பெரும்பிறவி பாண்டியன், அடைக்கலம் தேடி குரங்கணி மலைக்கு வர்றான்னு சொன்னா, அவனைவிடப் பெரும்படை அவனைத் துரத்துதுன்னு அர்த்தம். இல்லைன்னா, ஏதோவொரு திட்டத்தோட ‘அபய நாடகம்’ போடுறான்னு அர்த்தம்!
ஒரு அர்த்தத்தில் சித்தன் சிரிச்சான். அபயம் கேட்டு வர்றவனுக்கும், அபாயம் கொடுக்க வர்றவனுக்கும் வித்தியாசம் தெரிஞ்சவன் தான் இந்தச் சித்தன்.
‘‘சித்தா... எங்களை நம்பு... உண்மையில் நாங்க உங்கிட்ட அடைக்கலம் தேடித்தான் வந்திருக்கோம்!’’ பதற்றமாகக் கையைத் தூக்கிச் சொன்னான் நந்திச்சாமி.
‘‘காயம்பட்ட யானை என்னைப் பாக்குறதுக்கு முன்னாடி, துதிக்கையைத் தூக்கி நீளமா பிளிறும் சத்தம் கேட்டுச்சின்னா, அது என்னைத் தேடுற சத்தம்! நான் குடிசைக்குள்ள இருந்து வெளியே வந்த பிறகு, என் தலை தெரிஞ்சதும், துதிக் கையை முன்னே நீட்டி குன்னமா பிளிறும் சத்தம் குடுத்துச்சின்னா, அது அபயம் வேண்டி ‘தயை காட்டு’னு கெஞ்சுகிற சத்தம்! இதுதான் இயற்கையின் ரகசியம்!
நீங்க சமாதானத்துக்குத்தான் வர்றீங்கன்னு மொதல்ல நெனச்சேன். பக்கத்துல உங்க முக ரேகையையும், கண் ரேகையையும் பார்த்தால், உங்களவிட பெரியவன் ஒருத்தன் உங்களைத் தேடுறான்னு புரிஞ்சுக்கிட்டேன்... சரிதானே நந்திச்சாமி? நீங்க எத்தனை பேர் வந்திருக்கீங்க... என்ன நடந்துச்சு?’’
‘‘அஞ்சு பேர் சித்தா. மதுரையைச் சுத்தி நாயக்கர் படைகள் வளைச்சிருச்சு. எதிர்த்துச் சண்டை போட்டு அவங்கள துரத்தணும்னு எங்க படைகளோட சோழ வந்தான் போனோம். அங்க வைகை ஆத்துல கூடாரம் போட்டிருந்தாங்க. தூரத்துல இருந்து பார்த்தோம். கூடாரத்துக்குப் பக்கத்துல வெள்ளாடுகள் மேஞ்சுக்கிட்டிருந்துச்சு. ‘சகுனம் சரியில்லையே’ன்னு நெனச்சோம். அதேமாதிரி ஆகிப்போச்சு. திடீர்னு ரெண்டு பக்கமும் எங்கள வந்து மறிச்சு நின்ன குதிரைப் படைகள்கிட்ட திருநெல்வேலி, கயத்தாறு, வேணாடு படைகள் மாட்டிக்கிச்சு. நாங்க தப்பிச்சு, கிழக்குச்சீமைப் பக்கம் போறாமாதிரி போக்குக்காட்டி, காட்டுக்குள்ள மறைஞ்சு, மேற்கால திரும்பி குரங்கணி மலைக்கு ஓடிவந்தோம். நாயக்கர் படைல ஒவ்வொரு வீரனும், அகல சகலமா ஆறடி ஒசரம் இருக்கான்! குதிரையெல்லாம் யானை மாதிரியே இருக்கு. சிக்கினால் சிறையும் மரணமும் உறுதிதான். நாயக்கர்கள் பெரும்படையோட வந்திருக்கிறதைப் பார்த்தால், பாண்டிய நாட்டை அடிமையாக்க முடிவு பண்ணி வந்தமாதிரிதான் தெரிஞ்சது. அவுங்க நம்ம குரங்கணிக்காட்டைக் கண்டுபிடிச்சு வரணும்னா, ரொம்பக்காலம் ஆகும் சித்தா!’’
