இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?


குர்மீத்சிங் ராம் ரஹிம் என்ற மோசடி சாமியார் கைதாகி சில மாதங்களுக்குள், ஆசாராம் எனும் அதிரடி ஆசாமிக்கு அறிவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை முதல் பக்கச்செய்தியாக அலறுகிறது. மாய மந்திர செப்படி வித்தைகளை வைத்து, அப்பாவி மக்களைப் பலிகடா ஆக்கும் போலிச் சாமியார்களின் லீலைகள் தமிழ்நாட்டுக்கும் புதிதல்ல.

எளிமையும் நேர்மையுமே உருவமாகக் கொண்டு, அன்பையும், சகோதரத்துவத்தையும் உபதேசித்து, வாழ்வின் உண்மையான அடையாளத்தைக் காட்டிய துறவிகள் எல்லா மதங்களிலுமே இருந்திருக்கிறார்கள். சுயநல சிந்தனைகள் இல்லாமல், ஆழ்ந்த அனுபவ அறிவோடு இவர்கள் காட்டிய நெறிமுறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்தின் அமைதியான வாழ்க்கைக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. ஆனால், மனிதப் பிறப்புக்கு இயற்கை அளித்திருக்கும் வரம்புகளைத் தாண்டி, தங்களுக்கு அற்புத சக்தி இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அதை வைத்துச் சுரண்டி சுகவாழ்வு காண நினைப்பவர்களைத் ‘துறவி’கள் என்று எப்படிக் கூற இயலும்?

துறவு என்பது தன்னைத் தொலைக்க முற்பட்டு, வாழ்வின் பொருளைத் தேடும் புனிதப் பயணம். அதற்கான நீண்ட மரபு, காலங்காலமாக இங்கே இருந்து வந்திருக்கிறது. துறவின் பெயரால் அமைப்புகளை உருவாக்கி, அதன் வழியே அதிகாரப்பீடத்தின் ஆதரவைப் பெற்று, எதையும் செய்யலாம் என்ற இறுமாப்பு சாமியார்களின் மரபும் இங்கே இருக்கிறது. மருத்துவம் உள்பட அறிவியலின் அத்தனை கூறுகளும் வளர்ந்து, எந்தவொரு பிரச்சினைக்கும் காரணத்தைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்ளும் வழிமுறைகள் தாராளமாகக் கிடைக்கும் இந்தக் காலத்திலும், இதுபோன்ற ஏமாற்றுச் சித்தர்களுக்கு ‘கிராக்கி’ ஏறிக்கொண்டே போகும் கொடுமையை என்னவென்பது?

ஆளும் சிம்மாசனத்தில் இருப்பவர்களும், நீதி பரிபாலனம் செய்பவர்களும் திடீர் சாமியார்களின் பாதங்களைக் கழுவுகின்ற காட்சிகளைப் பார்த்துப் பிரமித்து, விட்டில் பூச்சிகளாகப் போய் விழுந்து கருகுகின்ற அப்பாவிகளைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது. பணத்தைப் பதுக்குவதற்கும், பதவி சிபாரிசுகளுக்கும்தான் அந்தக் ‘காரியக்காரர்கள்’ அங்கே போகிறார்களே தவிர, எந்த அற்புத சக்தியிலும் மயங்கி அல்ல என்று இந்த அப்பாவிகளுக்கு எப்படித்தான் புரிய வைப்பது!

x