நடனத்தால் ரசிகர்களை இழுத்த சரோஜா!


காமெடியனுக்கு ஜோடியாக நடித்துவிட்ட பெண்களை, தங்கள் ஜோடியாக்கிக்கொள்ளத் தயக்கம் காட்டிய கதாநாயகர்கள் உண்டு. ஈ.வி.சரோஜா இதில் விதிவிலக்கானவர். தனது நடனத் திறமையால் கதாநாயகர்களின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்தவர். கொடி போன்ற தோற்றம், குறும்பும் குறுகுறுப்பும் இழையோடும் கண்கள், நடனத்தில் மானை விஞ்சும் துள்ளல், தூய தமிழ் உச்சரிப்பு என மயக்கியவர். காண்போரை ஈர்க்கும் லய சுத்தமும், அங்க சுத்தமும் கொண்ட வழுவூர் பி.ராமைய்யா பிள்ளையின் நடன பாணிக்கு திரையில் பெருமை சேர்த்த அவரது வெகுசில மாணவிகளில் ஈ.வி.சரோஜாவுக்கு முதலிடம் கொடுத்துவிடலாம்.

சரோஜாவின் துள்ளல் நடனத்துக்கு ‘மதுரை வீரன்’ ஒன்றுபோதும். அந்தப் படத்தில் வேடனாக, மானைத் துரத்திக்கொண்டு வந்து அந்தப்புரத் தோட்டத்துக்குள் நுழைந்துவிடுவார் எம்.ஜி.ஆர். அவரை ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பார்த்துப் போங்க….’ என்று எள்ளலாகப் பாடியபடி மானைப்போலவே துள்ளிக் குதித்து சரோஜா ஆடிய ஆட்டம், ரசிகர்களுக்குக் கொண்டாட்டமானது. இதேபடத்தில் பானுமதி, பத்மினியின் நடனங்களும் இடம்பெற்றிருந்தாலும் ஈ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைச் சுண்டி இழுத்தது.

சரோஜா என்ற பெயர் கொண்ட பல நட்சத்திரங்கள் வலம் வந்த தமிழ்த் திரையில், இருபெரும் திலகங்கள் வளர்ந்துகொண்டிருந்த 50-களில்தான் ‘எண்கண்’ வேணுப்பிள்ளை சரோஜாவும் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் எம்.ஜி.ஆருக்குத் தங்கையாக. ‘என் தங்கை’ என்ற சோக நாடகத்தை நடத்தி, ‘என் தங்கை’ நடராஜன் என்றே புகழ்பெற்றிருந்தார் டி.எஸ்.நடராஜன். இவரது நாடகக் குழுவில் அப்போது சிவாஜி புகழ்பெற்ற நாயகன். ‘என் தங்கை’ நாடகத்தில் அவர்தான் அண்ணன். என் தங்கை நாடகம் திரைப்படமானபோது, ‘பாரசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்தார் சிவாஜி. அதனால், சிவாஜி நாடகத்தில் ஏற்ற கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆர் திரையில் ஏற்றார்.

எம்.ஜி.ஆரின் தங்கை போன்ற உருவ ஒற்றுமையும் நன்கு நடிக்கவும் தெரிந்த ஒரு சின்னப்பெண் தேவை என்று தேடியபோது வழுவூர் ராமைய்யா பிள்ளையின் குருகுலத்தில் கிடைத்தவர்தான் ஈ.வி.சரோஜா. எம்.ஜி.ஆருக்கு அற்புதமாக நடிக்கத் தெரியும் என்று திரையுலகுக்குத் தெரிவித்த முதல்படம். இதில் பார்வையற்ற பெண்ணாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிக்கொள்ளும் அபலையாக வாழ்ந்து, அறிமுகப் படத்திலேயே பரிதாபத்தையும் புகழையும் ஒருசேர அள்ளிக்கொண்டார் சரோஜா.

x