குரங்கணி சித்தன் கதை - 10


ஆழி சூழ்ந்த மண்ணுலகம் வாழ

 சுவை, பார்வை, உணர்ச்சி, ஓசை, மணம்

 இவ்வைந்தும் அறியா மானிடரையும்

அறம், தர்மம், தவம், கர்மம், இங்கிதம்

 இவ்வைந்தும் தொடரா மானிடரையும்

வையம் சுமப்பது வீண்!

ஏதோ ஒரு தேனீ, பன்னெண்டு காத தூரத்துல இருக்கிற ஒரு தும்பைப்பூ தேனை, திசை அறிஞ்சு, மணம் அறிஞ்சு, சுவை அறிஞ்சு பறந்துபோய் உறிஞ்சிக்கொண்டு வந்து தேனடையில் சேர்த்து, பல காவதம் தூரத்துல இருக்கிற ஏதோ ஒரு அரசனோட சீக்கு சொஸ்தமாக அந்தத் தேன் பயன்படுற மாதிரி…

யாரோ ஒரு அரசன், துங்கபத்ரா நதிக்கரையில தவமிருந்து,  யாகம் பண்ணி, அச்சாரம் போட்டு, கமண்டலத்துல எடுத்துச் சேர்த்த தீர்த்தத் தண்ணி, கிருஷ்ண தேவராயரோட கர்ம சேனைகளால பாண்டிய நாட்டுக்குள்ள நுழஞ்சு, குரங்கணி சித்தனைத் தேடிப்போய், ஒரு இங்கிதத்தோட பொம்மியின் கருவை வளர்க்கப் போகுதுனு சொன்னா… அத விதின்னு தானே சொல்லணும்!

மதுரை தன்வசமான சந்தோஷம்...

நாகம நாயக்கர், அரச பண்டாரத்துக்குப் போய்ப் பார்த்தாரு… அடடா அடடா… சொர்ண அலங்கார நகைகளும், மரகத, கோமேதக, மாணிக்க மணிகளும், முத்து மாலைகளும் கண்ணைப் பறிச்சது! இவ்வளவுதானா..? அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ள ஆர்வமா நுழைஞ்ச நாகம நாயக்கர், விக்கி விறச்சுத்தான் போனாரு!

“அரியநாதரே..!பாண்டிய நாட்டில் இவ்வளவு நளினமான, வடிவமான பெண்களை வைத்துக்கொண்டு பாண்டிய மன்னர்கள் வேறு என்னதான் செய்வாங்க? ஊருக்கு ஒன்றாக அழகிகளைப் பொறுக்கி எடுத்து அந்தப்புரத்தை அழகுபடுத்துவதில் தான் காலந்தள்ளியிருப்பாங்களோ? நம்ம கிருஷ்ண தேவராயர் பாண்டிய  நாட்டுக்குள்ள  உலா போன சமயம், சாலை ஓரத்துல இருக்கிற ஆத்தையும், கோயிலையும் மட்டுமே பார்த்துட்டு ஊர் திரும்பிட்டாருன்னு நினைக்கிறேன். பாண்டிய நாட்டை ஆளணும்னு ஆசை அவருக்கு வராமல் போனதுக்குக் காரணம் இதுதானோ? இதோ, எனக்கு வந்துவிட்டதே... அரியநாதரே! ஊரும் உலகமும் அறியும்படி தண்டோரா போடுங்கள்... முரசு போடுங்கள்… நானே இந்தப் பாண்டிய நாட்டுக்கு மகா மண்டலேஸ்வரர். அரசாங்க அதிகாரிகளை அறிந்து புரிந்து நடக்கச் சொல்லுங்கள். ஹரிஹர கமண்டல தீர்த்தம் இனி என்கிட்டத்தான் இருக்கும். ஹம்பி நகரத்துக்குப் போகாது! சந்திரசேகர பாண்டியரைச் சிறையில போடுங்க..!” - நாகம நாயக்கர் தன்னோட பட்டாடைய வீசி சந்தோஷத்துல ஒரு சுத்து சுத்துனாரு.

அரியநாதர் அவரை வினோதமாப் பார்த்து, “ஆசைகளை  மட்டுப்படுத்துங்க மகாராசா. தேவராயரின் கட்டளைப்படி நடப்போம். கமண்டலத்தை ராயரிடம் ஒப்படைப்போம். ராயரின் கட்டளைப்படி நடப்போம். இல்லைனா, அவரோட கோபத்துக்கு ஆளாவோம். பாண்டிய குறுநில மன்னர்கள்கிட்ட கப்பம் பெற்று, ஹம்பி அரச பண்டாரத்தை நிரப்புவோம். ராயரிடம் நல்ல பெயர் வாங்குவோம் மகாராசா!”னு பணிவா சொன்னாரு.

“நானே மகாராசா…நான் யாரிடத்தில நல்ல பேர் வாங்கணும்? உங்களுக்கு இங்கே படை பரிபாலனஞ் செய்ய இஷ்டமில்லன்னா நீரும் விசுவநாதரும் ஹம்பிக்கே திரும்பலாம். நான் போடப்ப நாயக்கரை நியமனஞ் செய்துக்கறேன்!” னு நாகம நாயக்கரு சொல்லிட்டாரு.

