எழுத்துச் சித்தரின் இறுதி நிமிடங்கள்... விடைபெறுகிறேன்


“நாளைக்கி டிஸ்சார்ஜ் ஆயிடலாம் சார்’’ - கடந்த மே 13-ம் தேதி, காவேரி மருத்துவமனையின் டாக்டர்கள் சொன்னபோது, ஒரு குழந்தையைப் போல துள்ளிக் குதித்தார் எழுத்தாளர் பாலகுமாரன். அவர் எப்போதுமே குழந்தையின் குணங்களைக் கொண்டவர்தான்.

10-ம் தேதி, ஆஸ்பத்திரியில் அனுமதி. வழக்கம் போலவே நுரையீரல் தொற்று. மூச்சுவிடுவதில் ரொம்பவே சிரமம். மாஸ்க் எப்போதும் பொருத்தப்பட்டு, ஆக்ஸிஜன் செலுத்தவேண்டிய நிலை!

ஒவ்வொரு முறை மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம், நலம் பெறுகிற அதேநேரத்தில் கதையும் பண்ணுகிறவர் பாலகுமாரன் என்று எல்லோருக்கும் தெரியும். மருத்துவமனை என்றில்லை, அவர் எங்கு சென்றாலும் அந்தக் களம் கதையாகிவிடும். நோயின் தன்மை, மருந்தின் வீரியம், என்னென்ன சிகிச்சைகள், என்னென்ன செய்யும், எதையெல்லாம் தாக்கும் என்பதை டாக்டர்களிடம் கேட்டுக்கேட்டு வாங்குவார்.

சமீபமாக, சிறுகதை எழுதுவது குறைந்துவிட்டது. என்றாலும்கூட நோய், மருந்து, வலி குறித்தெல்லாம் தன் முகநூலில் விரிவாகவே பதிவிட்டுவிடுவார். ஆனால், இந்த முறை அப்படியில்லை. எதுவும் இயலவில்லை. வலியின் தாக்கமும் மூச்சின் தடைகளும் அவரை அயர்ச்சிப்படுத்தியிருந்தன.

x