மெல்லச் சிரிச்ச சித்தன், ‘‘தவறா எடை போடாதீங்க... உங்களச் சுளுவா கண்டுபிடிச்சிறுவாங்க. எங்க பழங்குடி சனங்களை ஒண்ணும் செய்ய மாட்டங்க. உங்களுக்குத்தான் கத்தி கண் முன்னாடி தெரிஞ்சுக்கிட்டே இருக்கும். பரவா யில்லை... உங்க பெரும்பிறவி பாண்டியனைக் கூட்டிக்கிட்டு வாங்க’’னு சொன்ன சித்தன், யானைய ஒரு தடவத் திரும்பிப் பாத்துட்டு, குடிசைக்குள்ள போயி கொய்யாப்பழம், மாம்பழம் எல்லாம் கொட்டிவச்ச பழக்கூடையை எடுத்துவந்து அத்திமரத்துக்குக் கீழ காத்திருந்தான்.
பெரும்பிறவி பாண்டியன் களைப்போட ஏறிவந்து, சித்தன் முன்னாடி நின்னு, அவன் முகத்தை உத்துப் பார்த்தான்... ‘‘ரொம்ப நன்றி சித்தா... நீ எங்கிட்ட தூது வந்தப்பவே நான் சமாதானம் பேசியிருக்கணும். உங்களுக்குக் கோபம் வரும்படியா நடந்துக் கிட்டேன். மதுரைய ஆளணும்னு நெனச்சு நான் செஞ்ச தவறுதான் அது..!’’
‘‘உக்காந்து பேசுவோம்...’’னு பாறையைக் கைகாட்டின சித்தன், ‘‘எங்க பழங்குடி சனங்களை விடுதலை செஞ்சு அனுப்பினதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ராசா!’’
ஒரு கையால தன் கால்களை அமுக்கி விட்டுக்கிட்டே, மறு கையால பழங்களைக் கடிச்ச பாண்டியன், ‘‘இனிமேல் என் ஜீவனம் இந்தக் காடுதான்னு ஆகிப்போச்சு... வந்திருக்கிறது ராயரோடப் படைகள். எங்களையெல்லாம் கொல்லணும்னு ஒரு வெறியோட வந்திருக்காங்க. இல்லன்னா, அவ்வளவு குதிரை சேனை எதுக்கு?’’
பாண்டியனோட கண்ணுல உயிர்பயம் மிச்சம் இருந்துச்சு!
ஆகாசத்தப் பார்த்து, ‘‘பேராசைப்பட்டு உசுர உண்டாக்க ஆசைப்படுறோம். வாழும்போது உசுருக்குப் பயப்படுறோம்...’’னு சொன்ன சித்தன், பெரும்பிறவி பாண்டியனைப் பார்த்து, ‘‘இந்தக் காடு எங்க பழங்குடிகளோட ராஜ்ஜியம்... காட்டு ஜீவாத்தியங்களோட ராஜ்ஜியம். இங்க நீங்க வாழணும்னா, எங்க கோயில்ல வந்து ‘மெய்யுறுதி’ செய்யணும்!’’னு மலைமேல் இருந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டினான்.
குரங்கணி மலையில ஜீவனம் நடத்திக்கிட்டு இருக்கிற பழங்குடி முதுவர்களுக்கு முதுமரம் ஆலமரம். அந்த ஆலமரத்துக்கு அடியில கன்னி தெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டி வச்சிருக்காங்க. முதுவாக்குடின்னு சொன்னாலே, தன் இனத்துக்குச் சாவே இல்லைன்னு நம்புற முதுவர்கள், முதுமை அண்டாம எப்போதும் யவனத்தோட இருக்கணும்னு வரம் வாங்கி வந்த முதுவாக்குடி! (அந்த வரம் பெற்ற கதையை அப்புறம் சொல்றேன்.)
முதுவப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததும் ஊத்துத்தண்ணியில குளிப்பாட்டி, அந்த ஈரத்தோட கன்னிக் கோயிலுக்கு முன்னாடி கட்டாந்தரையில கிடத்தி, அந்தக் குழந்தையைச் சுத்தி சுண்ணாம்பு தண்ணியில ஒரு வட்டம் போடுவாங்க. பக்கத்து லயே குழந்தையைப் பெத்த தாயும் தந்தையும் சுண்ணாம்பு வட்டத்துக்குள்ள உக்காந்து ‘மெய் யுறுதி’ எடுத்துக்குவாங்க.
