தாவோ: பாதை புதிது - 11


தாவோ தே ஜிங் நூலின் முதல் அதிகாரத்திலேயே தாவோ என்பது விளக்கப்பட முடியாதது என்று லாவோ ட்சு எழுதியிருப்பார். இன்னொரு பாடலில் ‘உள்ளார்ந்த, இயற்கையான அந்த விஷயத்துக்குப் பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பெயர் வைத்தே ஆக வேண்டுமென்றால் அதை தாவோ என்று அழைப்பேன்’ என்று அவர் கூறுகிறார். பெயரிடுவதற்கு, விளக்குவதற்கு லாவோ ட்சு தயங்குகிறார்.

இந்த உலகத்தில் வாழ்வதற்கு, நாம் எதிர்கொள்பவற்றையெல்லாம் அடையாளம் காண வேண்டும் என்பதால் பெயர்களும் பெயரிடலும் மிகவும் அவசியமானவை. “மீன்பிடி கூடைகள் எல்லாம் மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால், மீன் கிடைத்த பிறகு நாம் கூடையை விட்டுவிடுகிறோம். கருத்துகளைத் தெரியப்படுத்துவதற்காகச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால், கருத்துகள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டவுடன் சொற்களை நாம் விட்டுவிடுகிறோம்” என்று 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மற்றுமொரு தாவோ ஞானி சுவாங் ட்சு கூறியதை மீண்டும் ஒருமுறை நினைவுகூறலாம்.

ஆனால், சொற்கள், பெயரிடல் எல்லாம் மனித வசதிக்காகத்தான். நாம் எல்லாவற்றையும் மனிதரையும் மனித வசதியையும் கொண்டுதான் அளவிடுவோம். மனிதர்கள்தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இதுதான் பிரபஞ்சத்தின் மையம் என்று எந்த இடத்தையும் எதனையும் சொல்லிவிட முடியாது. அனைத்தும் பிரபஞ்சத்தின் மையம்தான். அதில் மனிதர்களும் உள்ளடக்கம். அவ்வளவுதான். அப்படி இருக்கும்போது ஒன்றுக்குப் பெயரிடுவதாலேயே அதை நாம் புரிந்துகொண்டுவிட்டோம், அல்லது அதை நாம் விளக்கிவிட்டோம் என்று எப்படி நினைக்க முடியும்?

எதையும் சொல்லிலோ பெயரிலோ வேறொரு அளவைக்குள்ளோ அடைத்து அளவிடுவதைவிட எதிரெதிர் துருவங்களுக்கிடையில் ஒரு சமனைக் காண்பது அவசியம் என்பார் ஓஷோ.

“எதிரெதிர் தன்மைகளுக்கிடையில் சமன் காண்பதைத்தொடர்ந்து பின்பற்றுங்கள். சமன் காணும் திறன் என்பது உங்களுக்குள் வெகு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளும். வெறுப்புக்கும் அன்புக்கும் இடையே எங்கேயோ அந்தச் சமனின் மையம் தென்படும். ‘எங்கேயோ’ என்று நான் சொன்னதற்குக் காரணம், அந்தப் புள்ளியைத் துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால்தான்; துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடியாத வகையில் அது அவ்வளவு உயிரோட்டமான ஒன்று. தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகள் பறப்பது போன்றது அது. சுதந்திரமாகப் பறந்துகொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்து அதை நகரவிடாமல் வைத்திருக்க நீங்கள் முயன்றால், அது இறந்துபோகும். நீங்கள் அதனைப் பிடித்து வைத்திருக்க முடியும், ஆனால், அதற்குப் பிறகு அது வண்ணத்துப்பூச்சியாக இருக்க முடியாது, அதன் உயிர் அதனை விட்டுப் பிரிந்திருக்கும்.”

வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவைப்பதுபோல் சொற்களாலும் நம் மனித மனதின் அளவீடுகளாலும் எதையும் பிடித்து அடைத்துவைக்க முயன்றால், அது தன் உயிர்ப்பை இழந்துபோகும் என்கிறது தாவோயிஸம்.

