முடிவற்ற சாலை 2: நயாகராவின் சாரல்


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நயாகரா அருவியைக் காணச் சென்றிருந்தேன். எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களில் கண்டிருந்தபோதும், புகைப்படமாகப் பார்த்திருந்தபோதும் நேரில் காணப்போகிற ஆசை மனதை வெகு உற்சாகம் கொள்ளச் செய்திருந்தது. நயாகரா அருவி இரண்டு கிளைகள் கொண்டது. லாட வடிவ அருவி கனடாவில் உள்ளது. மற்றது அமெரிக்கப் பகுதியில். இரண்டின் இடையில் வானவில் பாலம் ஒன்றுள்ளது. நயாகராவைக் காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகின்றனர்.

நான் கனடா செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நிக் வலேண்டா என்ற சாகசக்காரர் நயாகரா அருவியின் மீது கயிற்றில் நடந்து காட்டி சாதனை செய்தார். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே, அது நயாகரா அருவியின் மீது நடப்பவர்களுக்குச் சரியாகப் பொருந்தும்.

நிக் வலேண்டா கயிற்றில் நடப்பதைக் காண்பதற்காகப் பல்லாயிரம் பேர் கனடாவில் குவிந்திருந்தார்கள். அவர் நீண்டகால பயிற்சிக்குப் பின்பு நயாகராவைக் கயிற்றில் கடக்கத் தேர்வு செய்திருந்தார். மிக நிதானமாக அவர் அருவியின் மீது நடந்து போவதைப் பின்னாளில் நான் இணையதளத்தில் பார்த்தேன்.

நயாகரா அருவியை நாம் தரையில் இருந்து பார்க்கிறோம். பலர் ஆகாய விமானத்திலிருந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், நிக் அதன் மீது நடந்து கடந்து பார்த்திருக்கிறார். இந்தச் சாதனையைச் செய்துமுடித்து அமெரிக்கப் பகுதிக்குள் சென்று இறங்கிய நிக் வலேண்டாவை உலகமே கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்கப் போலீஸ் மட்டும், உங்களிடம் முறையான விசா பாஸ்போர்ட் இருக்கிறதா எனச் சோதனை செய்தது. அவர் ஈரமான தனது மேல்கோட்டின் உள்ளிருந்து தனது பாஸ்போர்ட்டினை எடுத்துக்காட்டினார்.

இதுதான் யதார்த்தம்! மனிதர்கள் யாரும் செய்ய முடியாத சாதனையைக்கூட நீங்கள் செய்து முடித்துவிட முடியும். ஆனால், எளிதில் எல்லை தாண்டிப் போய்விட முடியாது. அதிலும் அமெரிக்கக் காவல்துறையின் கட்டுப்பாடு என்பது கெடுபிடியானது.

கனடா நாட்டிலுள்ள நயாகராவின் பகுதியில் வெள்ளொளிகளை அருவியின் இரண்டு பக்கத்தில் இருந்தும் பாய்ச்சுகிறார்கள். நள்ளிரவு வரை நீடிக்கும் இந்த வர்ணஜாலத்தைக் காண்பது பேரானந்தம். அகன்ற கைகளை விரித்தபடியே ஆர்ப்பரித்து விழும் அருவியினை நெருங்கிப் போகையில், சாரல் முகத்தில் அடிக்கிறது. காற்றின் வேகம் சாரலைத் துரத்தி விளையாடுகிறது.

தேனிலவிற்காக வந்துள்ள இளம் தம்பதி, ஒருவரோடு ஒருவர் அணைத்துக் கொண்டபடியே அருவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் இதுபோல அன்பெனும் அருவி இடைவிடாமல் கொட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்களோ என்னவோ! அருவியைப் பார்த்தபடியே அந்தப் பெண்ணை ஆண் முத்தமிடுகிறான். அருவி அதை வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டே, பாய்ந்து சிரித்து விழுகிறது.

