கலைமணிக்கு வயது 45. இவருக்கு 23, 21 வயதுகளில் இரண்டு மகன்கள். ப்ளஸ் டூ படிக்கிறார் மகள். டீக்கடை வைத்திருக்கும் கணவர். வாடகை வீடு... இதெல்லாம் கலைமணிக்கு அடையாளமல்ல. கணவரின் டீக்கடைப் பணியிலும் பங்கேற்றபடி மாவட்ட, மாநில, தேசிய அளவுகளிலான மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பதக்கங்களை அள்ளி வருகிறார். நாலு மணி நேரத்திற்கு 42 கிலோமீட்டர் ஓட்ட சாதனை இவருடையது. வறுமையிலும் தன் கனவை நிஜமாக்கிய கலைமணி, சாதிக்க நினைப்பவர்களுக்கு முக்கிய ரோல்மாடல்.
“காலையில அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சுடுவேண்ணே. வூட்டுக்காரரையும், பசங்களையும் எழுப்பி காபி போட்டுக் கொடுத்து, சமைச்சு வெச்சுட்டு அஞ்சு மணிக்கு ஸ்டேடியம் போயிடுவேன். எட்டு மணிக்கு அங்கிருந்து வூட்டுக்கு வந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி பத்து மணிக்கு டீக்கடைக்கு வந்தேன்னா, ராத்திரி பத்து மணியாகும் மறுக்கா வூட்டுக்குப் போக. டயர்டுல சில நேரம் தூக்கம்தூக்கமா வரும். அப்படியே இந்தப் பொட்டிக்கடைக்குள்ளேயே அசந்துடுவேன்’’ வெள்ளந்தியாய் பேசும் கலைமணி, தான் டீக்கடைக்காரருக்கு வாழ்க்கைப்பட்டு தடகள வீராங்கனையாக ஆன கதையை அதே இயல்பில் சொல்ல ஆரம்பித்தார்.
“பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். படிப்பை விட எனக்கு கபடி, ஓட்டம்னு விளையாட்டுல இன்ட்ரஸ்ட். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்ன்னு அப்பவே போட்டியில ஃபர்ஸ்ட்தான். புயல் மாதிரி வர்றேன்னு வாத்தியார்களே பேசுவாங்க. அப்பாவும் அம்மாவும் எனக்கு கண்ணாலத்துக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. நான் ஓடணும், நிறைய பரிசு வாங்கணும்னு சொன்னதை அப்பா காதுலையே வாங்கலை. ‘எங்களுக்குப் பின்னால ஒன்னை யாரு கவனிச்சுக்குவா?’ன்னாங்க. நான் எதுவும் பேசலை. இவரைக் கட்டிக்கிட்டதும் ஆசையைச் சொன்னேன். அதனால என்ன, ஒனக்கு எப்ப தோணுதோ, அப்ப ஓடப்போலாம்னு சொன்னார்.
அடுத்தடுத்த குழந்தைக, அவங்க படிப்பு. எல்லாத்தையும் சமாளிக்கணுமே... அதனால, நானும் டீக்கடையில வேலை செய்ய வேண்டியதாப்போச்சு. ஒருநாளு, இவரே ஒரு பேப்பரை எடுத்துட்டு வந்தாரு. அதுல மாஸ்டர் அத்தலடிக் மையம் முதியோர் தடகளப்போட்டி நடத்தறதா போட்டிருந்தது. இதுல வேண்ணா நீ கலந்துக்கன்னாரு. அங்கே போய் கேட்டேன். போட்டியிலையும் கலந்துக்கிட்டேன். முதல் பரிசு கிடைச்சது. அதுக்கப்புறம் டீக்கடையோட கூடவே ஓட்டம்தான்; பரிசுகதான்.’’