அரேபிய ரோஜா 9- ராஜேஷ் குமார்


மஹிமா, ரகசியமாய் இம்ரா கொடுத்த அந்தக் காகித உருண்டையை ஒரு மைக்ரோ நொடி நேரத்துக்குள் தன் இடுப்புப் பகுதிக்குக் கொண்டுபோய் சேலையின் மடிப்புக்குள் பதுக்கி மறைத்துவிட்டு இயல்பான நிலைக்கு மீண்டாள்.

சர்புதீன் அகலமான புன்னகையோடு கெளசிக்கை ஏறிட்டான். “மிஸ்டர் கெளசிக்... மஹிமா இஸ் எ வொண்டர்ஃபுல் பர்சன்... நானும் இம்ராவும் இந்த ‘அரேபிய ரோஜா’ ப்ராஜெக்ட்டில் ஒரு தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்துதான் துபாயிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தோம். மஹிமா கொடுக்கும் விளக்கம் திருப்தி தராத பட்சத்தில், ப்ராஜெக்ட்டையே ட்ராப் செய்வதுதான் எங்கள் முடிவான எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த எண்ணம் இப்போது தவிடு பொடியாகிவிட்டது... இனிமேலும் அரேபிய ரோஜாவை நாம் தாமதப்படுத்த காரணங்களைச் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. மிஸ் மஹிமாவை உடனடியாகத் துபாய்க்கு அனுப்பி வையுங்கள்.’’

கெளசிக்கின் இதழ்க்கோடியில் சிறு சிரிப்பொன்று அரும்பியது. “அதற்கான ஒரு நாளையும் நீங்களே குறித்துவிடுங்கள் மிஸ்டர் சர்புதீன்’’

“ஷ்யூர்...’’ என்று சொன்ன சர்புதீன் இம்ராவிடம் திரும்பினான்.

x