சிதம்பரம் வண்டிகேட் பாலமான் ஆற்றங்கரையில் உள்ள அரசமர பிள்ளையார் கோயில். அங்கு, கிருஷ்ணரும் முருகரும் சிலைகளாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டிருந்த ராஜுவும், கணேஷும் கருமமே கண்ணாயிருந்தனர். அவர்களருகே ஐந்து சின்னச் சின்ன டப்பாக்களில் பலவண்ணப் பொடிகள். அவற்றைக் கையிலெடுத்து குழைத்து வேறுபல வண்ணங்களாக்கி இருவரும் தங்கள் முகத்தில் பூசுகிறார்கள்.
சேலையில் தைக்கப்பட்ட தொளதொள பேன்ட், வண்ணமாய் ஜொலிக்கும் ஜிகினா வைத்து தைக்கக்கப்பட்ட மேல்சட்டை, இடுப்பில் சாயம்போன, சுருங்கிக் கசங்கிய ஒரு சால்வை, அதேபோல இன்னொன்று - மேலே போர்த்திக்கொள்ள. இறுதியாக துணியால் ஆன கிரீடங்களை தரித்ததும் ராஜுவும், கணேஷும் மறைந்து லட்சுமணனாய், ராமனாய் மாறுகிறார்கள்.
ராமருக்கு கிருதா வரைய லட்சுமணன் உதவுகிறார். சிறிய குச்சிகளைக் கொண்டே கிருதா, புருவக்கோடுகள் வரையப்படுகின்றன. அவற்றைத்தவிர அங்கு வேறெந்த ஒப்பனை பொருட்களும் இல்லை. உடைகள் சற்றே கிழிந்திருந்தாலும் முகங்கள் அசல் தெய்வக்களையுடன் பளபளத்தன.
லட்சுமணரின் கைகளில் ஆர்மோனியம். ராமரின் கைகளில் டோலக். ‘ராமராம, ராமராம, ராமபக்த ஆஞ்சநேய...’ என்ற பாடலுடன் ஆர்மோனியமும், டோலக்கும் சேர்ந்து ஒலிக்க கடைத்தெருவுக்குள் நுழைகிறார்கள். ஐந்தோ, பத்தோ கடைக்காரர்கள் மனமுவந்து கொடுப்பதை ஒரேமாதிரியான முகபாவத்துடனுடம் உணர்வுடனும் வாங்கிக் கொள்கிறார்கள்.