கறை படியும் அரசியல் கண்ணியம்!


துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில், ‘ஒரு தமிழருக்குக் கூடவா இங்கே தகுதியில்லை?’ என்று கிளம்பியது பலமான கேள்வி. இந்தச் சூழலில்தான் அருப்புக்கோட்டை பேராசிரியை பேசியதாக வெளியான செல்பேசிப் பதிவுகளால், உண்டானது பூகம்பம். தொடர்ந்து, ‘பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டினார்’ என்று காட்சி ஆதாரத்துடன் வெளியான குற்றச்சாட்டு புயலாகக் கிளம்பி ஆட்டிப் பார்த்தது. இதெற்கெல்லாம் தமிழக ஆளுநர் அளித்திருக்கும் விளக்கமும் துவக்கி இருக்கும் விசாரணையும் மக்களால் ஏற்கப்படுமா என்பது போகப்போக தெரியும்.

பொதுவாகவே, ஆளுநர் என்பவர் மத்தியில் ஆள்கின்ற கட்சியின் ‘மாநில நீட்சி’ என்பதுதான் நிலைமை. அதனால், ஆளுநர் தொடர்பாகக் கிளம்பும் சர்ச்சைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, அவரைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்த பாஜக தலைமைக்கு இயல்பாகவே இருக்கிறது. அந்த வகையில், டெல்லியிலிருந்து ஏதேனும் விளக்கம் வரும் என்று எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு, தீயை மிதித்ததுபோல் ஒரு வலி! ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியையும், திமுக தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும்

தாங்கிக்கொள்ள முடியாமல், பாஜகவின் தமிழக முகங்களில் ஒன்றான ஹெச்.ராஜா பாய்ந்துவந்து ஒரு பதில் கொடுத்தார். திமுக தலைவர்களை மையப்படுத்தி அவர் நடத்திய அந்த ‘ட்விட்டர் தாக்குதல்’ அருவருப்பின் உச்சம். அரசியல் கண்ணியத்துக்குக் கறை பூசும் வன்மம்!

ராஜ்பவனுக்கு காவடி தூக்குவது பாஜகவினரின் ‘கடமை’யாக இருக்கலாம். ஆனால், ‘ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’ என்ற உண்மைக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டும். பதற்றத்தீ மூட்டி, அதில் குளிர்காயும் பேச்சுகளைப் பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவினர் தொடர் உத்தியாகக் கையாள்வது மக்களுக்குப் புரியாதது அல்ல.

x