புறநானூறு என்ற நூலின் பெயரை, உலகத் தமிழர் 8 கோடி பேரில், பாதி பேராவது கேட்டிருப்பார்கள். ‘கோழைக்குப் பாலூட்டிய முலைகளை அறுத்து எறிவேன்' என்று வீர சபதம் செய்த தாய் பற்றியும், முறத்தால் புலியை வெருட்டிய மறப் பெண்மணி பற்றியும் பேசாத அரசியல் மேடைகள் இல்லை. புறநானூற்றுத் தாய் என்றும் கோப்பெருஞ்சோழன் என்றும் கண்கொள்ளாத வண்ணங்களில் சுவரொட்டிகளாக நம்மைப் பார்த்து இளக்காரமாகச் சிரிக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். ‘தமிழைப் பழித்தானைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீர வசனங்களும் கேட்டிருக்கிறோம்.
தமிழனின் மொழிச் சிறப்பும், வரலாற்றுக் குறிப்புகளும், மானுடப் பண்புகளும் நுட்பமாக உரைக்கும் அற்புதமானதோர் தொல்லிலக்கியம் புறநானூறு. சங்க இலக்கி
யங்கள் என அறியப்படும் - பாட்டும் தொகையும் என வழங்கப்பெறும் - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில், எட்டுத்தொகையினுள் அடங்குவது புறநானூறு. அந்த நூல்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிதாகச் செய்யுள் ஒன்றும் உண்டு.
‘நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப் பத்து, ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியே அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை'
என்பது பாடல். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என இவை எட்டும் எட்டுத்தொகை என்பன ஆகும் என்பது பாடலின் பொருள்.
என்னிடம் கைவசம் இருக்கும் புறநானூறு நூலின் பதிப்புகள், மர்ரே அண்டு கம்பெனி, எஸ்.ராஜம் ஐயர் பதிப்பு, 1958, மூலம் மட்டும். சுஜாதாவின் ‘புறநானூறு ஓர் எளிய அறிமுகம்', உயிர்மை பதிப்பகம், 2003. புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பு, 1935. புறநானூறு, கோவிலூர் மடாலயம் வெளியீடு, உரையாசிரியர் புலவர் இரா.இளங்குமரன், 2003. புறநானூறு (விளக்கவுரையுடன்), ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு, 1947. இங்கு கழக வெளியீடு எனக் குறிக்கப்பெறுவது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்பது.
இத்தனை உரைகள் எதற்கு என்று கேட்பீர்கள். அதற்கு இந்தக் கட்டுரையின் இறுதியில் பதில் இருக்கிறது.
புறநானூறு மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. தமிழ்நாடு செய்த ‘தவப்பயனால்’ அவற்றுள் 267, 268-ம் எண்ணுள்ள பாடல்கள் இல்லை. மேலும் 44 பாடல்களில் சில சீர்கள் அல்லது வரிகள் இல்லை. இருப்பதைப் படிக்கவே ஆளில்லை இன்று. உன்னம் பிடிக்கத் தெரியாதவனிடம் எத்தனை துவக்குகள் இருந்தென்ன? இந்த 400 பாடல்களையும் பாடிய புலவர்கள் 156 பேர். அவற்றுள் 12 பாடல்கள் பாடிய புலவர் பெயரறிய நீதம் இல்லை.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்றாரே கணியன் பூங்குன்றன். தனது 13 வரிப் பாடலில்! ‘நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ!' என்றாரே சங்ககால ஔவை. ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!' என்றாரே, பொன்முடியார்! ‘உண்டால் அம்ம இவ்வுலகம்' என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. ‘பசிப்பிணி மருத்துவன்' என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்! ‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்றானே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்! யாவும் புறநானூற்று வரிகள்!
‘பதச்சோறு' என்பர், ஒரு பானைச் சோற்றுக்குப் பதம் சொல்ல. அப்படியொரு பாடல் பாடியவர் வீரைவெளியனார். அவர் பாடிய பாடல், சங்க இலக்கியத்துள் இந்த ஒன்றே ஒன்றுதான். வீரைவெளி என்பது அவரது ஊர்ப்பெயர் என்கிறர்கள். வீரைவெளியன் தித்தனார் எனும் பெயரில் அகநானூற்றில் குறிஞ்சித் திணையில் ஒரு பாடல் இருக்கிறது. இருவரும் ஒருவரா என்பது தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாஞ்சிலார் என்றால் நாஞ்சில் கி.மனோகரன். இன்று வேறொருவர். நூறு ஆண்டுகள் சென்று, இருவரும் ஒருவரே என எவனும் ஒரு ஆய்வாளன், வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்து, புத்தகம் எழுதவும் நேரலாம்.