ஒரு முடிவுக்கு வந்த சித்தன், பாண்டியன்கூட வந்த நாலு பேரையும் கூட்டிக்கிட்டு ஆலமரக் கோயிலுக்குப் போய்ச்சேர்ந்தாங்க. அங்க வந்த பொம்மிகிட்ட சம்மதம் வாங்க, அம்புட்டுக் கதையையும் சித்தன்தான் விளக்கிச் சொல்ல ஆரம்பிச்சான். பாண்டியன் பொம்மியையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தான். ஏதோ ஒரு அபாயம் நம்மச் சுத்தி நடக்கப்போகுதுனு பொம்மி கலவரமா இருந்தாள்.
பெரும்பிறவி பாண்டியனையும் மத்த நாலு பேரையும், ஆலமரத்துக்கு அடியில தனித்தனியாக் கட்டாந்தரையில உக்கார வச்சாங்க. அவுங்களச் சுத்தி சுண்ணாம்பு வட்டம் போட்டாங்க. தலையில அரச இலையும் வேப்பம்பூவும் கலந்த உறுமா கட்டி விட்டாங்க. ஆளுக்கு ஒரு வில்லு கையில கொடுத்தாங்க. சித்தன் ஆரம்பிச்சான், ‘‘சுண்ணாம்புக் கோட்டைத் தொட்டுக்கிட்டு நான் சொல்றதை திரும்பச் சொல்லுங்க ராசா...
சூரியனுக்கும் சந்திரனுக்கும் மேல வீரமானவங்க நாங்க இல்ல. மழை எங்களுக்கு வானம் தந்த வரம்னு அறிவோம்.
ஊத்துத்தண்ணி, ஆத்துத்தண்ணி அமிர்தம்னு அறிவோம்.
மனசும் உடம்பும் அரணுன்னு அறிவோம்.
தேவைக்கன்றி, தேவைக்கு மீறி மரம் கொல்ல மாட்டோம்.
தேவைக்கன்றி, தேவைக்கு மீறிப் பசிக்காக விலங்கு, பறவை, நீர்வாழ் ஜீவாத்தியங்களைக் கொல்ல மாட்டோம்.
அரவு குணம் கொள்ள மாட்டோம்.
பழங்குடிப் பெண் அண்ட மாட்டோம்.
எங்க அரசாணி கன்னி தெய்வம் என அறிவோம்!”
மதுரையில சந்திரசேகர பாண்டியரைக் கூட்டிக்கிட்டு, மன்னர் நாகம நாயக்கர், இளவரசர் விசுவநாத நாயக்கர், போடப்ப நாயக்கர், படைத்தளபதி அரியநாதரோடு அரண்மனைக்குள்ள நொழஞ்சாங்க.
கூடியிருந்த சனங்ககிட்ட நாகம நாயக்கர், ‘‘ராஜ்யத்தை சந்திரசேகர பாண்டியர்கிட்ட ஒப்படைக்கிறேன். நாகம நாயக் கரான நானே மகாமண்டலேஸ்வரர். அரியநாத முதலியார்தான் தலைமை அமைச்சர். படைத்தளபதியும் அவரே!’’ன்னு அறிவிச்சார். (படைத்தளபதியும் அமைச்சரும் ஒருத்தரே பொறுப்பெடுத்து இருந்தா, அவங்க பேரு தளவாய்!)
நாகம்ம நாயக்கருக்கு ஒரு பேராசை எட்டிப்பார்த்துச்சு. மதுரையில மல்லிகப்பூ வச்சுக்கிட்ட வடிவான பொண்ணுங்க அவரோட மனச ஈர்த்துச்சு. காடு மலை நதிகளைப் பார்த்தாரு. மதுரைய விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நினைச்சாரு. சோழவந்தான்ல கோட்டைகட்டி வாழணும்னு ஆசை வந்திருச்சு. வைகை ஆத்துல பொங்கி வழியிற தண்ணியப் பாத்துட்டு, விவசாயத்தைத் தன் இனத்தைக் கொண்டுவந்து ஆக்கிரமிக் கணும்னு ஆசப்பட்டாரு. எதிரி யாராயிருந்தாலும் அவுங்கள ஒழிச்சுக் கட்டணும்னு முடிவு பண்ணினார்.
‘‘அரியநாதரே... நம்மகிட்டயிருந்து தப்பிச்சுப் போனானே, அவன் பேர் என்ன? அவனை விட்டுவச்சா நம்ம ராஜ்ஜியத்துக்கு ஆபத்து!’’
‘‘அவன் பேர் பெரும்பிறவி பாண்டியன். அவன் தலையக் கொண்டுவர்றதுக்கு போடப்பநாயக்கர அனுப்புவோம் மகாராசா!’’
- சொல்றேன்...
-வடவீர பொன்னையா