பென்ஷன் வந்துருச்சுன்னு சொல்லு ராஜா..!- இளைஞர் தேசத்தில் முதியவர்களுக்கு இடமில்லையா?


உலகிலேயே இளைஞர்கள் அதிகம் வாழும் தேசம் இந்தியா. நமது நாட்டில் இளைஞர்கள் மட்டுமே சுமார் 36 கோடி பேர் இருக்கிறார்கள். இது சீனாவைக் காட்டிலும் அதிகம். நல்ல விஷயம்தான். ஆனால், இளமை ஊஞ்சலாடும் இதே தேசத்தில்தான், சுமார் 48 சதவீதம் முதியவர்கள் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையிலும் நோயின் கொடுமையிலும் வாடுகின்றனர். புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல… ஒவ்வோர் எண்ணுக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது… ஒரு வாழ்க்கை இருக்கிறது. அப்படியான ஒற்றை எண்ணுக்கான உயிருள்ள சாட்சி சொர்ணம்மாள்!

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பெண் உள்நோயாளிகள் வார்டு அது. கட்டிலில் படுத்தால் உருண்டு விழுந்து விடுவோம் என்கிற அச்சத்தில் தரையில் சுருண்டுகிடக்கிறார் சொர்ணம்மாள். கைகளில் கட்டு; சுயநினைவு பாதியளவே இருக்கிறது. வாயசைவின் மெல்லிய முணுமுணுப்பில் ஒருவேளை அவர் கடந்த கால வசந்தங்களை மீட்டுக்கொண்டிருக்கலாம். அவர் கதையை மருத்துவமனையின் பக்கத்து படுக்கைக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதில் மனம் மேலும் கனத்துப்போனது.

சொர்ணம்மாள் அருகே சென்று அமர்ந்தேன். ‘‘என்னப்பா முருகன் அனுப்பி வெச்சானா..?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்கிறார். தான் நேசிக்கும் உறவின் மீது அவ்வளவு நம்பிக்கை. இவ்வளவுக்கும் முருகன் இவர் வயிற்றில் சுமந்த மகன் அல்ல. மனதில் சுமந்த மகன். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சீனிவாசத்தின் மனைவிதான் சொர்ணம்மாள். மின்வாரியத்தில் ஃபோர்மேனாக இருந்த சீனிவாசம், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன் பின்பு சொர்ணம்மாளுக்கு, அவரது ஓய்வூதியம் கிடைக்கிறது.

இந்தத் தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. இதனால், கணவரின் மறைவுக்குப் பின்பு சொர்ணம்மாள், தனது சகோதரியின் மகன் முருகனுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் முருகன், சொர்ணம்மாளின் ஓய்வூதியத் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு அவரை கைவிட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில், திருச்செந்தூர் கோயிலில் ஆதரவற்ற நிலையில் பித்து பிடித்து, உடல் நலன் குன்றி கிடந்தவரை நாய்கள் கடித்துவைக்க, பக்தர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

x