‘‘அந்தத் தூதுவன் நானேதான்!’’ - நெஞ்சை நிமித்திச் சொன்னான் குரங்கணி சித்தன்.
நந்திச்சாமி மிரண்டுபோனது கண்கள்ல தெரிஞ்சது.
‘‘நீங்களும் சமாதான நோக்கத்துலதானே இருந்திருக்கணும். இப்ப எதுக்குப் போர் செய்ய வந்தீங்க... உங்க நோக்கம் என்ன..?’’ - நந்திச்சாமியோட கண்களை உத்துப் பாத்துக் கேட்டான் சித்தன்.
அமைதியா நின்ன நந்திச்சாமி, சித்தனையும் பொம்மியையும் மாறிமாறிப் பார்த்து, ‘‘பொம்மி மேல எங்களுக்குப் பிரச்சினை இல்லை. குரங்கணி சித்தனைக் கட்டித் தூக்கிட்டு வாங்கனு எங்க பாண்டியரோட கட்டளை!’’
‘‘ஓஹோ... அப்படியா!’’னு சொன்ன சித்தன், பாறையில இருந்து கீழே குதிச்சு ஒரு புல்லைப் பிடிங்கி, ‘‘இந்தா பிடி... என்னைக் கட்டித் தூக்கிப்போறது இருக்கட்டும். முதல்ல இந்தப் புல்லை பத்திரமா எடுத்துக்கிட்டு இந்த கொட்டக்குடி ஆத்தைக் கடந்துட்டா, நீதான் வீரன்னு ஒப்புக்கிறேன்! என் பின்னாடி வில்லு, அம்புபோட இருக்கிற ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துட்டே இல்லையா..? இப்போ நீ திரும்பிப்பார்... உன்கூட வந்த வீராதி வீரர்களோட கதியைப் பார்...’’
நந்திச்சாமி மெதுவாத் திரும்பிப் பார்த்தான். எல்லா மரத்துலேயும் கயிறு வலைக்குள்ள சேவுகமார்கள் தொங்கிக்கிட்டு இருந்தாங்க.
பொம்மியோட புருசன் கலிங்கா, வில்லை வானத்துக்கு தூக்கினான், ‘‘கயிறை அறுத்துத் தப்பிக்க நெனச்சா, கழுத்துக்கு அம்பு பாயும்!’’
சித்தன், நந்திச்சாமியை இன்னும் நெருங்கி, ‘‘புரிஞ்சு போச்சா... நுண்ணிய பொருளை பருப்பொருளாக்கிப் பார், காரணம் கண்டுபிடி. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை... இதைத் தவிர உங்க சிந்தனையில என்ன பிறந்திருக்கு? சேர, சோழ, பாண்டியர்கள் மூணு பேரும் காலங்காலமா எல்லைத் தகராறு... சண்டை... சாவு! படைவீரர்களுக்குக் கை போச்சு, கால் போச்சு, கண்ணு போச்சு. பல்லாயிரக்கணக்கான உசுரும் போச்சு. குடும்பத்தை இழந்தவங்க எத்தனை பேர்? எத்தனை குழந்தைங்க அனாதை ஆயிருக்காங்க தெரியுமா? ஆசை... பேராசை! விவசாயம், குடும்பம், குழந்தைப்பேறு, கூத்து, சந்தோஷம்னு கிரமமா போற சனங்களோட வாழ்க்கையில உள்ள நுழஞ்சி, அதிகாரத்தைக் கையில வச்சுக்கிட்டு அக்கிரமமா நடந்துக்கிறீங்க. ஒரு இனத்தை அழிச்சுத் தன் இனத்தை வாழ வைக்கணும்னு மமதை உள்ளவனுக்கு, இன்னொரு வல்லவன் வருவான்!’’
இதைக் கேட்டிக்கிட்டு இருந்த கலிங்கா, வில்லுல அம்பைப் பூட்டி சீறினான். ‘‘இவங்கிட்ட என்ன பேச்சு? கழுத்துக்குக் குறிவச்சிருக்கேன். ஒரு விரலை நீட்டுங்க... இவன் கதையை இங்கேயே முடிச்சுர்றேன்!’’
‘‘கொஞ்சம் பொறு கலிங்கா... அவங் களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா?”
