பிம்பம் உதறிய பேரழகி!


வில்லனாக அறிமுகமாகி கதாநாயகர்களாக உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும். வில்லியாக அறிமுகமாகி தென்னகம் போற்றும் கதாநாயகியாக திகழ்ந்த ஒருவரைத் தெரியுமா?

ஒரு நாட்டின் அரசியல் நிர்வாகத்துக்குள் ஊடுருவி, அதன் அமைதியைக் குலைத்துவிடும் நாட்டியக்காரி ஜீவாவாக ‘பெண்ணரசி’ படத்தில் பி.ஆர்.சுலோச்சனா என்ற பெயருடன் வில்லியாகத் தோன்றினார் ராஜசுலோச்சனா. 1955-ல், வெளியான இந்தப் படத்தில் வில்லன் பி.எஸ்.வீரப்பாவுக்கு ஜோடி. படத்தில் ஈ.வி.சரோஜா, சூர்யகலா என்று இரண்டு கதாநாயகிகள். இருந்தும் நாட்டியக்காரி ஜீவாவின் நடனத்தில் சொக்கிப்போன ரசிகர்கள், அந்த வேடத்தை ஏற்ற சுலோச்சனாவைக் காண அவர் வீட்டு வாசலில் கூடினார்கள்.  ‘அபிநயம் பிடித்து மகேந்திரபுரி ராஜ்ஜியத்தை ஆட்டம் காணவைக்கும் பாதகத்தி வேடத்தில் சபாஷ் போட வைக்கிறார் சுலோச்சனா’ என முன்னணிப் பத்திரிகை ஒன்று எழுதியது. ‘பெண்ணரசி’க்கு முன்பு ‘குணசாகரி’ என்ற கன்னடப் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்த சுலோச்சனா, திருமணத்துக்குப் பிறகே திரையில் முழுவீச்சில் அடியெடுத்து வைத்தார்.

திராவிடப் பகுத்தறிவு சினிமாவின் முதல் பேரலையாக வெளியான ‘பராசக்தி’ (1952) படத்தில் சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர் சுலோச்சனாவைத்தான் முதலில் தேர்வு செய்தனர். ஆனால், அப்போது சுலோச்சனா கர்ப்பவதியாக இருந்ததால், அந்த வாய்ப்பு ரஞ்சனி ஜூனியருக்குச் சென்றது. அதேசமயம், அறிஞர் அண்ணாவின் கதைக்கு ‘கலைஞர்’ மு.கருணாநிதி வசனம் எழுதித் தயாரித்த ‘ரங்கோன் ராதா’வில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடித்து ‘பராசக்தி'யில் விட்ட வாய்ப்பைத் தக்கவைத்தார் சுலோச்சனா. அதே ஆண்டில் வெளியான ‘குலேபகாவலி’யில் முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்து, அதில் ஆதிவாசிப் பெண்ணாக நடித்தது, எம்.ஜி.ஆரின் வசீகரக் கதாநாயகிகள் பட்டியலில் அவரைச் சேர்த்தது.

அதன்பிறகு, ராஜசுலோச்சனாவை பட்டிதொட்டியெங்கும் பிரபலப் படுத்திய படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. பிரேம் நஸீரின் முதல் தமிழ்ப் படம். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பாசம் மிக்கத்  தங்கை, காதலனால் கைவிடப்படும் அபலைப்பெண் என இரு பரிமாணம் கொண்ட கதாபாத்திரம்.

x