காவிரி மீண்டும் தீப்பற்றியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பான பிரச்சினையால் சாலை மறியல், ரயில் மறியல் எனப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது தமிழகம். உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவைத் தாண்டியும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காதது, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. நீதிமன்றத்தின் செயல்பாடு சரிதானா? உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துருவிடம் பேசினோம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த அளவுக்குச் சரியானது?
இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னால் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்திற்கு எத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலேயே எந்த நாட்டிலும் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த அளவுக்குப் பரந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. நாடாளுமன்றம், சட்ட சபைகள் இயற்றும் சட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள்தான் இருக்கிறதா என்று சரிபார்க்கும் உச்ச பட்ச அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயும் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. குடியரசுத் தலைவர் கேட்கும்போது சட்டப் பிரச்சினைகளில் ஆலோசனை வழங்கவும், அதற்கெல்லாம் மேலாக இந்தியாவிலுள்ள எந்தவொரு நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் அளிக்கக்கூடிய தீர்ப்புகளைச் சீராய்வு செய்வதற்கும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கக்கூடிய தீர்ப்புகள் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் தவறேதும் ஏற்படாது என்று சொல்ல முடியாது. ஆனால், உச்ச நீதிமன்றமே தவறிழைத்தால் அதன் தீர்ப்புகளை ரத்து செய்வதற்கு அதற்கு மேலும் ஒரு நீதிமன்றம் இல்லை. எனவே, அந்த நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் தவறென்று நாம் நினைத்தாலும் அதுதான் சட்டம். அதிகபட்சமாக தீர்ப்பளித்த நீதிபதிகளிடமே சீராய்வு மனு போட்டு விளக்கம் கேட்கலாம். அதற்கு மேல் முறையிடுவதற்கு வேறு அமைப்பு இல்லை. இந்தப் புரிதலுடன்தான் எந்தப் பிரச்சினையையும் நாம் அணுக வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என்கிறார்கள், இது உண்மையா, விளக்கம் அளிக்க முடியுமா?