை என்பது ஒரு குறிப்பிட்ட பண்போ, பொருளோ மட்டும் ஒன்றில் முழுவதுமாக நிறைந்திருக்கிறது என்று பொருள்படும். அதில் குறையோ குறைவோ ஏதுமிருக்காது. ‘ஒட்டுமொத்தம்’ என்பதில் வாழ்வின் ஊடாட்டத்துக்குத் தேவையான, ஒன்றுக்கொன்று எதிரான அனைத்தும் அடங்கியிருக்கும். அதில் குறைகளுக்கும் குறைவுக்கும் முக்கிய இடம் உண்டு. நாம் எல்லோரும் சொல்லும் முழுமையுடன் ‘ஒட்டுமொத்தம்’ என்பதை வேறுபடுத்தி ‘உன்னத முழுமை’ என்ற சொல்லில் அழைக்கிறார் லாவோ ட்சு.

இதனால்தான், உண்மையான தாவோ ஞானியை நாம் சந்திக்கும்போது, அவர் ஞானியைப் போலவே நமக்குத் தெரிய மாட்டார். ஒரு விவசாயியைப் போலவோ, ஆடு மேய்ப்பவரைப் போலவோ, குமாஸ்தா வேலை பார்ப்பவரைப் போலவோ நமக்குத் தென்படுவார். ஏனெனில் அவர் முழுமையானவர் அல்ல. அவர் முழுமையானவராக இருந்தால் ஒரு துறவியைப் போலத் தனித்துத் தெரிந்திருப்பார்; தனியே நடந்திருப்பார். தாவோ ஞானியோ நம்மில் ஒருவராக நடப்பவர்.

முதல் கதையில் ஜென் துறவியிடம் அறிஞர் வந்தது தன் அறிவை நிரப்பிக்கொள்ள; அதாவது அறிவில் முழுமையடைய. முழுமையடையும் அறிவால் எந்தப் பயனுமில்லை என்று அவருக்குத் துறவி காட்டிவிடுகிறார். இரண்டாவது கதையில் இரண்டு பயில்வான்களும் எதிரெதிர் திசையில் அதீதத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். மிதத்தைப் பின்பற்றும் நோஞ்சான் இறுதியில் வெற்றி பெறுகிறார். முதலாமவர் சாத்தியங்களை முழுமையாக அடைத்துவிட்டார், இரண்டாமவர் சாத்தியங்களை வற்றவைத்துவிட்டார். சாத்தியங்களுக்கு மிதமான தீனி போட்டு வைத்திருந்த மூன்றாமவர் வெற்றிபெற்றார். அந்த மூன்றாமவர்தான் தாவோ மனிதர்! சாத்தியங்கள்தான் தாவோவின் ‘உன்னத

முழுமை’!

-ஆசை

அதிகாரம் 45

உன்னதப் பூரணத்துவம்

பூரணமற்றதாகத் தோன்றுகிறது;

என்றாலும் உன்னதப் பூரணத்துவத்தின் பயன்

அழிவில்லாமல் நீடிக்கிறது.

உன்னத முழுமை

காலியாகத் தோன்றுகிறது;

என்றாலும், உன்னத முழுமையின் பயன்

தீர்ந்துவிடாமல் நீடிக்கிறது.

உன்னத நேர்தன்மை

கோணலாகத் தோன்றுகிறது;

உன்னத லாவகம்

இசகுபிசகாகத் தோன்றுகிறது;

உன்னதப் பேச்சாற்றல்

திக்குவதாகத் தோன்றுகிறது.

செயல்படுதல்

குளிரை வெற்றிகொள்கிறது;

சலனமின்மை

வெப்பத்தை வெற்றிகொள்கிறது.

தூய்மையையும்

சலனமின்மையையும் கொண்டே

இந்த உலகத்தை ஆள முடியும்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி

லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

(உண்மை அழைக்கும்...)

x