அசுர வேகத்துடன் பாய்ந்து ஓடி வரும் நயாகரா ஆறு, விளையாட்டு காட்டுவது போலத்தான் விழுந்து அருவியாகிறதா?

பெரிய ஆறு எதுவும் ஓடாத விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். விருதுநகரில் ஓடும் கௌசிக மாநதி என்பது, இன்று அகன்ற சாக்கடை, அவ்வளவே. ஆற்றைக் கண்டது யாரு என்று எங்கள் கிராமத்து மக்கள் கேட்பார்கள். ஆறும் படித்துறையும் கோயிலும் இசையும் தஞ்சை, நெல்லை வட்டாரத்து மக்களுக்கே சொந்தம். நாங்கள் தண்ணீர் தண்ணீர் எனக் குடம் தூக்கி அலைந்தவர்கள். வானத்தின் கருணை மட்டுமே வாழ வைத்த பூமி. அதுவும் கோடையில் பொய்த்துப் போய்விடும்.

அம்மாவின் சொந்த ஊர் கோவில்பட்டி. விடுமுறை என்றால் எப்போதும் ஆச்சி வீட்டிற்குப் போய்விடுவேன். கோடை முழுவதும் கோவில்பட்டி தான். ஒருமுறை கோவில்பட்டியில் கடுமையான தண்ணீர் பஞ்சம். எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. நானும் நண்பன் குமாரும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் தகரக்குடத்தைக் கட்டிக்கொண்டு தண்ணீர் தேடி கரிசல் கிராமங்களை நோக்கி அலைந்தோம். எங்கும் வறண்ட கிணறுகள். வெடித்துப்போன நிலம். கடவுள் விடுகின்ற பெருமூச்சை போலக் காற்று வீசும் கரிசல் வெளி என்பார் கவிஞர் தேவதச்சன். உண்மை. கடவுளின் பெருமூச்சு கேட்கும் நிலமது.

அலைந்து சுற்றியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இளையரசனேந்தல் கிராமத்திலுள்ள ஒரு நல்ல தண்ணீர் கிணற்றில், தண்ணீர் இறைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களே வாளி - கயிறு தந்தார்கள். தண்ணீர் பிடித்த குடத்துடன் கோவில்பட்டிக்குள் நுழைந்தபோது, குமாரின் சைக்கிள் மண்ரோட்டில் தடுமாறி விழ, குடம் கவிழ்ந்து தண்ணீர்

மண்ணில் ஓடி மறைந்தது. குமார் ஒடும் தண்ணீரைப் பார்த்தபடியே ஓங்காரமாக அழுதான். கண்முன்னே தண்ணீர் மறைந்துபோய்க் கொண்டிருக்கிறதே... தடுக்க முடியாதே என்ற ஆதங்கம்! என்னால் அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

அவனது இரண்டு குடத்திலும் கையளவு தண்ணீரே மீதமிருந்தது. என் தண்ணீர்க் குடம் ஒன்றை அவனுக்குக் கொடுத்தேன். அப்படியும் அவன் சமாதானம் ஆகவில்லை. அதன்பிறகு அவன் எங்களுடன் தண்ணீர் பிடிக்க வரவேயில்லை. குமாரின் அழுகை நயாகரா முன்னால் நின்ற போது நினைவிற்கு வந்தது. அவனை நினைத்துக் கொண்டதும் கண்கள் கலங்கின. சாரலின் தெறிப்பில் கண்ணீர் மறைந்து போனது.

மழை பெய்யும் நாட்களில் ஊரே கூடி தண்ணீர் பிடிப்போம். அண்டா குண்டா எனச் சகல பாத்திரங்களிலும் மழைத்தண்ணீர் பிடித்துப் பாது

காப்போம். தண்ணீரைக் கண்டால் தங்கத்தைக் கண்டது போல வியக்கும் கரிசல்வாசிக்கு நயாகராவில் இவ்வளவு தண்ணீர், யாரும் பிடிக்காமல் வீணாகப் பாய்கிறதே என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.

