இதுவும் இனப்படுகொலையே!


உலகின் கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் ‘சூடான்’. கடந்த வாரம் இறந்த சூடானுடன் சேர்ந்து அந்த இனமே முடிவுக்கு வந்துவிட்டது. சூடானின் மகள் நஜின், பேத்தி ஃபது இரண்டும்தான் மிச்சமிருப்பவை என்றாலும், இனப்பெருக்கத்துக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்த  இனத்தின் முடிவு கிட்டத்தட்ட  தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

செயற்கை கருத்தரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றாலும் அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஒன்றரை கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் தொடர்ந்துவந்த ஓரினம் மனிதர்களின் வேட்கையால் முற்றுபெற்றுவிட்டது.

கடுமையாக உடல்நலன் குன்றியிருந்த கடைசிக் காலத்திலும்கூட துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் சூடானைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. இது எவ்வளவு ஈவிரக்கமற்ற சூழலில் மனிதர்களைத் தவிர்த்த உயிரனங்கள்  வசிக்க வேண்டியிருக்கிறது என்பதன் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது!

x