குரங்கணி சித்தன் கதை - 7


நின்னா மரம்,

கொன்னா விறகு... சங்கு சுட்டாலும் வெள்ளை!

கானகத்துல இருக்கிற ஆலமரம், அரசமரம், புளியமரம், புங்கமரம் எல்லாம் நிக்கிற வரைக்கும்தான் மரம். அதுங்கள வெட்டினா விறகுதான்! அதேசமயம், இந்த உலகத்துல எந்தப் பொருளைத் தீயில சுட்டாலும் வெந்து கருகும்... உருகும்! சங்கு மட்டும் சுட்டாலும்  வெள்ளையா இருக்கும்!! மேன்மக்களுக்கு இப்படித்தான் உதாரணம் சொல்லுவாங்க. பலகாலம் உதவி செஞ்சவங்கள மேன்மக்கள் மறக்க மாட்டாங்க.

பெரும்பிறவி பாண்டியன், கையைப் பிசைஞ்சுக்கிட்டு இருப்புக்கொள்ளாமல் நெருப்புல வெந்த நிலைக்கு வந்துட்டான். அப்பத்தான் சேவுகமார்கள்ல ஒருத்தன் ஓடி வந்தான்... ‘‘பாண்டியரே... சித்தனோட ஆட்கள், நம்ம சேவுகமார்கள அத்தனை பேரையும் கயித்துல கட்டி வச்சுட்டான். ‘மலைச்சாதி சனங்களை உங்க பாண்டியர் விடுதல செஞ்சாத்தான், உங்க ஆட்களை விடுதல செய்வேன்’னு அடம் பிடிக்கிறான். நம்ம நந்திச்சாமியும் சித்தன்கிட்ட அகப்பட்டுக்கிட்டாரு ராசா!’’

பெரும்பிறவி பாண்டியன் ‘இருதலைக்கொள்ளி எறும்பு’ நிலமைக்கு வந்துட்டான். நந்திச்சாமியையும் மீட்டாகணும்... மதுரைக்குப் போக படைவீரர்கள் வேணுமே! வேறு வழியில்லாத பாண்டியன், எண்ணெய்ச் செக்கு ஓட்டுற தளத்துலயும், கொல்லம் பட்டறையிலயும், கல்லு உடைக்கிற இடத்துலயும், தோட்டங்கள்லயும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த அத்தனை மலைச்சாதி சனங்களை, சடுதியா விடுவிச்சு, குரங்கணி மலைக்கு அனுப்ப உத்தரவு போட்டான். ஏன் எதுக்குனு விவரம் புரியாத மலைச்சாதி சனங்க, தண்ணிக்குள்ள முங்கி இருந்து மேல வந்து புதுசா மூச்சு வாங்கின மாதிரி சந்தோஷமா மலைக்குக் கிளம்பிப் போனாங்க.

மறுநாள்... நந்திச்சாமியும், கூடவந்த இருநூறு சேவுகமார்களும் தலை கவுந்து, பாண்டியன் முன்னால  வந்து நின்னாங்க. நந்திச்சாமி, மெல்லத் தலையைத் தூக்கி, ‘‘பாண்டியரே... தப்பிதமான நேரத்துல தப்பிதமான முடிவு எடுத்துட்டோம்னு தோணுது. சித்தன் இவ்வளவு சூட்சுமம் வச்சிருப்பான்னு நினச்சுக்கூடப் பார்க்க முடியல. நாங்க தலைதப்பி வந்ததே எந்தச் சாமி புண்ணியமோ!’’னு சொன்னான்.

உடனே பாண்டியன் கோபமா, ‘‘இத விட தலைபோற வேலை கூடிவந்திருச்சு... ஆந்திரதேசத்துல இருந்து கிருஷ்ண தேவராயரோட படைகள் மதுரைக்குப் பக்கத்துல வந்திருச்சாம்... உடனே நாம அங்கே போயாகணும்!’’னு சொன்னான்.

பக்கத்துப் பக்கத்து நாடுகளெல்லாம், மதுரையைக் குறிவெச்சு ஏன் படையெடுத்து வராங்கனு உங்களுக்கு நாஞ் சொல்லியாகணும். பாண்டிய நாட்டை ஒரு அஞ்சு பேர் சேர்ந்து ஆண்டு வந்தாங்க. விவசாயம் வரும்படி மட்டுமில்ல... முத்து, பவளம், மாணிக்கக்கல்லு வாணிபம் செஞ்சு, நிறைய செல்வங்கள் அரச பண்டாரத்துல (கஜானாவுல) சேர்ந்திருச்சு. மேல நாட்டு வணிகர்கள் மதுரைக்கு வந்து போனாங்க. மேல நாட்டில இருந்து வந்த குதிரைகள், பளிங்குக்கல்லு இதெல்லாம் கயல் துறைமுகப் பட்டினத்துல இருந்து மதுரைக்கு வந்து சேர்ந்துச்சு.

