ஈரம் காயறதுக்குள்ள ஒருசால் ஓட்டிடுங்க... பயிர் மேலாண்மையில் அசத்தும் அமைச்சர்


வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஓரடியம்புலம் கிராமம். ஆட்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டில், பெரிய கொண்டையுடைய இரண்டு சேவல்களும், ஒரு போந்தா கோழியும் ‘கெக்கெக்’ என குரல் கொடுத்தபடி சாவகாசமாக நடந்துகொண்டிருந்தன.

இடதுபுறத்தில் “ம்மா...” என்று குரல் எழுப்பிய பசுவிடம், “சும்மாயிரு கன்னுக்குட்டிய அவுத்துவுட்றேன்” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். “பட்டியில் 18 பசுமாடுக இருக்கு. வீட்டுக்குத் தேவைப்படறப்ப பாலைக் கறந்துகிட்டு மிச்சமெல்லாம் கன்னுக்குட்டிக்கு விட்டுட சொல்லியிருக்காங்க” என்கிறார் பணியாளர்.

கரைவேட்டி மனிதர்களின் கவலை, கோரிக்கைகளுக்குக் காதுகொடுத்துக் கொண்டிருக்கும் அந்த விஐபி, இடையிடையே பேசுவதைக் கவனித்தால், அது விவசாயம் சார்ந்த குரலாக இருக்கிறது. “அறுப்பு அறுத்திருக்கிற வயல்ல ஈரம் காயறதுக்குள்ள ஒருசால் ஓட்டிடுங்க, எள்ள தெளிச்சுட்டு மேல ஒரு சாலு ஓட்டிடுங்க” என்று டிராக்டர் டிரைவருக்கு வேலை கொடுக்கப்படுகிறது. வந்து நின்ற கீதாரியிடம், “நம்ம வயலு பூராத்துக்கும் கெடை கட்ட வேண்டியிருக்கும். அதுக்கு தகுந்தாமாரி பார்த்துக்குங்க” என்று வேண்டுகோள் வைக்கும் அந்த விஐபி, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

அனைவரையும் சந்தித்துவிட்டு, வாட்டாக்குடியில் உள்ள தனது வயலுக்குக் கிளம்புகையில் அமைச்சரின் தோற்றமே மாறிவிடுகிறது. கைலி, டீ சர்ட்டுடன் ஒரு கிராமத்து மனிதராகவே புறப்படுகிறார் அமைச்சர். வழியில் எதிர்ப்பட்ட விவசாயி ராமக்கட்டி ராமதாஸ், “உங்க புண்ணியத்துல இந்த வருசம் எட்டு மாவும் (ஒரு மா என்பது இரண்டு காணி பரப்பு) வெளைஞ்சிருச்சுங்க. நீங்க மட்டும் தண்ணி தரலாட்டி, என்னாயிருக்குமோ?” என்று நன்றி சொன்னார்.

x