கலிங்கா பக்கம் கையை நிறுத்தின சித்தன், நந்திச்சாமியைப் பார்த்து, ‘‘நல்ல எண்ணத்துலதான் சமாதானத் தூதுவனாப் பெரும்பிறவி பாண்டியனைச் சந்திக்கப் போனேன். காலங்காலமா நடந்துக்கிட்டு இருந்த வணிகம் நின்னுப்போச்சே... மறுபடியும் சந்தை கூடணும், சனங்களோட வாழ்க்கை சிறப்படையணும்னு கேட்டுக்கிட்டேன். ஆனா, பாண்டியன் எங்களை பயமுறுத்தற மாதிரி ஈட்டி, கேடயம், கவண், இரும்பு கோடரி, கைவிலங்கு, காற்சங்கிலி, தொழுக்கட்டை எல்லா ஆயுதங்களையும் என்கிட்ட காட்டி, ‘இவ்வளவு ஆயுதங்கள வச்சிருக்கோம்’னு சொன்னான்.
இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக? அப்பவே எனக்குச் சந்தேகம் வந்துச்சு. சேர நாட்டுக்காரங்க அமைதியா இருக்காங்க. அதே நேரத்துல வலுவா இருக்காங்க. அதனால அவங்க மேல இந்த ஆயுதங்களைப் பிரயோகப்படுத்த முடியாது. வேற... மேற்கால நாங்க மட்டும்தான் இருக்கோம். எங்களுக்கு எதிராப் பிரயோகம் செய்யத்தான் கொல்லன் பட்டறையில ராத்திரி பகலா ஆயுதங்கள செஞ்சு குவிக்கிறீங்கனு தெரியும். அப்பதான் ஒரு உபாயம் தோணுச்சு. பல வருஷமா சந்தை கூடாததால எங்களுக்கு வேண்டிய சாமான்களை மலைக்குக் கொண்டுவர முடியல. முதல்ல சந்தை கூடினால் எங்களுக்கு வேண்டிய கத்தி, கம்பி, கடப்பாரை, கயிறு, மம்பட்டி எல்லாம் வாங்கிக் குவிக்கலாமேனு திட்டம் போட்டேன். இது எதுவுமே பொம்மிக்குத் தெரியாது. நீங்க நாடு பிடிக்கிற பேராசைக்காரங்க. சமாதானத்துக்கு வரமாட்டிங்கனு தெரியும். அதனால, எங்களைக் காபந்து பண்ணிக்க நாங்களும் தயாராகிட்டோம்.’’
‘‘கோவம் வேண்டாம்... இவங்கள மன்னிச்சு விட்டுவிடு சித்தா’’னு பொம்மி கெஞ்சினாள்.
‘‘இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. சமாதானத்தைத்தான் விரும்புறேன். எங்க ஆதிவாசிகள் உங்களோட தோட்டங்கள்ல அடிமைகளா வேலை செஞ்சுகிட்டு இருந்ததைப் பார்த்தேன். அவங்கள விடுதலை செய்யச் சொல்லுங்க. அவங்க மலைக்கு வந்த பிறகுதான், உங்களை நான் வீட்டுக்கு அனுப்புவேன். அதுவரை நீங்க எங்களோட விருந்தாளிங்க!’’
கையில கூர்மையான ஆயுதத்தோட இருந்த நந்திச்சாமி, நிராயுதபாணியாய் இருந்த குரங்கணி சித்தனின் சொல்லாயுதத்துக்குக் கட்டுப்பட்டுக் குறுகி நின்னுக்கிட்டு இருந்தான்.
இந்த இடத்துல நான் உங்களுக்கு ஒண்ணு சொல்லணும்...
பெரும்பிறவி பாண்டியன் மரம் வெட்றது, சனங்களை அடிமை ஆக்குறது... இப்படித் தன்னாதிக்கமா ஏன் இவ்வளவு அட்டுழியம் பண்றான் தெரியுமா?
அப்போ, பாண்டிய நாட்டுல நடந்த அரசுரிமை... வாரிசுரிமைப் போராட்டம் தான் காரணம். மதுரையை சுகபோகமா ஆண்டுக்கிட்டு இருந்த சந்திரசேகர பாண்டியன், பல மனைவிமார்களோட உல்லாச வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான். அந்தப்புரத்திலும் பல பெண்கள். பல ஊர்கள்ல பல அரண்மனைகளும், பல வாரிசுகளும் உருவாயிருச்சு.
