தாவோ: பாதை புதிது - 6


அங்குலப் புழுவைப் பற்றி ஏ.கே. ராமானுஜன் ஒரு கவிதை எழுதியிருப்பார். அதைக் கதையாகவும் சொல்லலாம். அங்குலப் புழுவொன்று இந்த உலகத்தையே தன்னால் அளக்க முடியும் என்று பீற்றிக்கொண்டு திரிகிறது. தனது பெருமையை ஒரு சிட்டுக்குருவியிடம் நிலைநாட்டி உயிர் பிழைக்கிறது. ஒருநாள் அதைக் கொத்தித் தின்ன ஒரு குயில் வருகிறது. உயிர் பிழைக்க வேண்டி, அங்குலப் புழு குயிலிடம் தன் திறமையைப் பற்றிச் சொல்கிறது.

“அப்படியானால் என் பாடலின் நீளம் என்னவென்று அளந்து சொல். அளக்க முடியவில்லை என்றால் உன்னைக் கொத்தித் தின்றுவிடுவேன்” என்று சொல்லிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறது குயில். அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அங்குலப் புழுவுக்குக் குயிலின் பாடல் போலத்தான் நமக்கும் வந்துசேர்கிறது மரணம்.

இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை மிகவும்விசேஷமானவர்கள் என்று கருதிக்கொள்கிறோம். “பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான் நாம்” என்று கார்ல் சேகன் கூறியதைப் போல்தான் நாமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொன்றுக்கும் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கிறோம், கொடுக்கிறோம்.  கடவுளை நம் உருவத்தில்படைத்திருப்பது போல் பிரபஞ்சத்தையும் நம் உருவத்தில் படைக்கும் செயல்தான் இது. ஆனால், பிரபஞ்சம்நாம் கொடுக்கும் அர்த்தமாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை. அது வெறுமனே இருக்கிறது!

பிரபஞ்சத்தின்மீதும் இயற்கையின்மீதும் நம் உணர்வுகளை ஏற்றிவிடுகிறோம். மழையின் கருணை, மழையின் கோபம், இயற்கையின் சீற்றம் என்றெல்லாம் கூறுகிறோம். சிவாஜி கணேசன் குமுறும்போது அவருக்கு நடந்ததைக் கண்டு, அவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும், வானமும் தன்னளவில் குமுறுகிறது. கதாநாயகி காதல் பூரிப்பை வெளிப்படுத்தி ஆடிப் பாடும்போது இயற்கையும் பூத்துக்குலுங்குகிறது.

உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது. அதற்குக் காதலோ கருணையோ கோபமோ வருத்தமோ ஏதும் கிடையாது.

இயற்கையை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்போது கருணை என்கிறோம், காதல் என்கிறோம். பயன்படுத்திக்கொள்ள முடியாதபோது கோபம் என்றோ சீற்றம் என்றோ கூறுகிறோம். இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும் ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும் ஒன்றுதான்.

முற்கால சீனாவில் ஒரு மரபு இருந்தது. மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்கு அது. அந்தச் சடங்கின்போது வைக்கோலால் செய்யப்பட்ட நாயைப் பட்டுத்துணியாலும் ஏனைய விலையுயர்ந்த பொருட்களாலும் அலங்கரித்து பலிபீடத்தில் வைப்பார்கள். சடங்கு முடிந்த பிறகு அந்தச் சடங்கில்பங்கேற்றோர் அந்த வைக்கோல் நாயைப் போட்டு மிதித்து நார்நாராகப் பிரித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அதை எடுத்துக்கொண்டுபோய் அடுப்பெரிக்கப் பயன்படுத்துவார்கள்.

