காலா ஓடியதும் ரஜினியும் ஓடிவிடுவார்!- அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!


தினகரன், ரஜினி, கமல் தொடங்கி ஆடிட்டர் குருமூர்த்தி வரையில் எவரையும் விட்டுவைக்காமல் பட்டாசாக வெடிக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக ஆட்சியின் மீது வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களுக்கும் அதிமுக-வின் முகமாக பதில் தரும் இவர்,

“ ‘காலா’ திரைப்பட பாடல் வரிகள் சமூக அமைதியைக் குலைப்பதாக இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கொளுத்திப் போட்டிருப்பது ரஜினி ரசிகர்களை முகம் சிவக்க வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து..?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயக நாடு இது. ஆனால், அவர்களை அங்கீகாரம் செய்ய வேண்டியது மக்கள்தான். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவரை உசுப்பேற்றி விடுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அவர்கள் மூலம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எல்லோருமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எல்லோரும் அம்மா ஆகிவிட முடியாது. புரட்சித் தலைவர், அம்மா இவர்கள் எல்லாம் பல்லாண்டு காலம் நல்ல பல கொள்கைகளை சினிமாவில் புகுத்தி, மக்களின் மனதில் குடிகொண்டார்கள். ஆனால், ரஜினி சினிமாவை வியாபார நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டார். அதனால், நிச்சயம் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

x