பாடுக பாட்டே! - 9


ஔவையை நீங்க மனமில்லை. எந்த ஔவையானால் என்ன? தமிழர்கள் ஔவையைத் தொலைத்துவிடக் கூடாது என்று பாரதியார், கட்டுரை ஒன்றில் குறிப் பிடுகிறார். காரணம் எளிமை, சமகாலத் தன்மை, அனுபவச் செறிவு, மக்களோடு இருத்தல். தனிப்பாடல் களஞ்சியத்தில் ஔவையார் பெயரில் 102 பாடல்கள் உள்ளன. கா.சு.பிள்ளை தொகுத்த தனிப்பாடல் திரட்டில் 70 பாடல்கள். அவை ஒரு ஔவையால் எழுதப்பெற்றவையா என்பதில் எவருக்கும் உறுதி இல்லை.

கம்பனைப்போல பெரிய காவியம் பாட வல்லார் ஒருவரும் இல்லை என்று எவரோ உரைத்த போது, ஔவை பதிலளித்ததாக ஒரு பாட்டு.

‘வான்குருவியின் கூடு,வல்லரக்கு, தொல்கறையான்,

தேன்,சிலம்பி, யாவர்க்கும் செய்யஅரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது'

வானத்தில் சிறகடிக்கும் குருவியின் கூடு, வன்மை உடைய அரக்கு, பழைமை யான கறையான் புற்று, தேன்கூடு, சிலந்தி வலை போன்றவை எவர்க்கும் செய்வதற்கு அரிதானவை. ஆதலால் யாம் மிகவும் வல்லமையும் சிறப்பும் உடையவர் என்று எவரும் தற்பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்குமே ஒவ்வொரு காரியம் செய்தல் இலகுவாக, எளிமையாக இருக்கும்.

பெரிய காப்பியங்கள் எழுதிய புலவர்களும் ஈராயிரம் ஆண்டாக மொழிக்குள் வாழ்கிறார்கள். ஒரேயொரு பாடல் இயற்றிய நப்பசலையாரும், செம்புலப்பெயல் நீராரும், கொல்லன் அழிசியும், இறையனாரும், அணிலாடு முன்றிலாரும், கீரந்தையாரும், குறமகள் இளவெயினியும், குப்பைக்கோழியாரும், இலக்கியத்தினுள் தனியாட்சி செலுத்துகிறார்கள். மேற்சொன்ன பாடல், மூவுழக்குத் தினைக்கும் உப்புக்கும் புளிக்கும் ஒரு கவிதை யாத்த ஔவையின் எளிமை. அவரால்தான் இவ்விதம் பாட முடியும் எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது என்று.

32 ஆண்டுகள் பணிபுரிந்த நிறுவனத்தில், எங்கள் தொழில் கிரேன் தயாரிப்பு. அரை டன் முதல் அறுபது டன் வரையிலான பளு தூக்கும் கருவிகள். பளு தூக்கும்போது, பளு தூக்கிடும் கொக்கியைச் சங்கிலியுடன் அல்லது எஃகு முறுக்குக் கம்பிக் கயிற்றுடன் பிணைக்க, குறுக்காக ஒரு துண்டு கால் அங்குல, அரையங்குல கனத்தில் இரண்டங்குல நீளத்தில் அச்சாணி இருக்கும். அச்சாணியின் பொறுப்பிலேயே மொத்த எடையும் அந்தரத்தில் நிற்கும். எனவே, அந்த அச்சுக்கம்பியைத் துண்டுக்கம்பி என்று எண்ணலாகாது. வினைத்திட்ப அதிகாரத்துக் குறள் பேசுகிறது, 'உருள் பெரும் தேர்க்கு அச்சாணி' என்று. உருளும் பெரிய சுசீந்திரத்துத் தேருக்கு அச்சாணி அத்தனை இன்றியமையாதது. எத்தனை பெரிய பொறுப்பு!

எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வைத்திருந்தாலும், எங்காவது ஒரு பயணத்தின்போது, டயர் பொத்துக்கொண்டால், எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும். பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை, ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய, பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா? பொன் சரிகைப் பட்டுடுத்தி, சில நூறு பவுன் நகைகள் சாத்தி, காரிலிருந்து இறங்கி, கல்யாண வரவேற்புக்கு நுழையும்போது செருப்பு அறுந்துபோனால்?

எனவே ஔவை கேட்கிறாள்... யான் இனத்தலைவன், மதத் தலைவன், மக்கள் தலைவன் என இறுமாந்து நடந்து என்ன பயன்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது!

தனிப்பாடல் திரட்டில் கம்பர் பெயரில் பல பாடல்கள் உண்டு. ஔவையைப் போலவே வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்து வெவ்வேறு நூல்கள் செய்தவன். 'கும்பிட்டு வாழ்கிலேன் யான், கூற்றையும் ஆடல் கொண்டேன்' என்று கும்பன் வாயிலாகப் பேசிய கம்பன், அன்று கொங்கு வேளாளர் திருமணங்களில் பாடப்படும் மங்கல வாழ்த்துப் பாடல் எழுதிய கம்பன். சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது முதலாய நூல்கள் எழுதிய கம்பன் வெவ்வேறு என்பார்கள் தமிழறிஞர்கள்.

