வேலைவாய்ப்பின்மை எனும் கூட்டுத் துயரம்!


உலகிலேயே வேலை கிடைக்காதவர்கள் அதிகம் வாழும் நாடாகிவருகிறது இந்தியா. மத்திய தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பெரியதொரு சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அட்டவணையில் 60-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.  உலக நாடுகளின் பசி அட்டவணையில் இந்தியா 100-வது இடத்துக்கு இறங்கிவிட்டது.

உலகில் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னணியில் இருக்கும் காலகட்டத்திலேயே இதுவும் சேர்ந்து நடந்துகொண்டிருப்பதுதான் விசித்திரமான கொடுமை!

இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது சமத்துவம் அற்றதாக ஊதிப் பெருகுவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவில் 1% பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த

செல்வத்தில் 58%-ஐ தங்கள் வசம் வைத்துள்ளனர். ‘முதல் 57 பெரும் பணக்காரர்கள் வைத்துள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு, இங்குள்ள 70% மக்களுடைய சொத்துகளுக்குச் சமமானது’ என்று ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பு தெரிவிக்கிறது. மறுபுறம் சுயவேலைகள் அருகி, ஏற்கெனவே உள்ள பணியிடங்களும் ஆவியாகின்றன. நாட்டு மக்களில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிற சூழலில், அதிகரிக்கும் இந்த ஏற்றத்தாழ்வும் வேலைவாய்ப்பின்மையும் பெரிய ஆபத்துகள்.

x