பெயரிடுவது, இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் விளக்குவதுஎன்பது ஒரு வகையில் மனிதன் இயற்கையின் மீது தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயல் என்று லாவோ ட்சு கருதுகிறார். “பார், அந்தப் பறவைக்கு ‘கொண்டலாத்தி’ என்று பெயர் வைத்திருக்கிறேன். அதற்கே தன் பெயர் தெரியாது. அந்த மரத்துக்கு மகிழ மரம் என்று பெயர் வைத்திருக்கிறேன். அதற்கும் தன் பெயர் தெரியாது. இந்தப் பிரபஞ்சத்தில் என் கண்ணுக்கும் கருத்துக்கும் அகப்படும் அத்தனைக்கும் நான் பெயரிடுவேன்” என்கிறார்கள் மனிதர்கள்.

பறவை பார்த்தலில் ஈடுபட ஆரம்பித்தபோது நான் எதிர்கொண்ட பெரிய சிக்கல், பல பறவைகளின் பெயர் தெரியாமல் இருப்பது. அப்படித்தான், ஒருமுறை மொட்டை மாடியில் அமர்ந்து பறவை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு பறவைகள் பக்கத்து வீட்டு மாடியில் வந்து அமர்ந்தன. சிட்டுக்குருவியை விடப் பெரியவை, மைனாவை விடச் சிறியவை. கரும் பச்சை, மஞ்சள், பசும் மஞ்சள், சிவப்பு என்று பல நிறங்களும் அவற்றின் உடலில் மிதந்துகொண்டிருந்தன. இளவெயிலில் அவற்றைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. எனினும், கண்கள் அந்தப் பறவைகளை நோட்டமிட்டாலும், மனதோ அவற்றின் பெயர் என்ன என்று ஊகிப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் அந்தப் பறவைகள் பறந்துபோய்விட்டன. மொட்டை மாடியிலிருந்து புறப்படும்வரை அவற்றை இடைவிடாமல் புகைப்படம் எடுத்தேன். அவை போன பிறகு, அந்தப் புகைப்படங்களைப் பறவையியலாளர் பானுமதிக்கு அனுப்பிக் கேட்டேன். அவர்தான் ‘குக்குறுவான்’ (coppersmith barbet) என்று எனக்குச் சொன்னார். பெயர் தெரிந்துவிட்டது, நிம்மதி. ஆனால், அந்தப் பறவைகளைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை, அதுவும் முதன்முதலாகப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை, அப்போது நான் தவற விட்டுவிட்டேன் என்ற உணர்வு, பிறகுதான் உறைத்தது.

காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவை ஒருமுறை நேர்காணல் எடுத்தேன். ``இயற்கை யுடன் இருக்கும்போது கேமராவெல்லாம் ஒரு இடையூறுதானே?’’ என்று அவரிடம் கேட்டேன். “உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன். பெரும்பாலான சமயங்களில் கேமராவை மறந்து இயற்கையில் திளைத்துக்கொண்டுதான் இருப்பேன். தவற விடக் கூடாத தருணங்களில் மட்டும்தான் கேமராவைக் கையில் எடுப்பேன். மற்ற நேரங்களில் எனக்குப் பக்கத்திலேயே வைத்திருப்பேன். காட்டுயிர்ப் புகைப்படக்காரராக இருப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் இடையே ஒரு சமரசத்தை மேற்கொண்டாக வேண்டும்” என்றார்.

கல்யாண் வர்மாவுக்கு கேமரா என்றால் நமக்குச் சொற்களும் பெயர்களும்! தலைக்கு மேலே நூற்றுக்கணக்கான பறவைகள், அவை நீர்க்காகங்களாக இருக்கலாம், கொக்குகளாக இருக்கலாம், நகரும் தலைகீழ் ‘V’ போல் பறந்துகொண்டிருக்கும்போது, கேமராவையும் பெயர்களையும் சொற்களையும் அந்தப் பக்கம் வைத்துவிட்டு அந்தப் பெயர்களைக் கண்கொட்டாமல் பார்ப்பதைவிட நமக்கு வேறு என்ன வேலை!