பாண்டியர் ராஜ்ஜியத்தில கலகங் களும், தலைமைக்குக் கட்டுப்படாம சுயாட்சி சிந்தனையும் கூடிப்போச்சு. ஒரு சிற்றரசன் இன்னொரு சிற்றரசனோட சேர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க சூழ்ச்சி செஞ்சாங்க. மக்கள்கிட்ட வரி வசூல் செஞ்சு மதுரைக்குக் கப்பம் கட்டாம, அவங்களே ஊதாரித்தனமா செலவு செய்ய ஆரம்பிச்சாங்க. தங்களோட ஆட்சிதான் நடக்குதுனு ருசுப்படுத்துறதுக்குக் கோயில்கள்ல தங்கள் மனைவிமார்களோட இருக்கிற மாதிரி உருவச்சிலைகளை வச்சிக்கிட்டாங்க (இப்பவும் பல கோயில்கள்ல இந்த மாதிரி சிலைகளைப் பார்க்கலாம்). பொது இடத்திலும் திருவிழாக்களிலும் தங்களோட உருவத்தைத் திரைச்சீலையில் வரைஞ்சு தொங்கவிட்டாங்க.
அந்தப்புரத்துக்குப் பெரும் பொருள்கள் செலவு செஞ்சாங்க. அரசனை நைச்சியம் பண்ணின மகளிர், பொண்ணும் மணியும் சேர்த்துக்கிட்டு, மாட மாளிகையில ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பிச்சாங்க. ஆடல், பாடல் மகளிருக்குச் செல்வாக்குக் கூடிப்போச்சு. அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர்களைத்தான் எல்லா மண்டலத்திலேயும் அரசியல் அலுவல் நடத்த நியமிச்சாங்க. அடர்ந்த வனத்துல இருந்த தேக்கு, தோதகத்தி, சந்தன மரங்களை வெட்டி ஆடம்பர மாளிகைகள் கட்டி , தங்களுக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்குனு காட்டிக்கிட்டாங்க. இதனாலேயும் பெரும் பொருள் செலவாச்சு. தூதர்களும் ஒற்றர்களும் தன்னிச்சையா செயல்பட்டு, சொந்தபந்தங்களுக்கு சகாயம் செய்தாங்க. (இதெல்லாம் நடந்தது 1520-லிருந்து 1529 வரைக்கும்).
ஆட்சிக் குழப்பம்... அரசியல் குழப்பம்... இதைப் பயன்படுத்தி, அந்தந்த மண்டலத்துல சிற்றரசர்கள் கயமத்தனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கள்வர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் திருட்டு, கொள்ளை, கொலைனு பாவங்கள் செய்ய ஆரம்பிச்சாங்க.
சந்திரசேகர பாண்டியனுக்கு வயசும் ஆயிடுச்சு... நடுக்கம் குடுத்திருச்சு. அமைச்சர்களின் பேச்சைக் கேட்காம, திருச்சியை சொந்தம் கொண்டாடுவதில் வீரசோழனோடு சண்டையில இறங்கிட்டாரு. அவரோட வாரிசுகளும் ‘மன்னர் பதவி எனக்குத்தான்’னு அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தன்தான் இந்தப் பெரும்பிறவி பாண்டியன்!
குரங்கணி சித்தனைத் தூக்கிக்கிட்டு வர மலைக்குப் போன நந்திச்சாமி, என்ன ஆனான் எப்ப வருவான்னு அரண்மனைத் தோட்டத்துல, குறுக்கும் நெடுக்குமா நடந்துக்கிட்டு இருந்தான் பெரும்பிறவி பாண்டியன். அந்தச் சமயத்துலதான், வாசலுக்கு வெளில குதிரை கனைக்கும் சத்தம்... குதிரையிலிருந்து இறங்கின வாட்டசாட்டமான ஒரு ஆள் பாண்டியனைப் பார்த்து ஓடிவந்தான்.
‘‘பாண்டியரே வணக்கம்... மதுரையிலிருந்து வருகிறேன். நான் அரண்மனைச் சேவகன். நமது பாண்டிய மன்னர் சந்திரசேகர பாண்டியர் இரண்டு வார காலமாகக் காணவில்லை. இப்போது திடீரென்று, கிருஷ்ணதேவராயரின் படைகள் மதுரையைக் கைப்பற்ற சோழவந்தான் எல்லையில் காத்திருக்காங்களாம். திருப்பரங்குன்றம் மன்னரும் தென்காசி மன்னரும் அவர்களை எதிர்த்துப் போராடத் துணிந்துவிட்டார்கள். தங்களைப் படைவீரர்களோடு உடனே புறப்பட்டு வரச்சொன்னார்!’’
- சொல்றேன்
-வடவீர பொன்னையா
ஓவியம்: கோ.ராமமூர்த்தி