பயமறியா பாரதி!


எம்.ஜி.ஆர் ‘மக்கள் திலகமாக’ ஒளிரத் தொடங்கியிருந்த எழுபதுகளின் நடுப்பகுதி. பி.ஆர். பந்துலு தயாரித்து, இயக்கிய ‘நாடோடி’ படத்தின் படப்பிடிப்பு, விஜயா வாகினி ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கி செட்டுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். கால்மேல்

கால் போட்டபடி அமர்ந்திருந்த கதாநாயகியை ஆச்சரியமாகப் பார்த்தபடி மேக்-அப் அறைக்குச் சென்றார்!

எம்.ஜி.ஆர் வருவதைக் கவனிக்காத அவர், காலை கீழே இறக்காமல் கம்பீரமாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்தப் படத்தின் மூலம்தான் அவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். முன்தினம் தொடங்கிய படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரை அவருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். தமிழகமே எம்.ஜி.ஆரை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பெண் இப்படி அழுத்தம் திருத்தமாக உட்கார்ந்திருக்கிறதே என்று பதைபதைத்து ஓடிவந்த ஃப்ளோர் மேனேஜர், “வாத்தியார் முன்னால கால்மேல் கால் போட்டு உட்காராதீங்க மேடம்” என்றார். “கால் மேல் கால்போட்டு உட்காருவதுதான் எனக்கு வசதி. எம்.ஜி.ஆருக்காக அதை மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படி உட்கார்வது தவறு என்று எம்.ஜி.ஆர் சொல்லட்டும்” என்று தில்லாகக் கூறிய அந்தக் கதாநாயகி பாரதி.

தனக்குப் பிடித்த விதத்தில் உட்காருவதில் துணிவைக் காட்டிய அவர், அத்துடன் நிறுத்திக்கொண்டுவிடவில்லை. ‘கன்னடப் பைங்கிளி’யாக பெயர்பெற்றுவிட்ட சரோஜோதேவி, தன்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருந்தும் அந்தப் படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் பாரதியை அழைத்த எம்.ஜி.ஆரும் இயக்குநர் பந்துலுவும் “உன் பெயரை தமிழ்ப் பட உலகத்துக்கு ஏற்றார்போல் மாற்றவேண்டும்” என்றார்கள். கொதித்தேபோனார் பாரதி.

x