குரங்கணி சித்தன் கதை - 8


‘நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!’

அரிசியைச் சாப்பிட்டு, தண்ணியைக் குடிச்சிக்கிட்டா உயிர் வாழறதா அர்த்தமா? அப்படி உயிர் வாழ்ந்திட முடியுமா? நல்ல வீரமான அரசனோட பாதுகாப்பில் இருந்தால்தானே உயிர் வாழ முடியும்!

அந்தக் காலகட்டத்தில, நல்ல பாதுகாப்பு கொடுக்கிற பாண்டிய அரசர் இல்லாமப் போனாலும், தெலுங்கு அரசர்களுக்குக் கீழ அடிபணிஞ்சு வாழறது, இந்த மதுரை பாண்டிய அரச வம்சத்துக்குப் பிடிக்கல.

சோழவந்தான் வைகைக் கரையில, கிருஷ்ணதேவராயரோட பெரிய குதிரைப்படை, பாண்டியர்களோட படையைச் சுத்தி வளச்சி நின்னதும், ‘இவ்வளவு பெரிய படைகூட எப்படி மோதுறது!’னு திகைச்சு நின்னுட்டாங்க. ஒரு பக்கம், அரியநாதர் கத்தியைத் தூக்கிட்டு நிக்கிறாரு. திரும்பிப் பார்த்தால், மறுபக்கம் முன்னேற விடாமல், விசுவநாத நாயக்கரும், போடப்ப நாயக்கரும் வில்லு, அம்பு சேனைகளோட நிக்கிறாங்க.

அரியநாதர்தான் கத்திப் பேசினார்: ‘‘மரியாதையா சரணாகதி அடையறதுதான் உங்களுக்கு வழி. உங்க தலைகள் தப்பிக்க அதுதான் விதி! முடிவு பண்ணிச் சொல்லுங்க.’’

திருநெல்வேலி, கயத்தாறு பாண்டியர்கள், ‘‘சரணாகதி அடையலாம்’’னு யோசனை சொன்னாங்க. ஆனா, பெரும்பிறவி பாண்டியனோ, ‘‘இவங்க தெலுங்கர்கள்... நம்மைச் சிறைவச்சு, கொடுமைப்படுத்திக் கொல்லாம விட மாட்டாங்க!’’ அப்படினு சொல்லிக்கிட்டே, ‘‘நந்திச்சாமீ... குதிரையத் திருப்பு!’’னு கத்திக்கிட்டே, சடாருனு வலுது பக்கமாப் பாஞ்சு காட்டுக்குள்ள குதிரைய ஓட்டிட்டுத் தப்பிச்சு ஓடினாங்க.

உடனே அரியநாதர், போடப்ப நாயக்கரைப் பார்த்து, கத்தியை நீட்டி, ‘‘அவங்களை விரட்டிப் பிடிங்க!’’னு உத்தரவு போட்டாரு. போடப்ப நாயக்கரும் குதிரை வீரர்கள் துணையோட, பெரும்பிறவி பாண்டியனைத் துரத்திக்கிட்டுக் காட்டுக்குள்ள ஓடினாரு.

அங்க மீதி சிறைப்பட்ட பாண்டியர்கள்தான் பஞ்ச பாண்டியர்கள்! சந்திரசேகர பாண்டியரோட காமக்கிழத்தியின் வாரிசுகள். அரியநாதரும் விசுவநாத நாயக்கரும் அவங்கள வளைச்சுக் கூடாரத்துக்குக் கூப்பிட்டு வந்தாங்க. கூடாரத்துக்குள்ள தங்களோட அப்பா சந்திரசேகர பாண்டியர், மன்னர் நாகம நாயக்கரோட உட்கார்ந்து இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க.

விதி வலியது! பெரும்பிறவி பாண்டியனைப் பிடிக்கப்போன போடப்ப நாயக்கர் வெறும் கையோட திரும்பி வந்தார்.

அரியநாதர் சிரிச்சிக்கிட்டே, ‘‘கூண்டுக்குள்ள எலி சுத்துமே தவிர, தப்பிக்க முடியாது. தப்பிச்சு ஓடினவங்க யாரு..?’’னு கேட்டாரு.

