தாவோ: பாதை புதிது - 8


அது 1952-ம் ஆண்டு. நியூயார்க்குக்கு அருகே உள்ள வனத்துக்குள் வசித்துவந்த ‘‘உட்ஸ்டாக்’ என்ற கலைஞர்களின் சமூகம் அது. அங்கு ஒரு இசையரங்கம்; பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்ட சிறிய அரங்கம். அன்றிரவு அங்கே அரங்கேறிய இசைப்படைப்புகளுள் ஜான் கேஜின் 4'33'' என்ற இசைப் படைப்பும் அடக்கம்.

அந்தப் படைப்பு 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இசைப் படைப்பு என்று ஒரு தரப்பினாலும், ஏமாற்று வேலை என்று மற்றொரு தரப்பினாலும் கருதப்படுகிறது. அந்த இசையை ‘வாசித்த’ பியானோ கலைஞர் டேவிட் ட்யூடர் அதைப் பற்றிக் கூறும்போது “மிக மிக ஆழமான செவியனுபவங்களில் இதுவும் ஒன்று” என்றார்.

அந்த இசைப் படைப்பின் பெயர் ‘நான்கு இசைத் துண்டுகள்’. பிற்காலத்தில் 4'33'' என்ற தலைப்பே அதற்கு நிலைத்துவிட்டது. இசையரங்கின் நடுவே உள்ள மேடையில் அழகும் பழமையும் தொனிக்கும் பியானோ ஒன்று கம்பீரமாக வைக்கப்பட்டிருந்தது. பியானோ கலைஞர் டேவிட் ட்யூடர் வருகிறார். ஸ்டாப்வாட்ச்சைக் கையில் எடுத்து நேரத்தை அதில் குறித்துவிட்டு, திறந்திருந்த பியானோவின் விசைப்பலகையை மூடுகிறார். தொடர்ந்து 4 நிமிடம் 33 நொடிகள் பியானோவை வாசிக்காமலேயே அதன் முன் அமர்ந்திருக்கிறார். அந்த அரங்கின் அமைதியூடே சிறுசிறு சப்தங்கள், சூழ்ந்திருக்கும் வனத்தின் மெல்லிய ஓசை, கண்ணுக்குத் தெரியாத போர்வை கொண்டு கர்நாடக சங்கீதக் கச்சேரியைப் போர்த்தும் தம்பூராவின் கார்வையைப் போன்று அந்த இசைத்துணுக்கின் பின்னணியாக அமைந்த அமைதி... இவைதான் 4 நிமிடம் 33 நொடிகள் நீடித்த இசைத்துணுக்கின் ஸ்வரங்கள். அந்த நேரம் முடிவடைந்ததும் அந்த அரங்கில் உள்ளவர்களிடையே பெரும் குழப்பம். ஒருவர் எழுந்து ஆவேசமாகச் சொல்கிறார், “இந்த ஆசாமிகளையெல்லாம் இங்கிருந்து துரத்தியடிக்க வேண்டும்.”

ஜான் கேஜ் 4'33'' ‘அற்புதமான இசைப் படைப்பா, இல்லை ஏமாற்று வேலையா? இந்தக் கேள்வி கடந்த 65 ஆண்டுகளாகக் கேட்கப்பட்டுவருகிறது. இந்த இடத்தில், இசை பற்றி நாம் வைத்திருக்கும் கருத்துகளைக் கொஞ்சம் பார்க்கலாம். இசை என்பது அது நிகழ்த்தப்படும் நேரத்தில் சுற்றியுள்ள சூழலின் ஓசையிலிருந்து நம் கேட்புக் கவனத்தைத் திருப்பி, தன்மீது குவியச் செய்வது. இதன் மூலம் சூழலின் ஓசையைக் குறைக்கிறது, அல்லது சூழலின் ஓசை மீது நம் கவனம் விழாமல் தடுக்கிறது. ஆக, இசை என்பது அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் மனிதத் தலையீடுதான் என்று அர்த்தம் ஆகிறது. ஜான் கேஜின் இசை நிகழ்வின் நோக்கம் சூழலின் இயல்பான இசையிலிருந்து மனிதத் தலையீட்டை அகற்றுவது.

