தலையில் செங்கல்.. மனதில் இலக்கியம்..!- கனவுகளை சுமக்கும் ஒரு கட்டிடத் தொழிலாளி


குறுகலான அந்த மலைவழிச் சாலை, அடர்த்தியான ரப்பர், தேக்கு தோட்டங்களைக் கிழித்துக்கொண்டு ஏறி, இறங்கிச் செல்கிறது. சற்று தூரத்தில் ஒரு புதிய வீட்டின் கட்டுமானப்பணி. அங்கே, அழுக்குச் சட்டையும் தலையில் செங்கலுமாய் நிற்கும் கட்டிடத் தொழிலாளி ஷாஃபி நம்மைப் பார்த்ததும், கையால் சைகை காட்டுகிறார்.

படைப்புலகம் கவனிக்கத் தவறிய அந்தப் படைப்பாளி,  “இடத்தைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு போனீங்களோ..?” என்று வாஞ்சையுடன் விசாரிக்கிறார். ‘இல்லை’ என்று தலையாட்டிவிட்டு கட்டுமானப்பணி நடக்கும் வீட்டிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து பேசத் தொடங்கினோம்.

மணி அப்போது காலை 7.30.  கோடைகாலம் என்பதால், வெயிலுக்கு முன் வேலையை ஆரம்பித்தால் சிரமம் இருக்காது என்று மேஸ்திரி சொன்னதால் காலையிலேயே கட்டிட வேலைக்கு வந்துவிட்டார்களாம். சீக்கிரமே வேலையை ஆரம்பிப்பதால் மதியம் மூன்று மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் எழுத்துப் பணிகளைச் செய்ய வசதியாக இருக்கிறது என்கிறார் ஷாஃபி.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், சிறுமாவிளையைச் சேர்ந்தவர் ஷாஃபி. அப்பா மைதீனுக்கு மீன் பிடி வேலை. ஷாஃபிக்கு மூன்று அக்கா, ஒரு தம்பி. வீட்டில் மொத்தம் ஏழு பேர். அப்பாவின் குடும்ப பாரத்தைத் தானும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள நினைத்த ஷாஃபி, பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார்.

x