ஆளுக்கொரு பக்கம் ஆட்டையக் கலைக்கிறாங்க!
தூத்துக்குடி அதிமுகவில் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கும் ஏழாம் பொருத்தம். அணிகள் பிரிவினையின் போது, கடம்பூர் ராஜூ ஈபிஎஸ் பக்கமும் சண்முகநாதன் ஓபிஎஸ் பக்கமும் நின்றார்கள். இப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்தல் அனுமதி தராததால், மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிறார் கடம்பூரார். சண்முகநாதனோ, “ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும்” என்று பேசிவருகிறார்!
மகன் திருமணத்துக்கு வருவாரா லாலு?
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும் அம்மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு மே 12-ல் திருமணம். இதில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பவிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, சோனியா, ராகுல், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இவர்களுடன் மத்திய அமைச்சர்களுக்கும் சில மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தீவன வழக்கில் சிறையில் இருக்கும் லாலுவுக்குத்தான் மகனின் திருமணத்தைப் பார்க்க முடியுமோ... முடியாதோ!