தனிப்பாடல் திரட்டில் இராமச்சந்திர கவிராயர்
பாடல் ஒன்று. அதில் இரண்டு வரிகள் -
‘போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை’ என்று.
இதெல்லாம் பொன்னும் பொருளும் வேண்டிப் புலவர்கள் ரொம்பவே உயர்த்திப் பாடுவது. இன்றும் பதவியில் இருப்பவர்களை நாள்தோறும் போற்றிப் பாடிக் காரியம் சாதித்துக்கொள்ளும் கவிஞர்கள் உண்டு. அது மறமும் அல்ல... வீரமும் அல்ல... மதம்! தேர்தல்களின்போதும், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதும், பிற விழாக்களின்போதும் ஒட்டிக்கொள்கிற சுவரொட்டிகள் போன்றது இது.
ஓராண்டுக்கு முன்பு, கோயம்புத்தூர் மணிக்கூண்டு முகப்பில், மாநகராட்சி வாயிலின் எதிர் முகத்தில் இருபதடி நீளம், பதினைந்து அடி அகலத்தில் பதாகை ஒன்று பார்த்தேன்.
பதாகையின் திரண்ட கருத்து - ‘சென்னை மெரினா கடற்கரையில் கவிதையொன்று உறங்குகிறது. இனிமேல் சுனாமிகூட கரை தாண்டி வருவதற்கு அஞ்சும்’ என்பது. கவிதை எங்கேனும் உறங்குமாடா?!
முன்சொன்னது போல விதிவிலக்குகள் இருந்தாலும், தமிழ் இலக்கியங்கள் பேசும் வீரம் பெரும்பாலும் கூலிக்குப் புகழ்வது அல்ல!
கம்பராமாயணத்தில், பாலகாண்டத்தில், தாடகை வதைப் படலம்... முனிவர்களின் வேள்வித் தீயை அவித்துக் கெடுக்க நின்ற தாடகை மீது அம்பு எய்து, முனிவர்களைக் காக்கிறான் ராமன். அவனது வில்லின் வீரம் பேசுகிறது பாடல்.
‘சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம், கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே!’
கரிய செம்மல் ராமனது சுடுசரம், வெங்கணை, தீ அம்பு, கொல் வாளியானது, சொல்லின் வேகத்தை ஒத்தது. அது இருட்டை ஒத்த நிறமுடைய தாடகை மேல் எய்யப்பட்டபோது, வயிரக் குன்றான கல்போன்ற அவள் நெஞ்சில் பாய்ந்து, மார்பை ஊடுருவி மறுபுறம் சென்றது. எப்படி என்றால், கல்லாத புல்லருக்கு நல்லவர் சொன்ன அறிவுரை போல.
அதாவது இந்தக் காதில் புகுந்து அந்தக் காதில் வெளியேறியது போல! அந்தக் கால ராமனின் வீரத்துக்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. தற்கால அரசியல், சமூக, அதிகாரச் சூழலில், எந்தப் போர்க்களத்தையும் சந்தித்திராத ஊழல் பூச்சிகளைக்கூட ‘புலி ஏறு’ என்கிறோம்.
பட்டத்து யானையின் வேகத்தை முன்னிறுத்தி, மன்னரின் வீரத்தைச் சொன்ன பாடல்கள் உண்டு. போர் யானையின் பீடு நடையே, மன்னனின் வெற்றியைச் சொல்வ தாக இருந்திருக்கிறது.
சோழ மன்னன் ஒருவனது பட்டத்து யானை, தனது ஒரு காலை எடுத்துக் காஞ்சிபுரத்தில் வைக்கிறது, மறுகாலை உஜ்ஜைனியில் வைக்கிறது. அடுத்த அடியை ஈழத்தில் வைக்கிறது. அந்தப் பாடல் சொல்ல வருவது - எத்தனை வேகமாகக் கிள்ளிவளவன் வெற்றிகளைக் குவிக்கிறான் என்பது.
தமிழுக்கு எதிராகப் பேசுபவர் களுக்கு வேண்டுமானால், இளக்காரம் செய்வதற்கு இதுவோர் எடுத்துக்காட்டாக இருக்கலாம். ‘என்னய்யா கதை அளக்கிறான்’ என்பார்கள். ஆனால் அவர்களே, ‘என் நாயகன் நடந்தால் இமயம் குலுங்கும். அவன் நிமிர்ந்தால் வானம் இடிக்கும். சிரித்தால் கடல் அலை எழும்பிச் சத்தமிடும்’ என்பது போன்ற சினிமாப் பாடல்களை வாய்பிளந்து கேட்பார்கள்.