மனிதர்கள் தங்கள் அகத்தைத் தங்களுக்குள்ளும் சூழலிலும் காண்பவர்கள். அந்த அகத்தைக் குறைக்கும்போது சூழலும், நம் தூய அகமும் தெளிவாக நமக்குத் தெரியும், அல்லது கேட்கும். ஜான் கேஜின் 4'33'' இசை யாருக்கெல்லாம் அற்புதமாகத் தோன்றியதோ, அவர்களெல்லாம் அந்த இசையைக் கேட்டபோது தங்கள் அகத்தின் குறுக்கீட்டை மிகவும் குறைத்துக்கொண்டவர்கள் என்று அர்த்தம். யாருக்கெல்லாம் அது ஏமாற்று வேலை என்று தோன்றியதோ அவர்களுக்கு அகத்தின் குறுக்கீடு (முன்னபிப்பிராயம், ஏமாற்ற உணர்வு) அதிகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

இசை என்பது எழுப்புவது, படைப்பது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். எந்த அமைதி நிலையிலிருந்து இசை தோன்றுகிறதோ, அதை இசையாக யாரும் எண்ணுவதில்லை. ஆகவே, எது இருக்கிறதோ அது ‘இன்மை’. தாவோவின் மொழியில் சொல்வதென்றால் ‘இருத்தலின்மை’. அந்த இன்மையிலிருந்து எது படைக்கப்படுகிறதோ அது ‘இருத்தல்’. அந்த வகையில், சீனத் தத்துவம், ஜென் பவுத்தம் ஆகியவற்றின் தாக்கம் பெற்ற ஜான் கேஜின் இசை ‘இன்மை’யின் இசை. தர்க்கரீதியில் பேசும்போது அது ஏமாற்று வேலை என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், நம் மூளையில் பழக்கப்பட்டு, கெட்டித்தட்டிப்போன அந்தத் தர்க்கத்தை ஓங்கியடித்து உடைப்பதற்கான கலைத் தந்திரம்தான் ஜான் கேஜின் முயற்சி. எந்த மூலத்திலிருந்து இசை எழுகிறதோ அதைப் பற்றிய நினைவூட்டல்.

இப்போது ஒரு கேள்வி. அங்கே ஜான் கேஜ் ஏதும் செய்யவில்லையே, அது எப்படி அவருடைய இசையாகும்? ஏதும் செய்யாமல் இருப்பதும் இசையே என்பதை முதலில் செய்ததால் அது அவருடைய இசை. மேலும், பீத்தோவனுடைய ஒரு இசைத்துணுக்கை எப்போது நிகழ்த்தினாலும் பெரிதும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், ஜான் கேஜின் இசைத்துணுக்கு ஒவ்வொரு முறையும் புதிதாகத்தான் இருக்கும். மிகவும் தொன்மையான இன்மைதான் எப்போதும் புதிதானதும்கூட என்பதை ஜான் கேஜ் நமக்கு நினைவூட்டுகிறார்.

எந்த முன்னபிப்பிராயமும் இல்லாமல் ஜான் கேஜின் 4'33'' இசைத் துணுக்கைக் கேட்டுப்பாருங்கள். அது நம்முள் ஆழமான அனுபவத்தை ஏற்படுத்தும். உங்கள் ஸ்டாப்வாட்ச்சில் 4 நிமிடங்கள் 33 நொடிகளைக் குறித்துவைத்துவிட்டு அமைதியாகச் சூழலின் இசையைக் கேட்க முடிந்தால் நீங்கள் கேட்பது எதுவும் ஜான் கேஜின் இசைதான்; அது உங்களுடைய இசையும்தான்; இந்தப் பிரபஞ்சத்தின் இசையும்தான். (யூடியூபில் John Cage 4'33'' என்று தேடினால் இந்த இசையைக் ‘கேட்கலாம்’).