சடங்கு நேரத்து வைக்கோல் நாய் நம் வாழ்க்கை; சடங்குக்குப் பிந்தைய வைக்கோல் நாயின் நிலைதான் மரணம். யாரும் நம்மைப் போட்டு மிதித்துப் பிய்த்துப்போடுவதில்லை என்றாலும் நம் உடல் அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து மறுசுழற்சியடைகின்றன. ஷேக்ஸ்பியர் உடலில் இருந்த அணுக்களில் சுமார் நூறு கோடி அணுக்களாவது, இயற்கையின் மறுசுழற்சி முறையில் நம் ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஷேக்ஸ்பியரின் உடல் என்பதால் இயற்கை அதற்குத் தனிமதிப்புக் கொடுத்துப் பத்திரப்படுத்திவைக்கவில்லை.

அவர் உடலின் அணுக்களும் ஆதியில் ஏதாவது ஒரு விண்மீன் வெடிப்பிலிருந்து வந்துசேர்ந்தவைதான். மரணம் நம்மை மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர்களையும் விண்மீன்களையும்கூட மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்போல் ஆக்கிவிடுகிறது.

உன்னதக் கருணைபொதுவாக, மனிதர்களுக்குரிய கருணையை இயற்கையின் மீது நாம் ஏற்றிவைக்கிறோம். நம் வீட்டினர் அளவிலோ, நம் தெரு, நம் மாநிலம், நம் நாடு இன்னும் சற்றுப் பரந்த அளவில் மனித குலத்தின் மீது என்று நம் கருணை நம் வட்டத்துக்குள் நின்றுவிடுகிறது. ஆகவே, மனிதர்களின் கருணை பாரபட்சமானது. அதை எப்படி இயற்கை மீது நாம் ஏற்றிச்சொல்ல முடியும் என்கிறது தாவோயிஸம். உன்னதக் கருணை என்பது கருணையாகவே இருப்பதில்லை என்கிறது.

இயற்கை என்பது அளவற்ற, திறந்த இருப்பு. அதன் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டு உயிர்கள் தோன்றுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழக்கூடிய கோள்கள் பல கோடிக் கணக்கில் இருக்கலாம் என்று கணக்கீடு செய்யப்பட்டாலும், மனித அறிவுக்கு எட்டியவரை, பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன.

பிரபஞ்சத்தின் பெரும்பகுதி உயிர் வாழ்க்கை தோன்றமுடியாத அளவில் இருக்கிறது. சாத்தியமான மிகச்சிறிய இண்டு இடுக்கில் தோன்றிய உயிர்கள் நாம். அந்த இண்டு இடுக்கின் இயல்பான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு உயிர் ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறோம்.

ஒளியை வெளிப்படுத்துவது சூரியனின் இயல்பு. அதைப்பயன்படுத்திக்கொள்வது உயிர்களின் இயல்பு. இதுபோன்று இயற்கையின் அம்சங்களைத் தடையில்லாமல், அவற்றின் போக்கில் பயன்படுத்திக்கொள்ளும்போது பெரிதும் பிரச்சினை ஏற்படுவதில்லை.

இயற்கையின் போக்கில் சரியாகப் போகத் தவறும்போதும், இயற்கையின் வளங்களை மனிதர்களோ வேறு உயிர்களோ ஏகாதிபத்தியம் செய்து கொள்ளும்போதும் பெரிய அளவில் சமனின்மை ஏற்படுகிறது. அது இயற்கையையும் பாதித்து மனிதர்களையும் ஏனையஉயிரினங்களையும் பாதிக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி இயற்கையாகவே ஏற்படும் அழிவுகளும் இருக்கின்றன.

இயற்கையைப் போலத்தான் தாவோ ஞானி. அவர் யார் மீதும் கருணை காட்டுவதில்லை. ஆனால், அவருடைய ‘உன்னதக் கருணை’ வைஃபை மாதிரி இயல்பாக அலைவீசிக்கொண்டிருக்கிறது. அந்தக் கருணையை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்கிறது தாவோயிஸம். அதனால்தான் ‘ஞானிக்கும் தன் கருணை சொந்தமில்லை’ என்கிறார் லாவோ ட்சு.

