சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்


பொன்வண்டு

“என்னய சுந்துன்னு கூப்பிட்டா மூஞ்சியப் பேத்துருவேன்”னு ரங்கா கூடச் சண்டைக்கு எக்கும் சுந்தரராஜன் நா அப்டி கூப்டா மட்டும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாப்ல. “ஏண்டா?”ன்னா, “சும்மாரு செமதி. இவன் அன்னிக்கு மாலாக்கு முன்னாடி வச்சு ‘சந்து’ ‘பொந்து’ ‘சுந்து’ன்னு கத்துறான். அந்த கோண மூக்கிக்கு சிப்பாணி தாங்கல”ம்பான். சுந்துவின் அப்பா வாடகை சைக்கிள் கடை வச்சிருந்தார். எனக்கு ‘கொரங்கு பெடல்’ல ஆரம்பிச்சு ‘ஃப்ரீ வீல்’ வரைக்கும் சைக்கிள் விடச் சொல்லிக்கொடுத்தது சுந்துதா. “மொழங்காத் தழும்பில்லாம ஒன்னிய சைக்கிள் ஓட்ட வச்சுடுடறேன்”னு சொல்லித்தான் பெடலத் தள்ளினான். ஆனாக்க நா ஓட்டக் கத்துக்க முன்ன இரண்டு மொழங்காலும் குதிகாலும் புண்ணானது அவனாலதா. “ஒங்கிட்ட வாடகை சைக்கிளுக்குக் காசு வாங்குறனா என்ன... பெரிசா அலட்டுற... கீழ விழுந்துட்டா எந்திருச்சு மண்ணள்ளிச் தேச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்”பான்.

சுந்து சைக்கிளக் கழுவுறதுல அவசரமே பட மாட்டான். நா ஆலமரத்தடில வாகா நெழல்ல ஒக்காந்துக்குவேன். டவுசர் பையில எப்பவும் எலந்த வடை வச்சிருப்பான். சைக்கிள ஸ்டாண்ட் போட்டு நிறுத்திட்டு எங்கிட்ட வந்து கொஞ்சநேரம் ஒக்காந்திருப்பான். அந்த எலந்த வடைய எடுத்து எனக்குப் பாதியப் பிச்சுக் கொடுத்துட்டு பெரியாம்பளை அண்ணன் மேலுக்கு ஊத்தி முடிக்க மட்டும் வேடிக்கை பார்ப்பான். அவரோட தூக்குச்சட்டிய எடுத்து மோந்து பாத்து, “இன்னிக்கு மீங் கொளம்பு போலுக்கு, ஏன்ணே சாம்பார்ல மயினி பெருங்காயத்த அரைச்சு ஊத்திட்டா போல”னு வம்பிழுத்துகிட்டிருப்பான்.

எப்பவாச்சும் வீட்டுல கருவாட்டுக் குழம்புன்னா, சுந்துவுக்கும் எனக்கும் சேத்துச் சின்னத்தூக்குவாளில கொண்டாந்திருப்பார். (கரிசக்காட்டுக்காரவுகளுக்கு மீன் அபூர்வம். நெனப்பு வர்றப்ப கொளத்து மீனும், கருவாடும்தான் கைகொடுக்கும்). சுந்துவுக்குக் கருவாட்டோடு ஒக்காந்திருக்கும் அந்தத் தூக்குவாளியப் பாத்தவுடனே கண்ணாமுழி பெரிசாயிடும். சைக்கிள நிறுத்திட்டுத் தூக்குச் சட்டிய எடுத்துட்டு, “ஏண்ணே, ஒங்கூட்டுல பெரிய தூக்குவாளி ஒண்ணுதா இருக்காக்கும்”னு சடச்சுக்கிட்டே எம் பக்கத்துல ஒக்காருவான். தூக்குவாளியத் தொறந்து கண்ண மூடி, கருவாட்டு மணத்த பைய மோந்து பாத்துட்டு, மூடில எனக்கு சோத்தையும், மேலாக்க ரெண்டு துண்டையும் எடுத்து வப்பான்.

x