ஆந்திராவின்  நர்கீஸ்!


“சாவித்திரியைப் பற்றி எனக்குத்தான் அதிகமாகத் தெரியும். என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையைப் படமாக்குவது வேதனையாக இருக்கிறது. சாவித்திரியாக நடிப்பவருக்குத் தெலுங்கு தெரியாது. சாவித்திரியின் தாய்மொழி தெரியாமல், அவரது கதாபாத்திரத்துக்குத் திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்?” என்று ‘மகா நடி’ படம் தயாரிப்பில் இருக்கும் போதே கேள்வி எழுப்பிய ஜமுனாவுக்கு இப்போது 81 வயது!

ஜமுனாவின் கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே சாவித்திரிக்கும் ஜமுனாவுக்கும் இடையிலான நட்பு தொடங்கிவிட்டது. இரண்டுபேருமே 1936-ல் பிறந்தவர்கள். கன்னடத்தைத் தாய்மொழியாக கொண்ட ஜமுனா பிறந்தது வட கர்நாடகத்தின் ஹம்பியில். வளர்ந்ததோ ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துக்கிராலாவில். ஜமுனாவின் அப்பா நிப்பானி சீனிவாச ராவ் மசாலா பொருள் வணிகத்துக்காக அந்த ஊரில் குடியேறினார். ஜமுனாவின் அம்மா கவுசல்யாதேவி கர்னாடக சங்கீதப் பாடகி. நாடக மேடைகளில் நடிகைகளுக்குப் பின்பாட்டு பாடுவதில் வல்லவர். சாவித்திரி நடித்த நாடகங்களுக்கும் ஜமுனாவின் அம்மா ஹார்மோனியம் இசைத்துப் பாடியிருக்கிறார்.

துக்கிராலாவுக்கு நாடகம் நடிக்க வந்தால், சாவித்திரி தங்குவது ஜமுனாவின் வீட்டில்தான். பின்னால் திரையில் நடிகையாக ஜொலிக்கத் தொடங்கிய பின்னரும், ஜமுனாவின் குடும்பத்தாருடன் மாறா நட்பில் சாவித்திரி இருந்தார். அம்மாவிடம் வாய்ப் பாட்டும் பின்னர் பரதமும் கற்றுக்கொண்டிருந்த ஜமுனாவின் அழகைக் கண்ட சாவித்திரி, “இவளை சினிமாவுக்கு அனுப்புங்கள்” என்றார். ஆனால், ஜமுனாவை டாக்டர் ஆக்கவேண்டும் என்று விரும்பினார் அவரது அப்பா.

அதற்காகத் தனது குடும்ப நண்பரான டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவ் என்பவரிடம் மகளை அழைத்துச் சென்று மருத்துவக் கல்விக்கு ஆலோசனை கேட்டார். டாக்டரோ, கலை ஆர்வம் மிக்கவர். ஜமுனாவின் அழகைக் கண்டு தனது ‘மா பூமி’ என்ற நாடகத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க வைத்தார். பின்னர் ஜமுனாவை ஒளிப்படங்கள் எடுத்து இந்திப்பட உலகில் ஒளிப்பதிவாளராகப் பெயர்பெற்று விளங்கிய தனது நண்பர் வி.என்.ரெட்டிக்கு அனுப்பிவைத்து, கைப்பட ஒரு கடிதமும் எழுதினார். அதில், “நான் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். அதில் இந்தப் பெண்ணைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமா?” என்று கேட்டு எழுதினார். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து ரெட்டியிடமிருந்து ஒரு தந்தி. அதில் ‘இந்தப் பெண் ஆந்திராவின் நர்கீஸ் என்று புகழ் பெறுவாள்’ என்று செய்தி அனுப்பியிருந்தார். தனது தேர்வு சரியாக இருந்ததை எண்ணி மகிழ்ந்த டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவ், ‘புட்டில்லூ’(1953) என்ற தெலுங்குப் படத்தில் ஜமுனாவை அறிமுகப்படுத்தினார்.

x