மொத நெல்லு... மொத நாத்து...- பயிர்த் தொழில் பழகு!


சேலையை உயர்த்திச் சொருகிக்கொண்டு சேற்றில் நின்று நெற்கதிர் பேணும் கிராமத்துப் பெண்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கே சுடிதார் பேன்ட்டை மடித்துச்சுருட்டி, துப்பட்டாவை தலையில் சுருட்டிக்கட்டிக்கொண்டு நாத்து நடுகிறார்கள். அத்தனை பேரும் கல்லூரி மாணவிகள். நட்ட பயிரை அறுவடை வரைக்கும் பொத்திப் பாதுகாக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பது பயிர்களை மட்டுமல்ல... அழிந்துவரும் விவசாயத்தையும்தான். அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தைக் கடத்தும் அன்பான பந்தம் இது!

கோவை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியின் பண்ணையில்தான் இந்தக் காட்சி. இங்கு வேளாண்மை படிக்கும் 122 பேரில் 90 பேர் மாணவிகளே. இங்கிருக்கும் வேளாண்மை இளங்கலை அறிவியலில் மூன்றாண்டு படிப்பில் இரண்டாண்டுகள் மட்டுமே வகுப்புப் பாடம். மூன்றாம் ஆண்டு முழுவதுமே கள அனுபவம்தான். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து சென்ட் இடம் பிரித்துத்தரப்படுகிறது. அவர்களாகவே அந்த நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைத்து, பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும்.

“ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக ஓர் ஆண்டு இந்த வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். மேட்டுத் தோட்டப்பயிர், வயல்வெளிப் பயிர் என இருவிதமான பயிர்களை பயிர்செய்ய வேண்டும். இப்போது இருக்கும் குழுவினர் மேட்டுத் தோட்டப் பயிராக மக்காச்சோளத்தை அறுவடை செய்துவிட்டார்கள். பின்பு வயல்வெளிப் பயிராக ‘கோ 51’ நெல் ரகத்தைக் கொடுத்தோம். அதைத்தான் இப்போது அறுவடை செய்கிறார்கள்” என்று விளக்கினார் உதவிப் பேராசிரியர் தவபிரகாஷ்.

இவர்கள் முதன்முதலில் வயலில் இறங்கும்போது, எப்படி இறங்க வேண்டும், அரிவாளை எப்படிப் பிடிப்பது என்பதுகூடத் தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு வயலைத் தயார் படுத்துவதில் தொடங்கி சகலத்தையும் கற்றுத்தருகிறார்கள் இங்குள்ள பண்ணைத் தொழிலாளர்கள் . எல்லாவற்றையும்விட சிறப்பு, இதில் கிடைக்கும் மொத்த விளைச்சலும் அப்படியே விதையாக விவசாயிகளுக்குத் தரப்படுவதுதான். கிடைக்கும் லாபத்தைப் பங்கிட்டு விளைவித்த விளைச்சலுக்கு ஏற்ப மாணவ, மாணவியருக்கு ஊதியமும் அளிக்கப்படுகிறது!

x