சரி... அந்த யானைப் பாடலைப் பார்ப்போம்...
‘கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா, பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே, நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு!’
இந்த முத்தொள்ளாயிரம் பாடலை அனுபவித்து வாசிக்கும்போது, களிறு ஒரு காலை நம் தலைமீதும் வைத்து விடுமோ என்ற அளவுக்கு அச்சம் தோன்றும். கச்சி என்றால் காஞ்சி, தத்து நீர்த் தண் உஞ்சை என்றால் தண்ணீர் தேங்கி நிற்கும் குளிர்ந்த உஜ்ஜைனி, பிற்றையும் என்றால் மேலும், கோழி என்றால் உறையூர். ‘பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ எனும் பாடலில் வரும் பிற்றையின் பொருள்தான் இந்தப் பாடலில் வரும் பிற்றைக்கும்.
புறநானூறு வேறொரு காட்சியைத் தருகிறது. அரிசில்கிழார் பாடல்... போர்க்களத்தில் வீரம் துடிக்க வந்து நிற்கும் இளைய வீரன் ஒருவனின் திறம் கண்டு வியந்துபோகும் பகை வீரன் ஒருவன், ‘தோல் தா, தோல் தா’ என்கிறான். இங்கு தோல் என அவன் கேட்பது, குளிருக்கு இதமாகப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்க தோல் போர்வை அல்ல. தோல் என்றால் கேடயம் என்று
பொருள். தோல்களைச் சேர்த்து அடுக்கிக் கோத்துத் தைத்து, அதனை ஈட்டி துளைக்காதவாறு, அம்பு தைக்காதவாறு, வாள் வெட்டாதவாறு அமைத்துக் கொண்ட கேடயம்.
ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தில் இறுதிக் காட்சியில் அரசன், ‘எ ஹார்ஸ், எ ஹார்ஸ், எ ஹார்ஸ்’ என்று இரங்கிக் கேட்பதைப் போன்று, இந்தப் புற நானுற்றுப் பகைவீரன் கேட்கிறான். அவனிடம் புலவர் கேட்கிறார், “ ‘கேடயம் தா, கேடயம் தா’ என்கிறாயே. கேடயத்துடன் சிறு கற்பாறையின் பின்னால் போய் ஒளிந்துகொண்டாலும், இன்று நீ தப்பிப் பிழைத்து விடுவாயா?” என்று.
ஏன் அப்படிப் பேசுகிறார் புலவர்? அவரே சொல்கிறார், “இன்று உன் முன்னால் போருக்கு வந்து நிற்கும் இந்த இளைய வீரன் யார் தெரியுமா? நேற்றுப் பகலில் நீ கொன்றவனின் தம்பி. அகலில் போடப்பட்ட குன்றிமணி போல, அவன் கண்கள் உன்னைத் தேடுகின்றன.
பெரிய ஊரில் அண்மையில் வடித்த மதுவைப் பெறுவதற்கு, ஒரு வீட்டினுள் புகுந்து துழாவுவதைப் போல, உன்னைத் தேடுகிறான். புலவர் சொல்ல விழைவது, முன் தினம் பகைவீரனால் கொல்லப்பட்ட தனது அண்ணனின் வீரச் சாவுக்குப் பழிதீர்க்க வந்திருக்கிறான் அவனது தம்பி. கேடயத்துடன் சிறு பாறையின் பின்னால் போய் நின்று தன்னைக் காத்துக்கொள்ள முயன்றாலும், பகைவீரன் உயிர் பிழைக்க வழியில்லை என்று.
இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தைய அந்தத் தமிழ் பாடல் இது...
‘தோல் தா, தோல் தா’ என்றி, தோலொடு
துறுகல் மறையிலும் உய்குவாய் போலாய்;
நெடுநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேடுமால் நின்னே!’
அரிசில் கிழார் நிகழ்த்தும் அற்புதம் இந்தப் புறநானூற்றுப் பாடல். இந்தப் பாடலை அனுபவிப்பதற் காகவே இந்த வாழ்நாள் எனக்குக் கிடைத்தது போலும்!
போர்க்களத்தில் வீரனுக்குச் சொல்லப்படுகிற ஒரு திருக்குறள் - ‘படைச் செருக்கு’ அதிகாரத்தில்...
‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.’
தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்கு இப்படி உரை எழுதுகிறார் -
‘தனக்காகக் கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்தச் சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது.’
நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான கோடிகளைப் பாதுகாக்க அல்ல என்பது.
(இன்னும் பாடுவோம்...)
ஓவியம்: ஷண்முகவேல்