நெல்லும் வாழையும் விளைந்து கொண்டிருந்த சாலிகிராமம், வடபழனி போன்ற சிற்றூர்களைத் தமிழ் சினிமாவின் கனவுத் தொழிற்சாலையாகக் கட்டி எழுப்பிய திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவர் விஜயா-வாகினி நாகிரெட்டியார்.
எம்.ஜி.ஆரின் திரைப் பயணத்தில் மேலும் ஒரு திருப்புமுனையாக அமைந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி அலை ஓயும் முன், ‘எங்க வீட்டுப் பெண்’ என்ற தலைப்பில் அடுத்து ஒரு படத்தைத் தயாரித்தார். முதன் முதலாக அதை இயக்கவும் செய்தார். எம்.ஜி.ஆராலேயே ‘முதலாளி’ என்று அழைக்கப்பட்ட நாகிரெட்டியார், வரிசையாக வெற்றிப்படங்களைத் தயாரித்திருந்த நிலையில், இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் என்றால், எதிர்பார்ப்பு எகிறாமலா இருக்கும்?
யார் கதாநாயகன், யார் கதாநாயகி என்று பத்திரிகைகள் பரபரத்தன. நாகிரெட்டியாரோ, அப்போது வளரும் நட்சத்திரங்களாக இருந்த ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோருடன் எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, ஓ.ஏ.கே.தேவர் என்று பிரபலமான நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். கதை, விஜயா புரொடெக்ஷன் முதன்முதலில் தயாரித்த ‘சௌகார்’ தெலுங்குப் படத்தினுடையது. பெண்மையைப் பெருமைப்படுத்தும் கதை. நாகிரெட்டியாரின் உயிர் நண்பர் சக்கரபாணி எழுதியது. இசை, கே.வி.மகாதேவன். ஒளிப்பதிவு, கேமராவை இயக்குவதற்காகவே பிறந்தவர் என்று பெயர்பெற்ற வெள்ளைக்கார மார்க்ஸ் பார்ட்லே. இத்தனை திடமான கூட்டணியில் கதாநாயகி மட்டும் முடிவாகவில்லை.
நேர்மைக்கும் நாணயத்துக்கும் பெயர்பெற்ற ஒரு கிராமத்து மனிதரின் கட்டுப்பெட்டியான மகள் கதாபாத்திரம்தான் கதாநாயகி ஏற்கவேண்டியது. நாகிரெட்டியார் படம் என்பதால்,அன்று உச்சத்தில் இருந்த எந்தக் கதாநாயகி என்றாலும் கேள்வி கேட்காமல் ‘உள்ளேன் ஐயா’ சொல்லியிருப்பார்கள். ஆனால், நாகிரெட்டியார் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகையைத் தேடினார்.