சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்


செவலை

“கிணுங்கா... கிணுங்கா”னு ஊடாவுல இழுத்து இழுத்து மணிச்சத்தம் கேட்டாக்கச் செவலை வருதுன்னு அர்த்தம். செவலையோட பேரு கேசவன். “செவலை கணக்கா கொழுத்துப் போயிட்ட. அதே வீடு தங்க மாட்டேங்கிற”ங்கிற வசவக் கேட்டாலே மங்கை மாமி “கோயில் மாட்டக் கரிக்காதீங்கோ”ம்பா. மேலுக்குச் செவலையாட்டம்னு சடச்சுக்கிட்டாலும், எல்லாருக்கும் அதுமேல அம்புட்டுப் பிடித்தம்தா. முட்டாக்கும் நானும் சேக்காளிகளா ஆனது செவலையாலதா. செவலை பெருமாள்கோயில் மாடுங்கிறதால, ஊரே அதுமேல செல்லங் கொஞ்சும். நெனச்சாப்ல கண்ணு முழுச்சி, யார் வயக்காட்டுலயும் உரிமையா வவுத்துக்குத் தின்னுகிட்டு, எங்கனயும் ஒண்ணுக்கிருந்து சாணியப் போட்டுக்கிட்டு, சலாத்தலாச் சுத்தற “‘செவலை’யாய்ப் பொறக்கணும் செமதீ”ம்பா முட்டாக்கு.

முட்டாக்கோட ஊரு முடியனூரு. பள்ளியோடத் துக்குப் பொழுதன்னிக்கும் லேட்டாத்தா வருவா. கையில அடிவாங்கியே அதுக்குக் காச்சுப் போயிருக்கும். கண்ணுல சொட்டுத் தண்ணி வுடாம அடிய வாங்கிப் பாவாடைல கையத் தேச்சுக்கிட்டு ஒக்காந்துருவா. பாலரமணி டீச்சருக்கு இவளக் கண்டாலே ஆகாது. “வருஷம் முச்சூடும் அடிச்சாக்கூட அ, ஆவன்னாவக் கூட எழுதத் தெரியல. இதுல நெதமும் லேட்டு வேற”னு திட்டித் தீர்ப்பாப்ல. இவ மட்டும் என்னியப் பாத்தும் பாக்காமச் சிரிச்சுக்குவா அப்ப. “ஏன் முட்டாக்கு”னா குசுகுசுன்னு காதுக்குள்ள, “செவலையப் பாக்க வேணாமா. அதே”னுவா.

நா விடியமுன்ன எந்திருக்கவே மாட்டேன். ஆனாக்க, எப்ப எந்திருச்சாலும் ஒடனே மூஞ்சியக் கழுவிட்டு நேரா கோயில் திண்ணக்குத்தா போயி ‘செவலை’ய வேடிக்க பார்ப்பேன். கோயிலுக்கு முன்னால திண்ட ஒட்டி எதமான வெயிலுக்கு அரைத் தூக்கத்துல கெடக்கும். வால மட்டும் தன்னாக்குல அசச்சுக் கொசு அடிக்கும். அப்ப ‘செவலை’யோட மூஞ்சோட சேத்து முத்தங் கொடுக்கணும்னு ஆசயாயிருக்கும் ‘செவலை’ய உறங்கிறப்பதா கொஞ்ச முடியும். எந்திருச்சாச்சுன்னா, நெலயா நிக்க மாட்டான். அவனா கிட்டக்க வந்து மோந்து பாத்து, மடி ஒரசினாத்தா உண்டு.

x