மக்களின் ‘வேலைக்காரன்’ நான்!- அன்பழகன் என்பும் உரியர் பிறர்க்கு


பெயரில் மட்டுமல்ல... தனது செயலிலும் அன்பைச் சுமந்து வலம் வருகிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன். சில வாரங்களுக்கு முன்பு, உதவித் தொகை கேட்டு வந்த ஆதரவற்ற பெண்மணிக்கு வீட்டுக்கே சென்று அதற்கான உத்தரவை வழங்கியவர், கையோடு எடுத்துச் சென்ற  தனது வீட்டு உணவைவும் அவருக்கு அளித்து  உபசரித்தார். இது ஓர் உதாரணம் மட்டுமே. கரூர் மாவட்ட அரசுக் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது தொடங்கி கிராமங்களின் மாட்டுக் கொட்டகைகள், வரை தினசரி நேரில் சென்று ஆய்வு நடத்துவது அன்பழகனின் தனி பாணி!

ஒரு பயணத்தின்போது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் அரசு உயர் அதிகாரிகள் அத்தனை பேருக்கும் ஒரு பாடம். “ ‘ஆமா, இவரு பெரிய கலெக்டரு...’ என்கிற வார்த்தையைப்  பலரும் சொல்வார்கள்.  கலெக்டர் என்பவர் மிகப் பெரிய ஆள்;  எளிதில் அணுக முடியாதவர் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தச் சொல்லாடல். வரி வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ‘கலெக்டர்’ என்கிற பதவியே பின்னாட்களில் மொத்த நிர்வாகத்தையும் அந்தப் பதவிக்குக் கீழே கொண்டுவந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்பும் நமது நாட்டில் கலெக்டர் என்பவர் பெரும்பாலும் அணுக முடியாத அதிகாரியாகவே இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது” என்றார் அன்பழகன்.

தனக்கான கடமைகள் குறித்து இன்னும் விரிவாகப் பேசினார். “நான் அரசுப் பணிக்கு சேர்ந்தபோதே, எவ்வளவு பெரிய பதவிக்குச் சென்றாலும், மக்களுக்கான ஊழியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். ஆட்சியரின் அதிகாரம் என்பது சாமானியமக்களைப் பாதுகாப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு. அதை  ‘உத்தரவு’ தோரணையில்லாமல், கரிசனத்துடன் நிறைவேற்றுவது ஒருஆட்சியரின் நல்ல நிர்வாகத்துக்கான அடை யாளம்.  இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் ஜீவன் இல்லை. சூழலுக்கு ஏற்ப அந்தச் சட்ட விதிமுறை களுடன் மனிதம் என்கிற ஈரத்தைக் கலந்து  நடைமுறைப்படுத்துவதே ஓர் ஆட்சியரின் பணி.

என்னைப் பொறுத்தவரை எனது எல்லைக்குள் வசிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கவுரவமான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டியது எனது கட்டாய கடமையாகக் கருதுகிறேன். ஒரு ஆட்சியரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனி நபர் உணவு இல்லாமல் இறக்க நேரிட்டால், அதற்கான முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும். அதனால்தான், ஆதரவற்ற ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் சென்று சேர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

x