பட்டு நெசவு, கடல்ல முத்துக்குளிக்கிற தொழில் சீரும்சிறப்புமா நடந்துச்சு. முத்து எடுப்பவங்க பத்துல ஒரு பகுதி அரசருக்குக் கொடுத்தாகணும். விலை உசந்த பெரிய முத்துக்கள் எல்லாத்தையும் அரசர்களே வச்சுக்குவாங்க...

மகாராணிக்கும் வைப்பாட்டிகளுக்கும் போட்டு அழகு பார்ப்பாங்க. தங்கத்துல காசு இருந்துச்சு. பத்துப் பொன் கொண்டது ஒரு பொற்காசு. பத்துப் பொற்காசு ஒரு காணம். பத்துக் காணம் ஒரு கழஞ்சு. இப்படித்தான் அரச பண்டாரத்துல பெருஞ்செல்வம் கூடிப்போச்சு. பக்கத்து நாடுகளுக்குப் பொறாமையும் கூடிப்போச்சு.

மதுரை நாட்டு சனங்க உழைச்சு வாழ நெனச்சவங்கதான். கடன் வாங்கினா திருப்பித் தர்றது, பசு மாட்டைக் கும்பிடுறது, கோயிலுக்குப் போறது, பெத்த தாயிக்கு மதிப்புத் தர்றது, குழந்தைக்கு ஜாதகம் எழுதுறது, சகுனம் பார்க்கிறது, ஒரு நாளைக்கு ரெண்டு தடவ குளிக்கிறது, தண்ணிய நாக்கு வச்சுக் குடிக்காம அந்நாக்கு குடிக் கிறது... இப்பிடி ஏகப்பட்ட பண்பாடு, பழக்க வழக்கம், நற்குணத்தோட வாழ்ந்தாலும், அரசப் பரம்பரை மனுசங்க எல்லோரும் வேறமாதிரி நடந்துகிட்டாங்க.

அரசப்பரம்பரையும் நேர்மையா வாழ நெனச்சவங்கதான். காலப்போக்குல, வரிப் பணத்துல  வந்த  செல்வச்செழிப்புல, நகைநட்டு, பட்டு பீதாம்பரத்தோட வலச வந்து, ஒவ்வொரு அரசனும் பலநூறு கல்யாணம் செஞ்சிக்கிட்டுத் திரிஞ்சாங்க. இதனால ஏகப்பட்ட வாரிசுகளும் உருவாச்சு. இதுல கொஞ்சம் பிள்ளைகள், அரசனுக்கு நம்பிக்கையான மெய்க்காப்பாளரா இருந்தாங்க. சில பிள்ளைகள் அதிகாரத் தோரணையில அந்தந்த ஊர்ல அட்டூழியம் பண்ணிக்கிட்டுத் திரிஞ்சாங்க... இவங்களுக்கு ‘ரெண்டாம் ஜாமத்துப் பிள்ளைகள்’னு சனங்க கேலிப்பேரு வச்சு கூப்பிடுவாங்க. இவங்களால தான் மதுரை சின்னாபின்னமாகி இந்த நிலைமைக்கு வந்து நின்னுபோச்சு.

இப்போ கதைக்கு வர்றேன்... தேவராயரோட படையை எதிர்த்துப் போராட, திருநெல்வேலி, தென்காசி, கயத்தாறு, வேணாடு, சின்னமனூரு சிற்றரசர்கள் அம்பூட்டுப் பேரும் படையோட மதுரைக்கு வந்துட்டாங்க. ஆக, பாண்டியர்களோட குதிரைப்படையும் காலாட்படையும், ஈட்டி, கேடயத்தோட வந்து நின்னுக்கிட்டாங்க. மதுரை சுத்தி யானைப்படையை நிறுத்தி வச்சாங்க. அரசப்பண்டாரத்துக்குக் காபந்து படை தயாரா இருந்துச்சு. மதுரை மக்களுக்கு பீதி ஆகிப்போச்சு. இருந்தாலும் படைவீரர்களை உற்சாகப்படுத்தி அனுப்பி வச்சாங்க.

சந்திரசேகர பாண்டியர் ரெண்டு வாரமா காணாமப் போயிட்டாருனு சொன்னோமே... அவரு வேற எங்கேயும் போகல... ஆந்திராவுல ராச்சியம் நடத்திக்கிட்டு இருந்த கிருஷ்ண தேவராயருகிட்டதான் சரணாகதி அடைஞ்சாரு.

