ரஜினியின் ‘ட்வீட்’... பாஜக-வின் வார்த்தைகள்தான்; எதிர்ப்புச் சின்னம் ‘ஷூ’ - அமீர் சீற்றம்!


சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகப் போராட்டம், பிரதமர் மோடி சென்னை வருகையில் கருப்புக் கொடி என ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்குப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இப்போராட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், தங்கர்பச்சான், கவுதமன் ஆகியரோடு அமீரும் கைதாகி விடுதலையானார். “உங்கள் பேரவையின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன...?” என்பதிலிருந்தே அமீரிடம் பேசத் தொடங்கினோம்.

“இன்னும் வழக்குகள் உள்ளிட்ட விஷயங்களிலிருந்து வெளியே வரல. காவல்துறை போட்ட வழக்கை முடிச்சுட்டாங்களா... இல்லை புதுசா ஏதேனும் போட்டிருக்காங்களானு தெரியல. தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவைக் கூட்டத்தை மறுபடியும் கூட்டலாம்னு இருக்கோம். அதில் பேசித்தான் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கணும்” என்று ஆதங்கம் கலந்த கோபத்துடனே பேசினார் இயக்குநர் அமீர்.

போராடி உணர்வை வெளிப்படுத்துவது தேவைதான். ஆனால், ஐபிஎல் போராட்டத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, சிஎஸ்கே அணியினர் மீது காலணி வீசப்பட்டது இதெல்லாம் சரிதான் என நினைக்கிறீர்களா?

ஏன் நீங்களும் ரஜினிகாந்த் மாதிரியே கேள்வி கேட்கிறீங்கனுதான் புரியலை. அமைதியா போராட்டம் நடத்துனவங்களை போலீஸ்தான் அடிச்சாங்க. இவங்க பதிலுக்குத் தாக்கினாங்க. போராட்டக் குழுவோட பனியனைப் போட்டிருந்தவங்களை, கிரிக்கெட் பார்க்க வந்தவங்க கேலி செஞ்சாங்க. ஐபிஎல் பனியனைப் போட்டுகிட்டு வந்த அவங்களுக்கு இவங்களும் பதிலடி கொடுத்தாங்க. இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே..? நாங்க ஏதோ வெளிமாநிலத்துல இருந்து உங்களுக்காக ஆதரவு கேட்டு வந்தது போலவே கேட்கிறீங்களே... எல்லாருமே இந்த மண்ணுக்கான பிரச்சினையைத்தான் பேசுறோம்.

x