சடங்கின்போது வைக்கோல் நாய் மதிக்கப்படும் அளவுக்குச் சடங்கு முடிந்ததும் அது மதிப்பிழக்கிறது. வாழ்க்கைக்கு இதைத் தாண்டி எந்த அர்த்தத்தையும் கற்பித்துக்கொள்வதில்லை ஞானி. மனிதர்கள் கூறும் கருணையும் கோபமும் இன்றி, சூரியன் இருப்பதுபோல் ஞானியும் அப்படியே இருக்கிறார். வைக்கோல் நாய்கள் வாழவும் ஞானி உதவுகிறார், மடிந்துபோகவும் ஞானி உதவுகிறார், தன்னியல்பிலேயே. இப்படியாக, அவருடைய ‘கருணையில்லாக் கருணை’ ஒரு மனிதருக்கோ ஒரு தேசத்துக்கோ உரித்தானதாக மட்டும் அல்லாமல் பிரபஞ்சம் அளாவுவதாக உள்ளது, இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே. 

சித்தர் பாடல்கள் பலவற்றைப் போல மனித வாழ்க்கையை மறுக்கும் தத்துவம் அல்ல தாவோயிஸம். வைக்கோல் நாயாக அலங்கரிக்கப்படும்போது அந்தக் கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதைப் போல, இறுதியில் தூக்கியெறியப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தாவோயிஸம் கூறுகிறது. வாழ்க்கை, மரணம் இரண்டையும் பற்றி ரொம்பவும் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்கிறது.

இந்தப் புரிதல் ஏற்படும்போது மனம் ‘காலி’யான நிலையை அடைகிறது என்கிறது தாவோயிஸம். மனதில்ஏற்படும் இதே நிலையைப் போல இயற்கையில் இருக்கிறது படைப்பூக்க வெறுமை. அதைத்தான் ‘கொல்லர் துருத்தி’ மாதிரி என்கிறார் லாவோ ட்சு. ‘அக்கார்டியன்’ இசைக் கருவியைப் போல துருத்திக்குள் இருப்பது வெற்றிடம்தான். அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தித் தீயை வளர்த்து, அதன் மூலம் கொல்லர்கள் இரும்புக் கருவிகள் செய்வார்கள்.

புல்லாங்குழலில் வெற்றிடத்தைப் பயன்படுத்திதானே இசையை உருவாக்குகிறோம். இயற்கையைப் போன்ற படைப்பூக்க வெறுமை நிலைக்கு மனதைக் கொண்டுசெல்லும்போது, அதனால் செய்ய முடியாததே ஏதும் இல்லை என்கிறது தாவோயிஸம். இந்தப் பிரபஞ்சமே அப்படிப்பட்ட ஒரு வெறுமை நிலையிலிருந்து தோன்றியதுதானே!

மனதைக் காலியாக்கியவர் வார்த்தைகளை அடுத்தவர்களின் மனதுக்குள் கொட்டமாட்டார். ஏனெனில், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவரிடம் ஏதுமில்லை, அவரது ‘காலி’த்தன்மையைத் தவிர.

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 5

வானக, வையகத்திற்குத்

தங்கள் கருணை சொந்தமில்லை.

அவற்றுக்கு

அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

ஞானிக்கும்

தன் கருணை சொந்தமில்லை.

அவனுக்கு

மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்திற்கு இடைப்பட்ட வெளி

கொல்லர் துருத்தி மாதிரி இருக்கிறது.

காலியாகத் தோன்றினாலும் அந்த வெளியில்

இல்லாதது ஒன்றும் இல்லை.

இயக்கப்பட்டால் அது

இன்னும்கூட நிறைய உருவாக்கும்.

அதிகம் பேசுகிற மனிதன்

விரைவில் அயர்ந்துபோகிறான்.

அவன்

தன்னிடம் இருப்பதைத்

தன்னிடமே வைத்துக்கொள்வது நல்லது.

- 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

x