ஹாட் லீக்ஸ்: பூட்டு உடைப்பும்... புரோகித் வருகையும்!


கல்லூரி மாணவிகளைத் தகாத வழிக்குத்திருப்ப முயன்ற நிர்மலா தேவி சிறையில் இருக்கையில், அவரது வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. நிர்மலாவின் வீட்டை போலீஸார் ஏற்கெனவே பூட்டி சீல்வைத்தனர். விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே சீல் உடைக்கப்பட்டு, வீட்டின் சாவி அவரது கணவர் சரவண பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் எழுப்புகிறது. “நான் அந்த வீட்டுக்குப் போய்வந்தபடிதான் இருக்கிறேன். அங்கு எதுவும் திருட்டுப் போனதாகத் தெரியவில்லை.

இருந்தாலும் நிர்மலா வந்து பார்த்துச் சொன்னால்தான், உறுதியாக எதையும் சொல்ல முடியும்” என்று போலீஸிடம் கூறியிருக்கிறார் சரவண பாண்டியன். பூட்டு உடைப்பு பற்றி போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சர்ச்சைகள் வட்டமடிக்கும் விருதுநகருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்து போனதும் பரபரப்புப் பேச்சாகியிருக்கிறது.

அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை!

தூத்துக்குடி மாவட்ட திமுகவைத் தன் கண் அசைவில் வைத்திருந்தவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி. அவரது மறைவுக்குப்பிறகு மாவட்ட திமுக-வில் ஏராளமான குறுநில மன்னர்கள் வாள்வீசுகிறார்கள். தூத்துக்குடி வடக்கிற்கு பெரியசாமியின் மகள் கீதா ஜீவனும், தெற்கிற்கு அனிதா ராதாகிருஷ்ணனும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். பெரியசாமி இருந்தவரை அனிதாவை அண்டிநின்ற முன்னாள் எம்.பி-யான ஜெயதுரை, இப்போது தனி ஆவர்த்தனம் செய்கிறார். ஏரலில் அண்மையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் போட்டார் அனிதா. அதற்குப் போட்டியாக அதே ஊரில் தனது தலைமையில் ஒரு கூட்டம் போட்டார் ஜெயதுரை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டத்தில் இருவருமே தனித்தனியாகப் போய் பேசினார்கள். அனிதா தன்னை ஒதுக்க ஆரம்பித்ததாலேயே ஜெயதுரை இப்படித் தனி அணி திரட்டுகிறாராம்!

x