மந்திரி என்ன... மகேசனா இருந்தாலும் பயப்பட மாட்டேன்! - அமைச்சரோடு மோதும் அதிமுக எம்.எல்.ஏ!


அதிமுக-வின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர். அதில் ஒருவர் சத்யா பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ-வான இவர், தற்போது கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்ததையும் தொகுதிக்குள் 15 இடங்களில் முந்திரி பதப்படுத்தும் வசதி, காய்கறி குளிர்பதனக் கிடங்கு எனத் திட்டங்களைக் கொண்டு வந்ததையும் இவரது சாதனை என்கிறார்கள். இந்த நிலையில், தன்னை செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாக மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராகச் சீறுகிறார் சத்யா. சொந்தக் கட்சியின் அமைச்சருக்கு எதிராகவே இவர் இப்படி அனலைக் கக்க என்ன காரணம்? சத்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். கணவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு நம்மிடம் பேசினார்.

எந்த வகையில் அமைச்சர் சம்பத் உங்களுக்குத் தடையாக இருக்கிறார்?

மக்களுக்கான திட்டங்கள் எதையுமே நிறைவேற்ற தடையாத்தான் இருக்கிறார். எனது தொகுதியில் கலை - அறிவியல் கல்லூரிக்காக இடம் தேர்வு செய்து கொடுத்தோம். ஆனால், ஏதேதோ காரணம் சொல்லி அதை வரவிடாமல் தடுத்து வெச்சிருக்கார். கடலூரிலிருந்து கண்டரக்கோட்டை வரைக்குமான கஸ்டம்ஸ் சாலையில, அவரோட தொகுதிவரைக்கும் சாலை போட்டுட்டார். மேல்பட்டாம்பாக்கத்திலேர்ந்து கண்டரக்கோட்டை வரைக்கும் நிதியெல்லாம் ஒதுக்கியும் சாலை வேலை தொடங்கலை.

புதுப்பேட்டை ஹைஸ்கூல்ல சைக்கிள் ஸ்டாண்ட் கட்ட நிதி ஒதுக்கியும் அதைக் கட்டமுடியல. மலட்டாறை தூர்வார சொந்தமாவும் நிர்வாக ரீதியாகவும் முயற்சி செஞ்சும், அதிகாரிங்க மூலமா தடுத்து வெச்சிருக்காரு. பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டுல நெரிசல் அதிகமா இருக்கிறதால மொத்த வணிகக் கடைகளை வேற இடத்துக்கு மாத்த திட்டம் தயார் செஞ்சோம். அதையும் செய்ய முடியல. ஒண்ணா ரெண்டா இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

x