வீரைவெளியனார் ஒரு காட்சியைச் சொல்லோவியமாக வரைகிறார், செந்தமிழ் வண்ணத்தூரிகையால். மலையடிவாரத்தில் வேடன் ஒருவன் குடிசை. முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும் முசுண்டைக் கொடியும் பம்பிப் படர்ந்து பந்தல் போட்டது போல் நிழல். முற்றிய பலாக்காய்கள் தொங்கிக் கிடக்கின்றன. வேடன் மனைவி பெண் மானொன்றைத் தன் மகள் போல் வளர்க்கிறாள். அது பருவத்தில் இருக்கிறது. அந்த இளம் பெண்மானை நாடிக் காட்டிலிருந்து ஆண்மான் ஒன்று இறங்கி வந்தது. இரண்டும் ஒன்றையொன்று தழுவி, கிளர்ந்து, திளைத்து, விளையாடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் கலவி இன்பத்துக்கு இடையூறாக இருக்கலாகாது என்று வேட்டுவப் பெண் குடிசையினுள் ஒதுங்கி நடமாடுகிறாள். அவள் கணவன், யானை வேட்டுவன். அன்று வேட்டைக்குப் போகாமல் குடிசையின் திண்ணையில் கொடுங்கையைத் தலைக்கு வைத்து உறங்குகிறான்.
மதியம் கஞ்சியோ கூழோ காய்ச்சுவதற்காக, மான் தோலை விரித்து, அதில் தினை அரிசி உணங்க வைத்திருக்கிறாள் வேடத்தி. அப்போது காயும் தினை அரிசியைப் பொறுக்கித் தின்பதற்காக, காட்டுக் கோழிகளும் காடைகளும் இறங்கிவிட்டன. இப்போது அவளுக்குப் பெரிய தட்டழிவு ஏற்படுகிறது. புட்களை ஓட்டக் குரல் எழுப்பினால், வேடன் எழுந்துவிடக் கூடும். மகள் போல் வளர்க்கும் மானின் புணர்ச்சி இன்பம் கெட, ஆண்மான் கலைந்து ஓடிவிடக்கூடும். என்ன செய்வாள் பெண்?
புலவன் இந்தக் காட்சியைச் சொல்லி, பாணன் ஒருவனைப் பெருந்தகையாளன் ஒருவனிடம் ஆற்றுப்படுத்துகிறான். ‘பாணனே, நீ நடந்து செல்லும் பாதையில் இப்படியொரு சிறப்புடைய வேடன் குடிசை இருக்கிறது. அங்கு சற்று நேரம் தங்கிச் செல்லுங்கள். வேடத்தி உங்களுக்கு சந்தன மரத்தீயில் சுட்ட ஆரல் மீன் துண்டுகளும், பிற மாமிசங்களும் விரவிய உணவைத் தருவாள். பெருந்தகை ஊருக்குப் போனால் காக்க வைக்காமல் பரிசில் தந்து அனுப்புவான்' என்று. இனி வருவது பாடல் வரிகள்.
‘முன்றில் முஞ்ஞை*யொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென’
என்று தொடங்கி...
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.
என்பதாக நிறையும் அந்தப் பாடல்.
(*முஞ்ஞை - முன்னை. பிரெம்னா லாட்டிஃபோலியா (Premna latifolia). இது ஒரு புதர்ச்செடி. இதன் அடித்தண்டு வலியது. இது நல்ல மருந்துச் செடி. முன்னை, மின்னை, முன்னைக்கீரை, பசுமுன்னை என்பன இதன் வழக்குப் பெயர்கள்.)
சில உரையாசிரியர்கள், ‘பலாத்தூங்கு நீழல்' என்பதைப் ‘பலர் தூங்கு நீழல்' என்று பதிப்பித்து, பலர் படுத்து உறங்கத் தோதான நிழல் என்று பொருள் எழுதியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் தூக்கம், தூங்கு போன்ற சொற்கள் தொங்குதலைக் குறிக்கவே பயன்பட்டன. உறக்கம் அல்லது துயில் எனும் சொற்களே ‘sleep’ எனும் பொருளைத் தந்தன. ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்றார் திருவள்ளுவர். ‘ஈதென்ன பேருறக்கம்?' என்றார் ஆண்டாள். ‘உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்' என்றார் கம்பன்.
ஐயம் திரிபு அற அறிந்துகொள்ளவே இத்தனை பதிப்புகளும் உரைகளும்.
(நிறைந்தது)