‘‘பெரும்பிறவி பாண்டியன். எனக்கு முன்னாடி மதுரையை ஆண்டுக்கிட்டு இருந்த பெரும்பிறவி ராசசிம்ம பாண்டியனோட மகன். மாலிக்காபூர் மதுரை மேல படையெடுத்து ஜெயிச்சதுமே, மதுரையிலிருந்து தப்பிச்சு ஓடி சின்னமனூருக்குப் போய் ஒளிஞ்சிக்கிட்டவர்தான், அந்த ராசசிம்ம பாண்டியன். அவர் இறந்துட்டாரு. இப்ப சின்னமனூரு இந்தப் பெரும்பிறவி பாண்டியன்கிட்டதான் இருக்கு. இவனும், ‘எனக்குதான் மன்னர் பதவி வேணும்’னு என்கிட்ட சண்டைபோட்டு தொல்லை தருவான்...’’னு சுருக்கமாகத் தகவல் சொன்னார், சந்திரசேகர பாண்டியன்.

அகப்பட்ட பஞ்ச பாண்டியர்களை ரொம்ப மரியாதையா நடத்தின நாகம நாயக்கர், ‘‘இப்போ உங்களுக்கும் உங்க படைவீரர்களுக்கும் ஆட்டுக்கறி விருந்து வைக்கிறேன். நீங்க சரணாகதி அடைஞ்சதால நீங்க எங்களுக்கு அடிமையில்லை. சோழன்கிட்ட இருந்து உங்களக் காப்பாத்தி, இந்தப் பாண்டிய நாட்டை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கலாம்னு வந்திருக்கோம். அதுதான் எங்க மாமன்னர் கிருஷ்ண தேவராயரோட உத்தரவு. நிலைமை சீராகுற வரைக்கும் நான்தான் உங்க பாண்டிய நாட்டுக்கு மகா மண்டலேசுவரராக இருந்து ஆட்சியைப் பரிபாலனம் பண்ணுவேன். இதுவும் எங்க மாமன்னரோட உத்தரவு..!’’னு, அதிகாரத் தோரணையில சொன்னாரு.

உடனே அரியநாதர், ‘‘முடிஞ்ச அளவு உயிர் பலி கூடாது. மக்களோட குழப்பத்தைப் போக்கி அவங்களோட மனசுல இடம்பெறணும்கிறது எங்க மாமன்னர் ராயரோட பேரவா!’’னு சொல்லி முடிச்சதும், உடனே, ‘‘எங்ககிட்டேயே ஆட்சி உரிமையைக் கொடுத்திடுங்க. எங்க தமிழ் மக்கள் உங்களை ஏத்துக்க மாட்டாங்க. கிளர்ச்சி பண்ணுவாங்க, கலகம் பண்ணுவாங்க..!’’னு திருநெல்வேலி பாண்டியர் கொஞ்சம் பயத்தோடதான் சொன்னார்.

‘‘அத நாங்க பாத்துக்குறோம். அதுக்கு ஒர் உபாயம் இருக்கு!’’னு அரியநாதர் கண்ணை அகல விரிச்சு சொல்லிட்டு, கூடாரத்துக்கு வெளியில வந்து ஆட்டுக்கறி சமையல் நடக்குற இடத்துக்குப் போனார். அங்க இருந்த சமையல்காரங்களப் பார்த்து, ‘‘ஆட்டு ரத்தத்தை பாண்டியர்களோட குதிரை மேல ஊத்துங்க!’’னு கட்டளை போட்டார். மளமளனு வேலை நடந்துச்சு.

எல்லாக் குதிரைகளையும் மதுரைப் பக்கம் திருப்பி, துரத்திவிடச் சொன்னார். எங்கேயும் நிக்காம ஓடின குதிரைகள், மதுரைக்குள்ள நுழஞ்சதும், சனங்க அம்பூட்டுப் பேரும் வீரர்கள் இல்லாம, ரத்தத்தோட வெறும் குதிரைக வர்றதப் பார்த்து, ‘குய்யோ, முறையோ’னு அலறினாங்க. ‘சண்டைக்குப் போன புருசனைக் காணோம்’, ‘ஜெயிச்சுட்டு வருவோம்னு சொல்லிட்டுப்போன அப்பாவைக் காணோம்’, ‘சண்டை முடிஞ்சதும் கலியாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிக்கிட்டுப் போன காதலனைக் காணோம்...’னு பெண்கள் எல்லாம் அலறி அடிச்சு மண்ணுல புரண்டாங்க. அன்னிக்குச் சாயங்காலம், கிருஷ்ணதேவராயரோட படைகள் மதுரைக்குள்ள நுழையும்போதுதான் தெரிஞ்சது, பஞ்ச பாண்டியர்கள் உட்பட எல்லாருமே உயிரோடதான் திரும்பி வர்றாங்கன்னு ஆனந்தக் கண்ணீர் விட்டாங்க!