தாவோவின் இந்த அதிகாரத்தில் வரும் இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொண்டதுதான் ஜான் கேஜ் செய்தது. இருத்தலின்மையைத் துண்டாக வெட்டி அதன் தொடக்கத்திலும் முடிவிலுமாகக் கால எல்லைக்கோட்டை வரைந்தார். அந்த எல்லைக்கோடுதான் இருத்தல். இன்மையைச் சுற்றிலும் பானையின் ஓட்டினை அமைப்பதன்மூலம் பானையை உருவாக்குவதுபோல். இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளும் அப்படியே; இருத்தலால் சூழப்பட்ட இருத்தலின்மை என்கிறது தாவோயிஸம்.

யெஹூதா அமிக்ஹாயின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

“திறந்த... மூடிய... திறந்த. நாம் பிறக்கும் முன்னே இந்தப் பிரபஞ்சத்தில்

எல்லாமே திறந்தபடி, நாம் இல்லாமல்.

நாம் வாழும் காலம் வரை எல்லாமே மூடப்பட்டு, நம்முள்.

நாம் இறக்கும்போதோ எல்லாமே மீண்டும் திறந்தபடி.

திறந்த மூடிய திறந்த. அவ்வளவுதான் நாமெல்லாம்.”

சோப்புக் குமிழி. எங்கும் இருக்கும் காற்றோடு இன்மையையும் சோப்பு நீர்ப் படலம் சூழ, குமிழி உருவெடுக்கிறது. அது தோன்றுவதற்கு முன்பு, அதனால் சூழப்படும் இடத்தில் இருக்கும் பிரபஞ்சம் திறந்திருந்தது. குமிழ் தோன்றியதும் அந்த இடத்தின் பிரபஞ்சம் மூடப்பட்டுவிடுகிறது. தன் கொள்ளளவுக்குள் இந்தப் பிரபஞ்சத்தைக் கொள்கிறது. அது வெடித்தவுடன் மீண்டும் திறந்ததாய் மாறிவிடுகிறது. நாமும் அப்படியே. பிரபஞ்சம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நமக்குள் வைத்து மூடிக்கொள்கிறோம். நாம் காண்பது, நாம் கருத்தில் கொள்வது எல்லாம் நம் ஒவ்வொருடைய தனிப்பட்ட பிரபஞ்சமே தவிர, உண்மையில் இருக்கும் பிரபஞ்சம் அல்ல. பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை கண்ணை திறந்துகொண்டே யானையைத் தடவிப் பார்ப்பவர்கள்தான் நாம்.

இருத்தல் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறது. எல்லாப் பயன்களும் இருத்தலால்தான் என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் இருத்தலின்மை, இருத்தல் இரண்டின் ஊடாட்டம்தான் இந்தப் பிரபஞ்சம். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்காது. இருத்தலையும் இருத்தலின்மையையும் இயற்கை (அதாவது, தாவோ) கலந்திருக்கும் விகிதத்தில் இம்மியளவு பிசகினாலும் ஏதும் தோன்றியிருக்காது. அந்த விகிதத்தைப் பிடிப்பவர்தான் தாவோ ஞானி!

-ஆசை

அதிகாரம் 11

ஆரக்கால் முப்பதும்

சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன;

ஆனால், சக்கரத்தின் பயன்

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.

பாண்டம் பாண்டமாகக்

களிமண் வனையப்படுகிறது;

ஆனால், பாண்டத்தின் பயன்

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.

வீட்டுச் சுவர்களில்

வாயிலுக்காகவும் ஜன்னலுக்காகவும்

வெற்றுவெளியை விடுகிறோம்;

ஆனால், வாயிலும் ஜன்னலும்

வெற்றுவெளி என்பதால் பயன்படுகின்றன.

எனவே, ஒரு பக்கம்

இருத்தலின் பலன் கிடைக்கிறது;

இன்னொரு பக்கம்

இருத்தலின்மையைப்

பயன்படுத்திக்கொள்கிறோம்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

(தாவோ தே ஜிங்கின் அடிப்படையான பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுவதால் 6-வது அத்தியாயத்திலிருந்து 11-வது அத்தியாயத்துக்குத் தாவுகிறேன்.)

(உண்மை அழைக்கும்...)

x