ஆளுக்குத் தகுந்தாற்போலப் பேசி, பொய்யும் புனைவும் கூறி, தன் காரியம் சாதித்துத் தருக்கித் திரியும் பாவலர்கள் யமனுக்கு நிகரானவர் என்று கம்பனின் தனிப்பாடல் ஒன்றுண்டு.

‘போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே!' - என்கிறார். போற்றிப் பாடினாலும் பாடுவார்கள். ஆனால், புகழ்ந்து பாடினால் ஆதாயம் இருக்க வேண்டும் அல்லவா? பொன்னோ பொருளோ பணியிட மாறுதலோ பணிநியமனமோ பதவி உயர்வோ வீட்டுமனைப் பட்டாவோ குடியிருப்பு ஒதுக்கீடோ புகழ்ந்து பேசி, காரியம் கூடாமற்போனால், வெளியே வந்து, “அவனைத் தெரியாதா? அமாவாசை அன்று பொறந்த பய!” என்று தூற்றினாலும் தூற்றுவார்கள்.  அத்தகு கொடுமையான பாவலரை விடவும் யமன் கொடியவன் அல்ல.

அப்படிப் பேசிய கம்பர், ஔவையாரின் எளியவர் பற்றிக் கூறிய கருத்துக்கு வரும் பாடல் ஒன்றுண்டு. மாவண்டூர் என்று ஒரு ஊர். அதில் சிங்கன் என்று ஒரு கருமார். மிக நேர்த்தியான தொழிலாளி. மிகப் பெரிய ஆட்கள்

எல்லோரும் அவர் பட்டறையில் வந்து காவல் கிடப்பார் கள். ‘ஆழியான் ஆழி,அயன் எழுத்தாணி என்பான்

கோழியான் குன்றுஎறிய வேல்என்பான்-பூழியான்

அம்கை மழுஎன்பான் அருள்பெரிய மாவண்டூர்

சிங்கன் உலைக்களத்தில் சென்று' - என்பது பாடல்.

சிறந்த தொழில் நேர்த்தியுள்ள சிங்கன் உலைக் களத்துக்கே சென்று, காத்துக்கிடந்து, பாலாழியில் பள்ளிகொள்ளும் பரமன், திருமால், சிறந்த ஆழி - சக்கரம் செய்துதா என்பான். உலகையே படைக்கும் தாமரைக் கிழவன், அந்தணன், பிரமன், வசமான, கூரான, நவீன இலக்கியப் படைப்பாளி வைத்திருக்கும் தரத்தில், எழுத்தாணி ஒன்று செய்துதர வேண்டும் என்பான். கோழிக் கொடியை உடையவனாகில் முருகன், கிரௌஞ்ச மலையை எறிந்து துளைத்துப் பிளப்பதற்குக் கூர்மையான வேல் ஒன்று வேண்டும் என்பான். திருநீற்றை அணிந்த சிவன், எப்போதும் தனது அழகிய கையில் வைத்திருக்க, ஏற்றுமதித் தரத்திலான, மழு ஆயுதம் விரைந்து செய்துகொடு என்பான்.

ஆழி என்றால் கடல், ஆழி என்றால் சக்கரம். கோழியான் எனில் சேவற்கொடியோன். பூழியான் எனில் சாம்பல் பொடி பூசிச் சுடலை ஆடுபவன். அம்கை - அங்கை எனில் அழகிய கை. 'அழலாட அம்கை சிவந்ததோ, அம்கை அழகால் அழல் சிவந்தவாறோ?' என்பார் காரைக்கால் அம்மை. கையில் அனல் ஏந்தி ஆடுவதால், அழகிய கை சிவந்து இருக்கிறதா? அல்லது அழகிய கையின் சிவப்பை தீ வாங்கி சிவந்து எரிகிறதா? என்பது அம்மையின் கேள்வி, அற்புதத் திருவந்தாதியில்.

சக்தி வாய்ந்த கடவுளர்க்கே, சின்ன மந்திரம் சொல்லி, நினைத்த மாத்திரத்தில் தமக்கான ஆயுதங்களை வரவழைத்துக்கொள்ள இயலவில்லை. அண்டம் கிடுகிடுக்கும் ஆற்றல் உடையவர்தானே!

படத்துக்கு 20 கோடி வெள்ளையாக ஊதியம் வாங்கும் கதாநாயகன், தனது தலைமுடியைத் தானே கத்தரித்துக்கொள்வானா?

பாம்பணையில் துயின்றவனும், நாமகள் கணவனும், சூர் ஒடிந்தவனும், அண்டப் பெருவெளியில் ஆனந்த நடம் ஆடுபவனும், தத்தம் ஆயுதங்களுக்காக மாவண்டூர் கொல்லர் பட்டறையில் வரிசையில் நிற்கிறார்கள். ஔவை சொல்கிறாள், யாம்தான் பெரியவர், வல்லவர், பெரு நிதியம் குவித்தவர், அண்டசராசர ஸ்டார் என்று இறுமாந்து இருத்தல் வேண்டாம். எல்லோருக்குமே, ஒவ்வொரு காரியம் எளிதாக இருக்கிறது! ஒரு ஆஃபாயிலைக் கூட வடிவாகப் போட்டுக் கரியாமல் எடுக்கத் தெரியாதவன் அடுத்தவனைத் துச்சமாகக் கருதுவது எப்படி?

(இன்னும் பாடுவோம்...)

x