விடுமுறை நாட்களில் சின்னதாய் ஒரு சுற்றுலா, ஆஸ்தான நாயகனின் திரைப்படம், பொழுதுசாயும் வரை மொட்டை வெயிலில் விளையாட்டு, பைக் பயணம் எனப் பறக்கும் இளைஞர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால், இவைகளில் இருந்து மாறுபட்டு, மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணி, விளம்பரங்களை அகற்றும் சூழல் பணியில் ஈடுபட்டு வருகிறது நெல்லையைச் சேர்ந்த இளைஞர் படை!
‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றிப் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால், இன்னொரு புறத்தில் சாலையோர மரங்களைத் தங்கள் கல்வி, வியாபார நிறுவனங்களின் அறிவிப்புப் பலகையாக மாற்றிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
“மரத்தின் பட்டையில் ஆணி அடிப்பதால் வேரில் இருந்து, மற்ற பாகங்களுக்கு மரம், சத்தைக் கடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பலகை, ஒரு கட்டத்தில் இத்துப்போய் ஆணியும் விழுந்துவிட, மரத்தில் ஓட்டை மட்டுமே மிஞ்சும். இதில் தண்டை துளைக்கக்கூடிய புழுக்கள் தங்குவதற்கு வாய்ப்புண்டு. அந்தத் துளைகளில் பாக்டீரியாக்கள் தொற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மரங்களில் ஆணி அடித்து, விளம்பரப் பதாகை வைக்காதீர்கள்” எனப் பன்னெடுங்காலமாகப் பேசி வருகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.