இயற்கையை விளக்கிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் அதில் விளக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத ஒரு நிலை வரும். அதுதான் இயற்கையின் அடிப்படையாகவும் இருக்கும். அதைத்தான் ‘தாவோ’ என்று லாவோ ட்சு தயக்கத்துடன் அழைக்கிறார். அந்தத் தாவோவை விளக்க முயற்சிப்பதைவிட அதன் போக்கில் அதனைக் கண்டுகொண்டு அதனைப் பயன்படுத்திக்கொள்பவர்தான் தாவோ மனிதர். ‘அதைக் கண்டுகொண்டு’ என்றால் அது வெளியில் இருக்கிறது என்று மட்டுமல்ல.

வெளியில் இருப்பதை உள்ளே இருப்பது கண்டுகொள்கிறது; வெளியும் உள்ளும் அதுவே என்று கண்டுகொள்கிறது என்பது தாவோயிஸத்தின் கருத்து. ‘தாவோயிஸம் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒற்றைத்தன்மையைக் கொடுப்பது போலவும், பன்மைத்தன்மைக்கு எதிரானது போலவும் தோன்றுகிறதே?’ என்ற ஐயம் பலருக்கும் வரலாம். தாவோயிஸம் எல்லாமே ஒன்றுதான் என்று கருதவில்லை. எல்லாவற்றிலும் ஒன்றின் தொடர்ச்சியைக் காண்கிறது. எதையும் வரையறைக்குள்ளே அடைத்து மற்றவற்றோடு தொடர்பற்றதாகக் கருதுவதைத்தான் தாவோயிஸம் எதிர்க்கிறது. ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்த ‘வானவில் தொடர்ச்சி’யை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

நான் ஒரு தமிழ் அகராதித் திட்டத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். சொற்களுக்கான விளக்கங்கள் எழுதும்போது, சில வகையான சொற்கள் எங்களுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தின. அறிவியல் துறைகள், சட்டம், மருத்துவம் போன்ற துறைகளின் கலைச்சொற்களுக்குத்தான் நாங்கள் அதிகம் சிரமப்பட்டிருப்போம் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், நாங்கள் அதிகம் சிரமப்பட்டது எளிமை யான சொற்களுக்கே.

ஏனெனில், கடினமான சொற்களுக்கெல்லாம் துறை சார்ந்தவர்களிடம் கேட்டும் துறை சார்ந்த நூல்களைப் பார்த்தும் அவற்றின் பொருளை வரையறை செய்து, எளிமையான சொற்களைக் கொண்டு அவற்றைத் துல்லியமாக விளக்கிவிட முடிந்தது. ஆனால், எந்த எளிமையான சொற்களைக் கொண்டு கடினமான சொற்களை விளக்குகிறோமோ, அந்த எளிமையான சொற்களை விளக்குவதுதான் மிகவும் கடினமாக இருந்தது. அவற்றைத் தாண்டி எளிமையான சொற்களென்று ஏதும் இல்லை. இது உலகெங்கும் அகராதியியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்தான்.

அதேபோல், இந்தப் பிரபஞ்சம் எதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ, எதனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றையும் விளக்கவும் புரிந்துகொள்ளவும் நாம் முயல்கிறோமோ, அந்த ஒன்றை விளக்கவே முடியாது; அதுதான் தாவோ என்கிறது தாவோயிஸம்.

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம்:32

தாவோ

எப்போதும் பெயரில்லாமல் இருந்தது.

முதல்முறையாக

தாவோ செயல்படுத்தப்பட்டபோது

அதற்குப் பெயரிடப்பட்டது.

பெயரிடுவது என்பதைப் பார்க்கும்போது

அதை எங்கே நிறுத்திக்கொள்வது என்று

ஒரு மனிதன் தெரிந்துகொள்ள வேண்டும்.

எங்கே நிறுத்திக்கொள்வது என்று

ஒருவன் தெரிந்துகொள்ளும்போது

அவன் அழிவற்றவன் ஆகிறான்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி

லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

x