மக்கள் மனசுல சின்ன துன்பத்தைக் கொடுத்து, பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்துறது ஒரு உளவியல் காரணம். இத அரியநாதர் முதலியார் நல்லாவே தெரிஞ்சு வெச்சிருந்தார். ஆட்டுக்கறி சாப்பிட்ட படைவீரர்கள், அவங்கவங்க குடும்பத்துக்கிட்ட, இந்த நாயக்க மன்னர்கள் தங்களுக்குக் கொடுத்த மரியாதை மதிப்பைப் பெருமிதமாச் சொல்லிப் புளகாங்கிதம் அடைஞ்சாங்க. இப்போ நாயக்க மன்னர்களுக்கு மதுரையில செல்வாக்குக் கூடிப்போச்சு... மக்களோட எதிர்ப்பு அடங்கிப்போச்சு!

குரங்கணி மலை...

மூங்கில் குத்தின காலோடு யானை ஒண்ணு காயம்பட்டு, குரங்கணி சித்தனின் குடிசைக்குப் பக்கத்துல அநாதையாப் பிளிறிக்கிட்டு இருந்துச்சு. குடிசைக்குள்ள இருந்து வெளியே வந்த சித்தன், யானையோட பிளிறல் சத்தம் கேட்டு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டான். கொட்டக்குடி ஆத்தைக் கடந்து யானைக்குப் பக்கத்துல போன சித்தன், ஒரு கையைப் பின்னால் கட்டிக்கிட்டு, இன்னொரு கையை துதிக்கை போலத் தூக்கிக் காட்டி, ‘உனக்கு அபயம் கொடுக்க வர்றேன்’னு சைகையால உணர்த்தினான். சித்தனைக் கண்ட யானை, அப்படியே கீழே படுத்துக்கிச்சு. பக்கத்துல போன சித்தன் யானையோட காலை ஆராய்ச்சிப் பண்ணினான். ‘அடடா! மூங்கில் கம்பு குத்தி பல நாள் ஆயிருக்கே... சலம் பிடிச்சுருக்கு.

எப்படி வலிதாங்குதோ... பாவம், வாயில்லா ஜீவன்’னு நெனச்சிக்கிட்டே பக்கத்தில இருந்த மூலிகைகளப் பறிச்சிக்கிட்டு யானை பக்கத்துல போனான். காலுல குத்தியிருந்த மூங்கிலைக் கையால பிடுங்கிப் பார்த்தான்... அது வரல. பல்லுல கடிச்சு இழுத்தான். யானை பிளிற... ரத்தமும் சலமுமா வெளியே வந்துச்சு. உடனே மூலிகைகளை நசுக்கி, அந்தக் காயத்துல பிழிஞ்சிவிட்டான். உடனே எந்திரிக்க ஆரம்பிச்ச யானையை ரெண்டு தட்டுத்தட்டி, ‘‘அடியிலிரு..!’’னு சொல்லி, துதிக்கையை தடவிக்கொடுத்தான் அந்த யானை சின்னக் குழந்தை மாதிரி சித்தன் கழுத்து மேல துதிக்கையைப் போட்டுத் தன் பக்கம் இழுத்துக்குச்சு.

தூரத்துல யாரோ வர்றாங்கன்னு அடையாளம் சொல்ற மாதிரி செம்போத்துப் பறவ ஒன்னு ‘பவ்வோ, பவ்வோ’ன்னு ஒலி எழுப்பிச்சு. உசாரான குரங்கணி சித்தன், மரத்துக்குப் பின்னாடி ஓடி ஒளிஞ்சு குடிசைப் பக்கம் பார்த்தான். நந்திச்சாமியும் கூட ரெண்டு பேரும் குடிசைக்குப் பக்கத்துல நெருங்கி வர்றது தெரிஞ்சது. மதுரையில நடந்த விஷயம் எதுவுமே சித்தனுக்குத் தெரியாது இல்லையா..?

சமாதானம் பேச பெரும்பிறவி பாண்டியனைக் கூட்டிக்கிட்டு இந்த நந்திச்சாமி வந்திருக்கான்னு நெனச்ச சித்தன், பக்கத்துல போயி ‘‘பெரும்பிறவி பாண்டியன் வந்திருக்காரா..?’’ன்னு ஆர்வமா கேட்டான்.

‘‘ஆமா சித்தா... ஆபத்துல மாட்டிக்கிட்டோம். உன்கிட்ட அடைக்கலம் தேடி பெரும்பிறவி பாண்டியனைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்..!’’

-சொல்றேன்...

-வடவீர பொன்னையா

x