பதவிகளையும் தாண்டி, நாகம நாயக்கரோட நல்ல நண்பராத்தான் இந்த அரியநாதர், விஜய நகரப் பேரரசுல அறியப்பட்டவரு. இதுக்குமேல அவமதிப்பைப் பொறுக்காத அரியநாதர், அரண்மனையை விட்டு வெளியேறி விசுவநாத நாயக்கரைக் கூட்டிக்கிட்டு, கிருஷ்ணதேவராயர் கிட்டயே புறப்பட்டுப் போயிட்டாரு.

இப்ப இவரு கதையைப் பார்ப்போம்...

பெரும்பிறவி பாண்டியனை விட்டுவச்சா, அவன் படை திரட்டி கலகம் பண்ணி கோட்டையைப் பிடிச்சுருவானோன்னு மனசுல கலவரமான நாகம நாயக்கர், “பெரும் பிறவி பாண்டியனோட தலையைக் கொண்டு வாங்க”ன்னு அரச சபையில சத்தமா கட்டளை போட்டாரு. நாட்டு மக்களுக்குப் பயத்தை உண்டாக்கணும்னு அப்படிச் சொன்னதுதான்.

ஆனா , போடப்ப நாயக்கரைத் தனியா கூப்பிட்ட நாகம நாயக்கர், “அவன் தலையை வச்சு என்ன செய்யப்போறோம்..? அவனோட கால் தடத்தையும், அவன் ஆண்ட அரிகேசரி நல்லூர் (சின்னமனூர்) வளத்தையும், ஒற்றர்களை அனுப்பிக் கவனிக்கச் சொல்லுங்க. அவன்கூட தப்பிச்சுப்போன சேனை வீரர்கள் ஒளிஞ்சிருந்து நம்மைத் தாக்கலாம்.

அடிபட்ட  எலி அதே வலைக்குள்ள ஓடி ஒளியாது. புது இடத்தைத் தேடித்தான் ஓடி ஒளியும். பெரும்பிறவி பாண்டியன் எங்க ஒளிஞ்சிருக்கான்னு துப்பு சொல்லச் சொல்லுங்க. துப்புச் சொல்றவனுக்குக் கழுத்துல சொர்ணமாலை போடுவோம்னு தண்டோரா போடலாம்!” வீராவேஷமா கட்டளை போட்டுக்கிட்டே போனாரு நாகம நாயக்கர்.

ரெண்டே நாள்ல அறிஞ்சு தெரிஞ்சு வந்தான் ஒரு ஓற்றன்: “மகாமண்டலேஸ்வரா..! பெரும்பிறவியாகப்பட்டவன் விவசாயிகளின் வருமானத்தில் பாதியை அபகரித்துக் கொள்ளும் குணமுடையவன். கோயிலில் பணியாற்றும் பெண்களைக்கூட தனது இச்சைக்கும் பயன்படுத்துபவனாக இருக் கிறான். மலையில் வாழும் ஆதி குடிகளைக் கடத்திக்கொண்டுவந்து, யானைகளைப் பழக்கப்படுத்தவும், செக்கடியில் எண்ணெய் ஆட்டவும், செங்கல் - சுண்ணாம்பு , சூளைகளில் பணி செய்யவும் அடிமைப்படுத்தி, கொடுமை செய்திருக்கிறான். கரடி, நரி, புலியைக்கூட காட்டுல இருந்து பிடிச்சுக்கொண்டுவந்து மக்கள்கிட்ட வேடிக்கை காட்ட பழக்கி இருக்கான்.

காட்டிலிருந்து அடிமையாய் பிடிச்சுக்கிட்டு வந்த ஆதிவாசிகளைப் போன வாரம்தான் விடுதலை செய்திருக்கான் மகாராசா. அவங்க எல்லாம் அகமலைக்கும், குரங்கணி மலைக் கும் போய்ச் சேர்ந்துட்டாங்க மகாராசா!”

“ஆஹா... பெரும்பிறவி பாண்டியன் எங்க ஒளிஞ்சிருப்பான்னு ஊகம் பண்ணிட்டேன். போடப்பரே…சேனையைத் தயார் செய்

யுங்க…சொல்றேன்!”னு உற்சாகமா சத்தம் போட்டாரு நாகம நாயக்கர்.

குரங்கணி மலையில, பெரும்பிறவி பாண்டியனுக்கும் மத்த நாலு பேருக்கும் தனித்தனி குடிசை தயாராச்சு. எதிரிகள் வந்தால், எப்படித் தப்பிக்கிறதுனு மாற்று வழியும் சொல்லித் தந்தான்.

அதே நேரத்தில, சித்தன் ரெம்ப நாளா போட்டிருந்த திட்டம் நிறைவேறப் போகுதுன்னு தனக்குள்ள நெனச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டான். அதுக்கு முன்னாடி சித்தனுக்கு அதிமுக்கியமான வேலை, பொம்மிக்கு சிசு உருவாக மூலிகை மருந்து தயாரிக்க ராத்திரி தயாராகணும்.

ராத்திரி நேரம் காட்டைக் கவ்விக்கிட்டு இருந்துச்சு.

பாண்டியன் தன் மனைவி மக்களை யாருக்கும் தெரியாம வீரபாண்டி கிராமத்தில விட்டுட்டுத்தான் மலை ஏறினான். தனக்கு ஏதோ நடக்கப் போகுதுனு, இப்போ பாண்டியனுக்கு மனசு கொல்ல ஆரம்பிச்சது.

புரண்டு புரண்டு படுத்தான்.

யாரோ குடிசையை நெருங்குற காலடிச் சத்தம்.

- சொல்றேன்...

-வடவீர பொன்னையா

x