‘‘பாண்டிய நாட்டுல, என்னோட வாரிசுகளே எனக்கு எதிராக் கலகத்தைப் பண்ணிக்கிட்டு, ஆளாளுக்கு எனக்குதான் மன்னர் பதவி வேணும்னு சண்டைக்கு வராங்க. அவங்கள சமாளிக்கவும் முடியல, அடக்கவும் முடியல மகாராசா! நீங்கதான் எப்படியாவது எங்க நாட்டைக் காப்பாத்தணும்..!’’னு சொல்லி மன்றாடினாரு. இதுக்காகத்தான் குதிரைப் படைகள் எல்லாத்தையும் பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவச்சுருக்காரு ராயர்.

திண்டுக்கல் போற சாலையில, பாண்டியரோட குதிரைகள் முன்னேறிப் போகுது. சோழவந்தானை நெருங்கினதும் வைகை ஆத்துக் கரையில கிருஷ்ண தேவராயரோட படைகள் கூடாரம் போட்டிருந்தது தெரிஞ்சது. அலங்காரமான மூணு தேரும், நாலஞ்சு குதிரைகளும் நின்னுக்கிட்டு இருந்துச்சு. பத்துப்பதினஞ்சு காவக்காரங்க கையில ஈட்டியோட நின்னுக்கிட்டு இருந்தாங்க. கூடாரத்தைச் சுத்தி நிறைய ஆடுகள் இலை, தழைகள மேஞ்சுக்கிட்டு இருந்ததுக.

கூடாரத்துக்குள்ள ஆஜானுபாகுவா நின்னுக் கிட்டு இருந்த ரெண்டு பேர் நாகம நாயக்கர், அரியநாத முதலியார்... நடுவுல சந்திரசேகர பாண்டியர் கவலையோட உட்கார்ந்திருந்தார். நாகம நாயக்கருதான் கிருஷ்ணதேவராயருக்கு நம்பிக்கையான மன்னர். அரியநாத முதலி யார்தான் படைத் தளபதி. அவங்ககூட துணைப் படையா வந்த ரெண்டு இளம் வயசு தளபதிகள் விசுவநாத நாயக்கரும், போடப்ப நாயக்கரும் காத்துல கத்தியைச் சுழற்றி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்களோட முகத்தைப் பார்த்தாலே, மலையை ரெண்டாப் பிளக்கிற ஆட்கள் மாதிரிதான் தெரிஞ்சது!

ஒரு ஒற்றன் ஓடி வந்து, அரியநாதர்கிட்ட, ‘‘ஐயா பாண்டியர்களோட குதிரைப்படையும், காலாட்படையும் நம்ம கூடாரத்தைக் குறிவச்சு வந்துக்கிட்டு இருக்காங்க..!’’னு சொல்லிட்டு, வந்த வேகத்துலயே ஓடிட்டான். அரியநாதர் வெளியே வந்து அங்க இருந்த வெள்ளைக் குதிரை மேல பாஞ்சு ஏறினார்.

பாண்டியர்களோட படை, காட்டுக்கு நடுவுல வீராவேசமா வந்துக்கிட்டு இருக்கு. வைகை ஆத்துக் கரையில தேவராயரோட கூடாரம் தூரத்துல தெரிஞ்சது. ஆனா, எதிரியோட படை களைக் காணோமேனு திகைச்சு நின்ன பாண்டி யர்கள், திடீர்னு தங்களுக்குப் பின்னால திபுதிபுனு வந்த தேவராயரோட குதிரைப்படையைப் பார்த்து மிரண்டு நின்னுபோனாங்க. ரெண்டாயிரம் குதிரைகளோட சத்தமே இல்லாமல் எப்படி வந்தாங்க..? அரியநாதர் முதல் ஆளா கத்தியைத் தூக்கி நின்னுக்கிட்டு இருந்தார்.

என்ன நடந்ததுனு அப்புறம் சொல்றேன்...

அன்னிக்குச் சாயங்காலம், படைவீரர்கள் இல்லாமலேயே மதுரைக்குத் தன்னந்தனியா திரும்பி வந்தது பாண்டியர்களோட குதிரைகள்! அந்தக் குதிரைகள் மேல ஒரே ரத்தமா இருந்துச்சு...  அது குதிரை ரத்தமா... மனுஷ ரத்தமா..? மதுரை சனங்க குய்யோ முறையோனு அலறிக்கிட்டிருந்தாங்க. என்னாச்சு..?

- சொல்றேன்...

-வடவீர பொன்னையா

x