சித்திரை திருவிழா


நான்காயிரம் வயதைக் கடந்திருந்தாலும், தமிழகத்தில் இன்னமும் உயிர்ப்போடு திகழ்கிற மாநகரம் மதுரை. இந்நகரத்தின் பண்பாட்டையும், பிரம்மாண்டத்தையும் ஒரே பார்வையில் தரிசிக்க நல்வாய்ப்பு சித்திரைத் திருவிழா. மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கள்ளழகர் திருவிழாவும் இரட்டை விழாக்களாக அமைந்து,மாமதுரைக்குப் பெருமை சேர்க்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை 5-ம் நாளில் ஆரம்பமாகிறது மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா. அதன்படி கடந்த 18.4.18 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, விழா களைகட்டியது. அடுத்த நாளில் இருந்தே தினமும் சுவாமி - அம்பாள் வீதிஉலா வந்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த ஊர்வலத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தும் சிறுவர் சிறுமிகளும், தெய்வங்களைப்போல வேடமிட்ட குழந்தைகளும் பங்கேற்று மாசி வீதிகள் முழுக்கச் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சி. ஆங்காங்கே கண்களைக் கவரும் சீரியல் செட்டுகளும், கருத்துக்களைக் கவரும் பக்திச் சொற்பொழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டுப் பெரியவர்கள் எல்லாம், சீரியல்களைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு விழா முடியும் வரை கோயிலே கதி என்று இடம்பெயர்ந்துவிட்டார்கள். மதுரையில் இவ்வளவு பெண்கள் இருக்கிறார்களா? என்று வியக்கும் அளவுக்கு சுற்றமும், நட்பும் சூழ சர்வ அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வருகிறார்கள் இளம் மங்கையர்கள்.

முதல் நாள் சிம்ம வாகனத்தில் மீனாட்சியும், கற்பக விருச்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரரும் வீதி உலா வந்தனர். 2-ம் நாளில் அன்ன, பூத வாகனங்களிலும், மூன்றாம் நாள் காமதேனு, ராவண கைலாச பர்வத வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப் பல்லக்கு வாகனத்திலும் சுவாமி - அம்பாள் வீதிஉலா வந்தனர். ஐந்தாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

x