அக்காவுக்கு அழுகை.. தங்கைக்கோ புன்னகை..


இரும்பு – காந்தம் இரண்டுக்குமான ஈர்ப்பைப்போல, இந்திய சினிமாவுக்கும் கர்நாடகத்தின் மங்களூருக்கும் நீண்ட காலமாகவே நெருக்கமான உறவு உண்டு. பாலிவுட்டை கதற வைக்கும் தீபிகா படுகோன், ப்ரீதா ஃபிண்டோ, ஐஸ்வர்யா ராய் தொடங்கி, டோலிவுட்டை தற்போது கலங்கடித்துவரும் பூஜா ஹெக்டே வரை, இருபதுக்கும் அதிகமான இறக்கை இல்லாத ஃபேரி ஏஞ்சல்களை இந்திய சினிமாவுக்கு ஈன்றிருக்கும் ஊர், மங்களூர். அங்கிருந்து புறப்பட்டு வந்து 50 மற்றும் 60-களின் தென்னிந்திய சினிமாவுக்கு அழகூட்டிய சகோதரிகள் இருவர். ஒருவர் பண்டரிபாய், மற்றவர் அவரது தங்கை மைனாவதி.

அக்கா பண்டரிபாய் சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துப் பெற்ற பெயருக்கு இணையாக, அவர்களுக்கு அம்மாவாக நடித்துப் பெற்றதுஅதைவிட உயர்ந்த புகழ். இந்திய சினிமாவின் சிறந்த அம்மாவாகப் பெயர்பெற்ற பண்டரிபாய், இந்திப் படவுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்கபூருக்கும் அன்னையாக நடித்தவர். அப்படிப்பட்டவர் நடிக்க வந்ததே ஒரு விபத்து என்றால் அக்காவைத் தொடர்ந்து மைனாவதி நடிக்க வந்ததும் ஓர் அழகிய விபத்து!

பண்டரிபாயின் அப்பா ரங்காராவ் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியர். ஹரிகதை நிகழ்த்துக் கலைஞர். தனது, அம்பா பிரசதிகா நாடக மண்டலி குழுவுடன் ஹரிகதை கலாச்சேபம் செய்வதிலும் ‘கிருஷ்ண விஜயம்’ நாடகத்தை ஊர் ஊராகநடத்துவதிலும் புகழ்பெற்றிருந்தார். அது 1942-ம் வருடம். தனது சொந்த ஊரான பத்கலில் கிருஷ்ண விஜயம் நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். அரையணா டிக்கெட் வாங்கிக்கொண்டு நாடகத்தைப் பார்க்க அரங்கத்துக்குள் மக்கள் குவிந்துவிட்டனர். 7 மணிக்கு நாடகம் தொடங்கும். 5 மணிக்கே நடிகர்கள் ஒப்பனை செய்துகொள்ளத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், பாலகிருஷ்ணர் வேடம் போடவேண்டிய 12 வயது பெண் பிள்ளை 6 மணி ஆகியும் வரவில்லை.

அதன்பிறகு அவள் வந்து, உடல் முழுவதும் அவுரிச் செடியின் சாயத்தால் நீல வண்ணம் பூசி கார் வண்ணக் கண்ணனாக மாறவேண்டும். இனி அவள் வருவாள் என்ற நம்பிக்கை போய்விட்டது. நல்ல பாடும் திறமை பெற்றிருந்த தனது மகனின் முகத்தைத் தவிப்போடு பார்த்தார். நாரதர் வேஷத்துடன் நின்றுகொண்டிருந்த மகனோ,  “பதற்றப்பட வேண்டாம் தந்தையே… தங்கைக்கு வேஷம் கட்டலாம்” என்றான். மகனின் சமயோஜித ஐடியாவில் வியந்துபோன ரங்காராவ், தனக்கு ஆசை ஆசையாய் கூத்துக் கட்டைகளை தோளில் கட்டிவிடும் மகள் பண்டரிபாயை பாலகிருஷ்ணன் ஆக்கினார்.

x