அம்மாத்தூரணி
“ஆனைத்தண்டி ஆட்டுரலு ஆட்டுப் புழுக்கை கைவிரலு” - மாவாட்டும் சிவபாக்கியம் அக்காவைப் பார்த்துக் கத்திக்கொண்டே ஓடும் முத்துப்பாண்டி யாருக்கும் பயப்பட மாட்டான். “எலேய்... வந்தேன்னா... ஒன்னிய ஆஞ்சு, அவிச்சு, அந்தப் புழுக்கையோட பொதைச்சுடுவேன்”னுவா அந்த அக்கா. வாய்தா அப்டிச் சொல்லுமே ஒழிய கண்ணுல பாண்டி மேல ஒத்தக் கோபம் இருக்காது. “பீப்பாயி ஆட்டுக்கல்லு, பீர்க்கங்கா கைவிரலு”னு மறுக்கா கத்திட்டு வந்து சேருவான்.
பாண்டிக்கு அம்மாத்தூரணி கரை மேல ஒக்காந்துக்கிட்டு ஆட்கள வம்பிழுப்பதுன்னா அம்புட்டு இஷ்டம். நெதமும் ஒரு செட் சேத்துக்கிட்டு போயிருவான். அங்கன போய் சேர்றதுக்கு முன்னாலயே அதகளத்த ஆரம்பிச்சுருவான்.
அவுச்ச வேர்க்கடலை, மொச்சப்பயறு இரண்டையும் டவுசர் பாக்கெட்டுக்குள்ள ரொப்பி வச்சுக்குவான். நல்லாத் தண்ணில தலைய நனைச்சிப் படிய சீவி, குட்டிகுரா பவுடர அப்பிக்குவான். பாண்டியோட அம்மா பூ கட்டி விக்கிறதால, மருக்கொழுந்து சிலத எப்பவுமே தண்ணில நனைச்சு வச்சிருப்பான். அத எடுத்துத் தெளிச்சுக்குவான். சமயத்துல நா சீக்கிரமா அவன் வீட்டுக்குப் போயிட்டா, “இந்தா நீயும் கம்மங்கூட்ல தெளிச்சுக்கோ பூந்தி”னு எனக்கும் தருவான்.