ஹாட் லீக்ஸ்- காம்ரேட்களின் கவலை


காம்ரேட்களின் கவலை

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸோடு உறவில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை. ஆனால், பாஜக-வை வீழ்த்துவதற்கு ஏதுவாக பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள்ளேயே சிலர் குரல் எழுப்புகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியரான இர்பான் ஹபீப் உள்ளிட்டவர்கள், “இம்முறை காங்கிரஸுடன் கைகோத்தால்தான், பலமான எதிரியான பாஜக-வை வீழ்த்த முடியும்” என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பொலிட்பீரோ என்ன சொல்லப்போகிறதோ?

காசு, பணம் - கறார் காந்தி

ராகுல்காந்தி தலைவராக வந்ததிலிருந்து கட்சிப் பணத்தை செலவழிக்கும் விஷயத்தில் கறாராக இருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும் பொதுச்செயலாளர்கள் எகானமி வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் தங்கக் கூடாது என்பது ராகுல் போட்டிருக்கும் நிபந்தனையாம். ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளரும் தங்கள் மாநிலத்தின் தினப்படி அரசியல் நிலவரத்தையும், உள்ளூர் காங்கிரஸ் நடப்புகளையும் அந்தந்த நாளே அனுப்ப வேண்டும் என்பதும் ராகுல் உத்தரவாம்!

x