தற்போது கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறார் ரங்கநாதன். ஒருகாலத்தில், கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் கம்பிகட்டும் தொழிலாளி. தொடர்ந்து வெல்டிங் பணிகளைச் செய்துவந்ததால் இவரது பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதுவும் போதாமல் ஒருமுறை கம்பியை வளைக்கும்போது நெற்றிப்பொட்டில் கம்பி குத்தி, 90 சதவீதம் பார்வை பறிபோனது. அதன் பிறகு இவருக்கு இந்த இல்லமே நிரந்தரமாகிப் போனது!
நான்கு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்தார் ரங்கநாதன். ஒருநாள், இங்குள்ளவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் பாக்கியராஜ் வந்தார். இல்லக் காப்பாளர், “நடிகர் பாக்கியராஜ் வந்திருக்கிறார்” என்று சொல்லி இல்லத்திலிருந்தவர்களை அழைத்தார். அப்போது, கடைக்கோடி கட்டிலில் இருந்த ரங்கநாதன், “பாக்கியராஜை இங்கே வரச் சொல்லுங்க..!’’ என்று ஓங்கிக் குரல் கொடுக்க... அத்தனை பேரும் ஆடிப்போய் விட்டனர்.
“பாக்கியராஜ் எவ்வளவு பெரிய ஆளு... அவரு உங்களை நேரில் பார்த்து உதவ வந்திருக்காரு. நாம் போய் அவரை வரவேற்கிறதை விட்டுட்டு அவரை உங்க இடத்துக்கு வரச்சொல்லி அதிகாரமா கூப்பிடுறது முறையா?’’ என இல்லக் காப்பாளர் கடிந்துகொண்டார். “பாக்கியராஜ் படம்ன்னா, எனக்கு உசுரு. முதல்ஷோ, முதல் ஆளா போய்ப் பார்ப்பேன். அவரே இங்க வந்திருக்கார்ன்னா, நான் ஓடிப்போய் பார்க்க மாட்டேனா? கண்ணு தெரியாமக் கெடக்குறதாலதான் அவரை எங்கிட்ட வரச் சொல்லிக் கூப்பிட்டேன்’’ என்று ரங்கநாதன் சொன்னதைக் கேட்டு பாக்கியராஜே கலங்கிப் போனார்.
‘முந்தானை முடிச்சு’ படத்தை ஏழு தடவை பார்த்ததாக பாக்கியராஜிடம் பெருமையுடன் சொன்ன ரங்கநாதன், அதில் வரும் சில வசனங்களை பாக்கியராஜ் குரலிலேயே பேசிக் காட்டினார். அதை பாக்கியராஜையும் பேசச் சொல்லி ரசித்தார்.