என்னோடு வந்திருந்த கனடா செல்வம், இந்தத் தண்ணீரை மின் சக்தியாக மாற்றிவிடுவார்கள். பெரிய மின் உற்பத்தி நிலையம் உள்ளது எனச் சொன்னார்.

அருவி ஒரு உண்மையை உலகிற்குச் சொல்கிறது. வீழ்வதும் அழகு தான். அருவி வீணில் விழவில்லை. மற்றவர்களுக்குப் பயன்தரவே விழுகிறது. மனிதர்களைச் சந்தோஷப்படுத்த விழுகிறது. வீழ்ந்த இடத்தில் தேங்கிவிடுவதில்லை. தன் அடுத்த பயணத்தைத் துவங்கிவிடுகிறது. மலையின் கூந்தல்தான் அருவி என எப்போதோ எழுதியிருக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்ற எனது சிறுகதை சப்தமில்லாத அருவி ஒன்றைப் பற்றியது.

ஆர்ப்பரித்து விழும் நயாகரா அருவி சென்ற ஆண்டு பனியால் உறைந்து போனது. கனடாவின் அருங்காட்சியகம் ஒன்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நயாகரா அருவி முழுமையாக உறைந்து போய்விட்ட புகைப்படம் மற்றும் ஒவியத்தைக் கண்டேன். உறைந்துபோன அருவியின் அருகில் நின்று ஆட்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

அதைக் காணும் போது கொல்லப்பட்ட புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவே தோன்றியது. உறைந்து போன அருவியைக் காணும்போது, எல்லா ஆர்ப்பாட்டங்களும் ஏதோவொரு நாள் உறைந்து அடங்கிப் போய்விடும் என்றே தோன்றியது. இயற்கை நமக்கு எல்லா விதங்களிலும் கற்றுத் தருகிறது. நாம் தான் கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

சமீபத்தில் `சேசிங் நயாகரா’ என்ற ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். நயாகரா ஆற்றின் போக்கில் படகில் கூடவே பயணித்து அந்த அருவியின் மீது பாய்ந்து தாவும் முயற்சி பற்றியது. இதைச் சாத்தியப்படுத்த நினைக்கும் இளைஞர்கள், நயாகரா முன்னால் நின்றபடியே அதை வெறித்துப் பார்த்தபடியே தங்கள் திட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கு தவறிப்போய் விழுந்தால் மரணம் என்கிறான் ஒருவன். மற்றவன் அதைப் பற்றிக் கவலையே படவில்லை. தன் கனவிலேயே மூழ்கிக் கிடக்கிறான். மனிதர்களின் கனவு, எல்லாச் சாத்தியமின்மைகளையும் தாண்டியது. அடைய முடியாதவற்றை எப்படியாவது அடைய முயல்வதே மனிதன் செயல்பாடு. யாரால் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், மனிதர்களின் கனவு பெரியது. அவர்கள் அதை வென்றே தீருவார்கள். நயாகராவின் முன்னால் நானும் நண்பர்களும் நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டோம். புகைப்படத்தை விடவும் மனதில் அதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவே அதிகம் முயன்றேன். நயாகராவை பார்த்துவிட்டு வந்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் இதை எழுதும் தருணத்தில் அந்தச் சாரலின் தெறிப்பு என் முகத்தில் இருக்கிறது. ஈரத்தைக் கையால் துடைத்தபடியேதான் எழுதுகிறேன்.

தண்ணீரின் கருணை அளவற்றது. தண்ணீரைப் போற்றுகிறேன். தண்ணீரின் அருமை தெரியாத மனிதர்களை நினைத்து வருந்துகிறேன். தண்ணீரே உலகின் முடிவற்ற பயணி. அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. உலகிற்கு வழிகாட்டியபடியே மௌனமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

(பயணிக்கலாம்...)

x