தண்ணீரைக் காக்க வந்த தனி ஒருவன்!


கண் முன்னே தவறு நடந்தாலும் கண்டும் காணாமல் செல்பவர்களே அதிகம். ஆனால், வீணாகும் குடிநீரை தடுக்க தனி ஒருவனாகப் போராடியிருக்கிறார் தேவபாலன். அவரது போராட்டமே கடந்த வாரத்து வாட்ஸ் -  அப் வைரல்!

நெல்லையைச் சேர்ந்த தேவபாலன் பிழைப்புக்காக திருப்பூருக்கு வந்தவர். வேலைக்கு வந்துபோகும் சமயத்தில், அம்மாபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைப் பார்த்திருக்கிறார்.  அலட்சியம் செய்யாமல், அதிகாரிகளுக்கு போன் போட்டு உடைப்பை சரி செய்யும்படி கேட்டிருக்கிறார்.

அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றதும், தட்டி எழுதிவைத்துக் கொண்டு தர்ணாவில் அமர்ந்துவிட்டார். “ஒரு கிராமத்துக்கே 30 ஆயிரம் லிட்டர் குடிதண்ணியத்தான் அரசு கொடுக்குது. ஆனா இங்கே தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வீணாப் போகுது. இந்தத் தண்ணியக் கொண்டுபோய் ஒரு கிணத்துல விட்டோம்னா ஒரே நாள்ல கிணறு ரொம்பிடும்” என்று வாட்ஸ் - அப் பேட்டியில் பேசினார் தேவபாலன்!

நாமும் அவரது வீடியோவைப் பார்த்துவிட்டு அங்கு சென்றோம். இன்னும் குடிநீர் உடைப்பெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தேவபாலனை காணவில்லை.  “இங்கே மட்டுமில்ல. சுத்துவட்டாரத்துல பத்து இடங்களில் குடிநீர் குழாய் உடைஞ்சு தண்ணீர் ஓடிக்கிட்டிருக்கு. மறியல் செஞ்ச தேவபாலனை போலீஸ் விரட்டி விட்டுட்டாங்க. அவர் வீடு எங்கேன்னும் தெரியலை” என்கிறார் ஆட்டோ டிரைவர் வேல்.

x